நாம் மௌனமாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும்:ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மன்னார் ஆயர்
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் நாம் மௌனமாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும். சகல தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மிகவும் நிதானமான அரசியல்வாதி. அவருடைய ஆற்றல் தீர்க்கமான பேச்சு ஆகியவை எமக்கும் மகிழ்ச்சி தருகிறது என மன்னார் ஆயர் ராஜப்பு ஜோசப் தெரிவத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,,,,,,,,
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் நாம் மௌனமாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும். சகல தரப்பினருடனும் கலந்து ஆலோசித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மிகவும் நிதானமான அரசியல்வாதி. அவருடைய ஆற்றல் தீர்க்கமான பேச்சு ஆகியவை எமக்கும் மகிழ்ச்சி தருகிறது. அந்தரப்பட்டு அவசரப்பட்டு கிடங்கில் விழமாட்டார். நிதானமாக நடக்கும் அவர் தலைமைத்துவத்தைப் பின்பற்றி நம்முடைய அரசியல் தலைவர்கள் புத்தி ஜீவிகள் பேச்சாளர்கள் கருத்தாளர்கள் தமது கருத்தை வெளியிட வேண்டும் நடக்க வேண்டும்.
இன்றைய அரசியல் சூழ்நிலையை தமிழ் மக்கள் மிகவும் கவனத்துடனும் தூரப்பார்வையுடனும் பயன்படுத்த வேண்டிய காலத்தில் உள்ளோம். பேரினவாதிகள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக தமிழர் பிரச்சினையை ஒரு துரும்பாக எப்பொழுதும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இப்பொழுது புலிகளுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் இணைந்து தமிழீழத்தை அமைக்க முயற்சிக்கிறார்கள் எதிரணியினர் எனப் பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு எதிரணி வேட்பாளரை ஒழித்துக்கட்டுவதற்கு தமிழ் மக்களின் பிரச்சினையை தமக்குரிய ஆயுதமாக கையில் எடுத்துள்ளனர்.
நாம் தமிழ் ஈழத்தையோ பிரிவினையையோ கோரவில்லை. நாம் கேட்பதெல்லாம் நியாயமான அரசியல்தீர்வு. எங்களுக்கு சலுகை அரசியல் வேண்டாம். உரிமை அரசியலைத் தாருங்கள் என்றே கேட்கிறோம். வடகிழக்கில் நாம் சுதந்திரமாகவும் சுய நிர்ணய உரிமையுடனும் வாழ வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். தென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்க்க விருப்பமில்லாதவர்களாகவே காணப்படுகிறார்கள். அதற்காக தமிழீழம் என்ற மாயையை உருவாக்க பார்க்கிறார்கள்.
தமிழ் மக்களுக்கு எத்தகைய உரிமை வழங்கப்பட வேண்டும்? எப்படியான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்? அவர்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள் இழப்புகளுக்குரிய பரிகாரமென்ன? என்பதை உணர்ந்து நியாயமான தீர்ப்பை வழங்க யார் தயாராக இருக்கிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்வதே நிதானமான முடிவாக இருக்கும். அதுவே மக்களின் எதிர்பார்ப்புமாகும். எடுக்கும் தீர்மானம் மீண்டும் படுகுழியில் தள்ளுவதாக இருக்கக் கூடாது. எனவே ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு அத்தலைமையின் கீழ் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டும். இன்றைய சூழலில் மக்களே தீர்மானம் எடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள். அவர்கள் தீர்க்கமாகவும் சரியான முடிவுகளையும் எடுப்பார்கள் என நாம் நம்பலாம். அதுவரை மௌனம் சாதிப்பதே சிறந்த அரசியல் தந்திரோபாயமாக இருக்கும் என்றார்.
நாம் மௌனமாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும்:ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மன்னார் ஆயர்
Reviewed by NEWMANNAR
on
November 30, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 30, 2014
Rating:


No comments:
Post a Comment