சீனர்களை மணந்த வியட்நாமியப் பெண்கள் மாயம்
சீனாவின் வடபகுதியில், ஹெபேய் என்னும் மாகாணத்தில் சீனர்களைத் திருமணம் செய்துகொண்ட வியட்நாமியப் பெண்கள் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள சீன ஆண்களை திருமணம் செய்த இந்தப் பெண்களை சீனப் பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.
இந்தப் பெண்களை சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவிய, பெண் கல்யாணத் தரகரையும் காணவில்லை என்று கூறப்படுகின்றது.
திருமண ஏற்பாடுகளுக்காக குறித்த தரகர் ஒவ்வொரு பெண்ணுக்கும் 16,000 டொலர்கள் வரை தரகுப் பணம் பெற்றிருக்கிறார்.
இந்தப் பெண்கள் ஒட்டுமொத்தமாக காணாமற்போனது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று உள்ளூர் மாகாண அதிகாரி ஒருவர் செய்தி ஊடகங்களுக்குக் குறிப்பிட்டுள்ளார்.
சீன ஆண்கள், சீனப் பெண்களை திருமணம் செய்வதாயின் அவர்களுக்கு நிறைய பணத்தை கொடுத்தாக வேண்டுமாம். அதனால், பல வறிய ஆண்கள் வெளிநாடுகளில் இருந்து பெண்களை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.
சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் காரணமாக சமூகத்தில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அங்கு பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கே சமூகத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் அங்கே தற்போது பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இந்நிலையில், வியட்நாமியப் பெண்களைப் பணம் கொடுத்து சீனர்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். ‘
ஆனால், அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிச் சென்று விடுவதாக முறைப்பாடுகள் செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பி.பி.சி
சீனர்களை மணந்த வியட்நாமியப் பெண்கள் மாயம்
Reviewed by NEWMANNAR
on
December 13, 2014
Rating:

No comments:
Post a Comment