அண்மைய செய்திகள்

recent
-

இலஞ்சத்திற்கெதிரான சர்வதேச தினம்---டிசம்பர் 09

இலஞ்ச மற்றும் ஊழல் செயற்பாடுகள் .இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டவை அல்ல. மனித சமூகத்தின் ஆரம்ப கட்ட நாகரீக வளர்ச்சியின் போதே உருப்பெற ஆரம்பித்துவிட்டன. இவற்றை துல்லியமாக அடையாளம் காண்பது இலகுவானதல்ல. ஏனெனில் இவற்றின் அளவும் வடிவமும் என்றும் மாறி வருவன. இதில் இலஞ்சம் என்பது சிறிய அளவானது என்றும் ஊழல் என்பது பெரிய பரப்பளவை கொண்டது எனவும் வகையிடப்படுகின்றது.


இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகள் என்பது அதிகாரத்திலிருப்பவர்கள் தமது அல்லது தம்மை சார்ந்தோரின் நலனிற்காக தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து பெற்றுக்கொள்ளும் அனைத்து பிரதியுபகாரங்களையும் உள்ளடக்கும். இதில் செய்யக்கூடாததை செய்ததை (Commission) மற்றும் செய்ய வேண்டியதை செய்யாது விட்டமை (Omission) என்பன உள்ளடங்கும். இவை பணம் பொருட்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்குவதுடன் குறிப்பாக பாலியல் சேவைகளை பிரதிபலனாக கோரலையும் இலஞ்சம் மற்றும் ஊழல் எனும் வகுதிக்குள் உள்ளடக்கும். இது தனியார் துறை முதல் அரசதுறை வரை சாதாரண துப்புரவு தொழிலாளியிடமிருந்து நிறைவேற்று தர அதிகாரி வரை விரிவடைந்து செல்கின்றது.


இலஞ்சம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை நேரடியாகவே பாதிக்கின்றது. இது அவர்களது அடிப்படை மனித உரிமையான வாக்களிப்பதற்கான உரிமையை பாதிக்கின்றது அதன் மூலம் ஜனநாயகத்தை இல்லாததாக்குகின்றது. சட்ட ஆட்சியை சீர்குலைத்து சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துகின்றது.. கல்வி உரிமை மற்றும் சுகாதாரத்திற்கான உரிமை என்பவற்றை இல்லாததாக்கி இறுதியில் புவியில் மனித இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றது. மேலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளைப்பொறுத்த மட்டில் அந்நிய முதலீட்டு உட்பாய்ச்சலை பெருமளவு பாதிக்கின்றது. இதன் பொது விளைவாக ஏற்கனவே வறுமைப்பட்ட தேசங்களில் வேலையில்லா பிரச்சனை ஓர் சமூக சிக்கலாக உருவாக வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றது. மேலும் இது தனி மனித உரிமை மீறல் எனவும் பொதுவாக காட்டப்படுகின்றது.

எனவே இதன் தாக்கங்களை கருத்திற்கொண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 30-08-2003 இல் இலஞ்சத்திற்கெதிரான பொருந்தணை (United Nations Convention Against Corruption) ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியதுடன் மார்கழி 9ஆம் திகதியை இலஞ்ச ஊழலுக்கு எதிரான தினமாகவும் பிரகடனப்படுத்தியிருந்தது.இப்பொருத்தனையின் பிரதியீட்டு வாசகம் பின்வருமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தென் அங்கத்துவ நாடுகளை செயற்பட எதிர்பார்க்கின்றது.

“சட்ட ஆட்சி, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி என்பவற்றை வெளித்தள்ளும் இலஞ்சத்தை மனித சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தகு தன்மை என்பவற்றை பாதிக்கும் ஓர் கருத்தமைவான பிரச்சினையாக பார்க்க வேண்டும்.”

இப்பொருத்தனையை இலங்கை அரசு 15-03-2004 இல் உடன்பட்டு கைச்சாத்திட்டதுடன் 31-03-2004 அன்று ஏற்று அங்கீகரித்துள்ளது. எனவே இப்பொருத்தனையின் பொருட்டு இலங்கை அரசிற்கு உரிய பொறுப்புக்கள்இ கடமைகள் மற்றும் கணக்களி தகமை என்பன சட்டரீதியாக சர்வதேசத்தின் முன்னால் பிணிக்கப்படக்கூடியன.

டிரான்பரன்ஸ்சி இன்டர்நஷனல் (Transparency International) எனும் அரசு சாரா சர்வதேச நிறுவன அறிக்கையின் படி இலஞ்ச ஊழல் குறிகாட்டிப்பட்டியலில் இலங்கை 2014ஆம் ஆண்டு 85 ஆவது இடத்தில் உள்ளது. இதில் ஆகக்குறைந்த இலஞ்சம் பெறும் நாடாக முதல் இடத்தில் டென்மார்க் உள்ளதுடன் இறுதியில் மிக  மோசமாக இலஞ்ச செயற்பாடுகள் பாரியளவில் இடம் பெறும் நாடாக 174 ஆவது இடத்தில் சோமாலியாவும் உள்ளது. எனவே இவ்வறிக்கையின் படி இலங்கை 85 நாடுகளை விட உலகில் அதிகளவான இலஞ்ச மற்றும் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இந்நிறுவனம் இல்ஙகையில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் 18 சதவீதமான இளைஞர்கள் தாம் மோட்டார் போக்குவரத்து குற்றங்களில் இருந்து தப்பிக்க இலஞ்சத்தை ஓர் ஆயுதமாக பாவித்ததை ஒப்புக்கொண்டனர். ஆயினும் இத்தொகை உண்மையில் குறிப்பிட்டதை விட அதிகமாகும்.

இலங்கையில் இலஞ்ச ஊழலில் அதிகளவில் அடையாளம் காணப்படும் துறைகளாக பொலிஸ் திணைக்களம் கல்வி நிறுவனங்கள் இலங்கை மின்சார சபை  வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றை குறிப்பிடலாம். விசாரணைகளை நடாத்தும் பொலிசார் நேர்மையாக நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை நீதியின் பால் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ச்சியான மின் கட்டண அதிகரிப்பிற்கு மின்சார சபையில் காணப்படும் இலஞ்ச ஊழல் செயற்பாடுகள் காரணம் என்பது தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வந்ததை அனைவரும் அறிந்ததே. அத்தோடு சமீபமாக உள்நாட்டு யுத்தத்தின் முடிவின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளில் முதன்மைப்படுத்தி காட்டப்படுவது வீதி அபிவிருத்தியே அதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பல முறைகேடுகளை செய்வதாகவும் அடிக்கடி முறைப்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

 முதலாவது அதிவேக பாதையில் ஏற்பட்ட வாகன விபத்தினை தொடர்ந்து ஒரு குடிமகன்  இலங்கை உயர்நீதிமன்றில் அரசாங்கத்திற்கெதிராக அதிவேக பாதை நியமமான தரங்கை பேணாது அமைக்கப்பட்டுள்ளது என முறையிட்டதையும் அது நீதி விசாரணைகளின் பின்னர் தவறு என நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டதையும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

இலங்கையின் உள்நாட்டு சட்டப்பொறிமுறை என நோக்கும் போது முதலிடம் பெறுவது அரசியல் அமைப்பே ஆகும். அதன் உறுப்புரை 12 ஆனது அனைத்து மக்கட்கும் ஆன சமத்துவ உரிமையை வலியுறுத்துகின்றது. இலஞ்ச செயற்பாடுகள் காரணமாக தகுதியாக ஒருவர் தனக்காக வாய்ப்பை இழக்கும் போது அவர் இவ்வுறுப்புரையின் கீழ் தனக்கான நிவாரணத்தை உயர்நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இவ்வுறுப்புரை அரச செயற்பாடுகட்கு மட்டுமே ஏற்புடையது தனியார் சமத்துவ மீறல்கட்கு அவ்வுறுப்புரை பாதுகாப்பை வழங்கவில்லை. மேலும் உறுப்புரை 28(1) ஆனது இலங்கையின் பொதுச்சொத்துக்களை பாதுகாத்தலும் அவை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் போது அதற்கெதிராகச் செயற்படுதல் இலங்கை குடிமக்கள் அனைவரினதும் தார்மீக பொறுப்பு என்பதையும் வலியுறுத்துகின்றது.

அடுத்தாக இலக்கம் 19 இன் 1994 ஆம் ஆண்டு இலஞ்ச மற்றும் ஊழல் புலன்விசாரணை ஆணைக்குழுச்சட்டம் (Commission to investigate Allegations of Bribery or Corruption Act No 19 of 1994) முக்கியமான ஒன்றாகும். இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஆனது இலஞ்ச ஊழல் செயற்பாடுகட்கெதிரான விசாரணைகளை நடாத்த தன்னார்வ தகவலின் பெயரிலோ அல்லது முறைப்பாட்டின் அடிப்டையிலோ அதிகாரம் கொண்டது. அத்துடன் நீதிமன்ற வழக்காடல் செயற்பாடுகளிலும் இவ்வாணைக்குழு ஓர் தரப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுடன் ஆணைக்குழுவின் வேண்டுதல்களை நிராகரிப்பது நீதிமன்ற அவமதிப்பிற்கு ஒப்பான ஓர் குற்றமாக கருதப்படும். இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 வருடங்கட்கு மேற்படாத கடூழிய சிறைத்தண்டனையும் ரூ.5000 ற்கு மேற்படாத தண்டப்பணமும் விதிக்கப்டும்.

 இத்தண்டனைகட்கு மேலதிகமாக இலஞ்சமாக பெற்ற தொகையினையும் நீதிமன்றில் தண்டப்பணமாக அறிவிக்கப்டும். அத்தோடு அவ்வதிகாரியின் சேவை நிறுத்தப்படும் என்பதுடன் அவருக்கு சட்டரீதியாக உரித்தாகக்ககூடிய ஓய்வூதியம் மற்றும் அனைத்து பணி ஓய்வு நன்மைகளும் இல்லாததாக்கப்படும்.


இதை விடுத்து அநேக சட்டங்கள் இலஞ்ச ஊழல் தொடர்பில் பொருத்தப்பாடுடையன.

மோசடி தடுப்பு கட்டளைச் சட்டம் (Prevention of Fraud Ordinance No 17 of 1840)

இச்சட்டம் காலத்தால் முந்தியதும் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட சட்டமுமாகும். இது போலியான ஆவண தயாரிப்பு மற்றும் சொத்துக்களுடன் தொடர்புடைய மோசடிகளை கையாள்வதை நோக்காக கொண்டது. இதில் வகையிடப்பட்ட சில குற்றங்கட்கு நீமன்ற பிடியாணை இன்றி பொலிசாருக்கு குற்றவாளிகளை கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் சட்டம் (Bribery Act No 11 of 1954)

இச்சட்டமே இலங்கை சட்டத்தளத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்குப் பிரத்தியேகமாகப் பிறப்பெடுத்த சட்டமாகும். இச்சட்டம் குறிப்பிட்ட குற்றங்களின் வரைவிலக்கணத்தை உருவகப்படுத்துவதுடன் அதன் பரப்பெல்லையையும் விளக்குகின்றது. இச்சட்டத்தின் கீழும் சிலவகை குற்றங்கள் பிடியாணை இன்றி கைது செய்யும் அதிகாரத்தைப் பொலிசாருக்கு வழங்குகின்றது.

சொத்துக்கள் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் சட்டம் (Declaration of Assets and Liability Law No 01 of 1975)

இச்சட்டம் பொதுவாக அரசியல் வாதிகளையும் அரச உயர் வருமானம் பெறும் அதிகாரிகளையும் தனது பரம்பெல்லையினுள் உள்ளடக்கிய சட்டமாகும். இச்சட்டத்தின் படி உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்கட்கு வேட்பாளராக விரும்புவோரும், தெரிவு செய்யப்பட்டோரும் அரச நிறைவேற்று செயற்குழு தர உத்தியோகத்தர்களும் தமது முழுச் சொத்துப் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்பு ஐந்து வருடங்கட்கு ஒரு தடைவ அவ்வறிக்கை இயற்றைப்படுத்தப்பட வேண்டும். இச்சட்டத்தின் கீழ் போலியான விபரத்தை வெளிப்படுத்தல் மற்றும் போலியான விபரத்தை வழங்கல் என்பன தண்டனைக்கு உரிய குற்றங்களாகும்.

பொதுச் சொத்துக்கள் தொடர்பான குற்றங்கள் சட்டம் (Offences against Public Property Act No 12 of 1982)

இச்சட்டம் அரச உடைமை சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடை செய்யும் முகமாக அறிமுகம் செய்யப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் அரச நிதியை சுயலாபத்திற்காகக் கையாடல் செய்வது மற்றும் அரச சொத்துக்களைச் சுயலாபத்திற்காக முறை தவறி பயன்படுத்துவது என்பன தண்டனைக்குரிய குற்றங்களாக வகையிடப்பட்டுள்ளன.

நிதி மோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act No 5 of 2005)

இச்சட்டம் மிக அண்மையில் வெளியானதோடு, இலத்திரனியல் யுகத்தின் வேகத்தோடு சட்டத்தைச் சமாந்தரமாக்க எடுத்த முயற்சி என்பதற்கும் எடுத்துக் காட்டாகும். இச்சட்டம் சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தை (கறுப்புப் பணம்) பரிமாற்றங்கட்கு (வெள்ளைப்பணமாக மாற்றல்) உட்படுத்துவதைத் தடை செய்கின்றது.

மேற்குறிப்பிட்ட சட்ட ஏற்பாடுகள் காணப்படினும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் (Right to Information)) இல்லாமையும் சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லாமையும் சட்டதளத்தை பொறுத்த மட்டில் இலஞ்சத்திற்கெதிரான போராட்டத்தில் ஓர் தளர்வான நிலையாகும். இருப்பினும் சட்ட ஏற்பாடுகள் எவ்வளவு இறுக்கமாக இருந்த போதிலும் சுகந்திரமான நீதித்துறை மற்றும் விழிப்புணர்வுள்ள மக்கள் செயற்பாடுகள் இன்றி இலஞ்ச வலையை அறுத்தெறிவது சாத்தியமாகாது. இதற்கு உதாரணமாக அண்மையில் இந்தியாவின் தமிழ்நாட்டு மாநில முதல்வர் இலஞ்ச நடவடிக்கைகளின் பெயரில் நீதிமன்றால் தண்டிக்கப்பட்டது காட்டப்பட கூடியது.

எனவே தனி மனிதனில் இருந்து வெளியாகி சமூகத்தை பாதிப்பிற்குள்ளாக்கி அதன் வழியாக மறுசுழற்சி சுற்றோட்டமாக மீளவும் தனி மனிதனையே பாதிப்பிற்குள்ளாக்கும் இவ்வாபத்தை பற்றி அனைவரும் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். அவ்விழிப்புணர்வே அரசாங்கங்களை நெறிப்படுத்தி இலஞ்ச ஊழலை முற்றாக ஒழிக்க உறுதுணை புரியும்.

அ .அர்ஜுன் 
L.L.B.(Hons)

இலஞ்சத்திற்கெதிரான சர்வதேச தினம்---டிசம்பர் 09 Reviewed by NEWMANNAR on December 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.