அண்மைய செய்திகள்

recent
-

மண்டேலா வாழ்விலிருந்து மஹிந்த பாடம் கற்க வேண்டும்: மனோ கணேசன்

நெல்சன் மண்டேலா ஒரு மாமனிதர் என்பதற்கு ஏனையவற்றை விட இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சுதந்திர போரில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், தோல்வியுற்ற வெள்ளையர்களை அவர் பழிவாங்கவில்லை. இரண்டு, ஒருமுறைக்கு மேல் ஜனாதிபதி பதவியில் இருக்கும்படி நாட்டு மக்களும் கட்சியும் எதிர்பார்த்தும் கூட அவர் அதை மறுத்து ஓய்வு பெற்றார்.

இங்கே, போரில் புலிகளுக்கு எதிராக பெற்ற வெற்றி, தமிழ் மக்களுக்கு எதிராக பெற்ற வெற்றியாக கணிக்கப்படுகிறது. அதைவிட அது இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது. அடுத்தது, ஆயுட்காலம் முழுக்க ஜனாதிபதி பதவியில், ஒருவரையும் அவரை தொடர்ந்து அவர் குடும்பத்தையும் வைத்திருக்க முயற்சி நடக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு தமிழ் சங்கத்தில் மேல்மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் ஏற்பாட்டில் ஜனநாயக இளைஞர் இணையம் நடத்திய நெல்சன் மண்டேலா முதலாம் ஆண்டு நினைவுரை நிகழ்வில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

மண்டேலாவின் வாழ்வை மூன்று பிரதான பாகங்களாக பார்க்கலாம். ஒன்று, சாத்வீக போராளியாக அடிமைப்பட்டு கிடந்த தென்னாபிரிக்க கறுப்பு இனத்தவரை ஊர் ஊராக சென்று, உரையாடி, தட்டி எழுப்பியது. அடுத்தது, சாத்வீக மொழியை காது கொடுத்து கேட்க மறுத்த வெள்ளை நிறவெறி அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி கைதாகி, 26 வருடங்கள் சிறையில் வாழ்வை கழித்தது. அப்போதும்கூட தான் ஆயுதம் தூக்கியது தவறு என ஏற்றுக்கொண்டு அவர் சிறையில் இருந்து விடுதலை பெறும் சந்தர்ப்பத்தை வெள்ளை அரசு தந்தபோது அவர் அதை மறுத்துவிட்டார். ஆயுதம் தூக்க தாம் மனநோயாளிகள் அல்ல. ஆயுதம் தூக்கும் நிலைமையை, ஒடுக்குமுறையாளன்தான் உருவாக்குகின்றான் என அவர் திடமாக நம்பினார்.

மூன்றாவது, சிறையில் இருந்து வெளிவந்து, வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பை ஏற்று, பதவிக்கு வந்ததும், தன்னை துன்புறுத்திய வெள்ளை இனத்தவரை பழிவாங்க மறுத்தது. நிறவெறி அரசு தலைவரையே தனது உப ஜனாதிபதியாக நியமித்து, ஓர் உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கு அடிகோலியது. அதுமட்டுமல்ல, அவர் விரும்பியிருந்தால், அவரது ஆயுட்காலம் பூராகவும் அவர் தனது ஜனாதிபதி பதவியில் இருந்திருக்கலாம் என்ற சூழல் நிலவிய போதும், அதை மறுத்து, ஒரேமுறையுடன் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்று, தன் சொந்த கிராமத்துக்கு திரும்பியது.

ஆகவேதான் சொல்கிறேன், நாம் இங்கே நெல்சன் மண்டேலாவின் நினைவு தினம் அனுஷ்டிக்கின்றோம். அவர் விட்டு சென்ற படிப்பினைகளை கவனத்தில் கொள்கிறோம். ஆனால், அவை எங்களை விட இந்த நாட்டை ஆளும் அரசாங்கத்துக்கு தான் கட்டாயமாக தேவைப்படுகிறது.

இன்று நமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், தனது முதல் உரையில் மண்டேலா பற்றியும் மகாத்மா காந்தி பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மைத்திரி ஒரு மண்டேலா அல்ல. மகாத்மா காந்தியும் அல்ல. உண்மையில் இந்த மாமனிதர்களின் வாழ்க்கை கற்று தந்த பாடங்களை இவர் எந்த அளவு கடைப்பிடிக்கப்போகின்றார் என்பதை எதிர்காலம் தான் காட்ட வேண்டும். இவரது இத்தகைய பேச்சை கேட்டு, நம்பி நாம் இவரை ஆதரிக்கவில்லை. இன்று இருக்கும் சூழலில் இருந்து கொஞ்சம் முன்னோக்கி நகரவே நாம் இந்த ராஜதந்திர நகர்வை மேற்கொள்கிறோம். அதைவிட இந்த பொது எதிரணி முன்னெடுப்பில் வேறு விஷேசம் இல்லை.
மண்டேலா வாழ்விலிருந்து மஹிந்த பாடம் கற்க வேண்டும்: மனோ கணேசன் Reviewed by NEWMANNAR on December 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.