அண்மைய செய்திகள்

recent
-

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பெய்யும் கனத்த மழையினால் இயல்பு நிலை கடுமையாக பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பெய்யும் கனத்த மழையினால் இரு மாவட்டங் களிலும் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. (சா/த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இந்த மழை, வெள்ளத்தினால் பல்வேறு அசெளகரியங் களுக்குள்ளாகியுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பாணம வீதி பொத்துவில் லபுகல ஊடான சியம்பலாண்டுவ வீதி, அக்கரைப் பற்று சாகாமம் வீதிகள், மாவடிப்பள்ளி தாம்போதிகள் என்பனவற்றுக்கு மேலாக வெள்ள நீர் பாய்கின்றது. இதனால் இந்த வீதிகள் ஊடான போக்குவரத்துக்கள் பாதிப்புற்றுள்ளன.

அக்கரைப்பற்றின் சகல வீதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆலையடிவேம்பின் வாச்சிக்குடா, கருங்கொடித் தீவுக்குளப்பகுதி, தீவுக்காலை, கோளாவில் நாவற்காடு உட்பட அனைத்து பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் குடியிருப்பு மனைகள் பலவற்றுக்குள் வெள்ள நீர் தேங்கி நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

திருக்கோவில் பிரதேசத்தில் சின்னத் தோட்டம், விநாயகபுரம், காயத்திரி கிராமம், முனையூர் போன்ற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக பிரதான கிராம சேவை உத்தியோகத்தர் கண, இராசரெத்தினம் தெரிவித்தார்.

நேற்று (08) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அக்கரைப்பற்றில் 169 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், இலுக்குச்சேனையில் 72.2, சாகாமத்தில் 64.5. தீகவாபியில் 62, அம்பாறையில் 53.3, பதியதலாவயில் 33 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலையத்தின் வானிலை உத்தியோகத்தர் ரீ சதானந்தன் தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேசத்தில் தொடர்ச் சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஆரைப்பற்றை மத்திய வடிகானின் இருமருகிலும் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந் துள்ளனர்.

இவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கும் பணிகளை நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பி னர்கள் சிலர் சமூக சேவைகள் அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.பி.எம். பாயிஸ் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா அப்துல் ஜலீல், உதவி பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் சிரேஷ்ட கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் அஜ்வத் அடங்கலான குழுவினர் பார்வையிட்டதுடன். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

ஒலுவில் பிரதேசத்தில்க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெறவிருந்த பாடசாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொண் டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார். ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையின் ஆண்கள் விடுதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளன தாழ் நிலப்பகுதிகள் மட்டும் அல்லாது ஒலுவில் அதிகமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையின் பிரதான மண்டபம் இருக்கும் ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயம் வெள்ள நீரினால் நிரம்பி காணப்படுகின்றன. மண்டபத்திலுள்ளும் நீர் புகுந்துள் ளன.

அக்கரைப்பற்றில் 169 மி.லீ. மழைஅதிகூடிய மழை வீழ்ச்சியினால் வானம் இருண்டு காணப்படுவதுடன் வீதி போக்குவரத்தில் ஈடுபட்டு உள்ள வாகனங்கள் ஒளியூட்டி செல்லவதனையும் காணக்கூடியதாக உள்ளது.

அத்தோடு வீதிகளின் மேலால் நீர் பாய்ந்து செல்வதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளதுடன் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் சூழப்பட்டு காட்சி அளிக்கின்றன.

நெற் காணிகள் வெள்ளத்தில் சேனநாயக்க சமுத்திரத்தில் நீர் மட்டம் உயர்வு அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான அடைமழை காரணமாக மாவட்டத்தின் தாழ்ந்த பகுதிகள் பலவும் பல நூற்றுக்காணிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் திரு. எச்.எம். நிகார சிறிவர்தன தெரிவித்தார். எனினும் மாவடிப்பள்ளி, நிந்தவூர், அக்கரைப்பற்று, இறக்காமம், வரிப்பத்தான்சேனை ஆகிய பிரதேசங்களின் நெற் காணிகள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது பெய்து வரும் கடும் மழையினால், இங்கினி யாகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டமும் 72.05 அடியைத் தாண்டியுள்ளதுடன் பதுளை, மொனகராகல பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்யுமாயின் சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் மேலும் அதிகரிக் கலாமெனவும் குறிப்பிட்டார்.

இதுவொரு புறமிருக்க அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் இறக்காமத்திலும் மாவட்டிப்பள்ளி தாம்போதி ஆகிய இடங்களிலும் நேற்று நண்பகல் வரை போக்குவரத்திலும் பல தடைகள் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு வெள்ளம்
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையினால் வெள்ள அபாயம் ஏற்படும் நிலைமை தோன் றியுள்ளது. அடைமழை காரணமாக காத்தான்குடி, ஆரையம்பதி, மண்முனை வடக்கு, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை (08) காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியா லயங்களில் பதிவாகிய மழை வீழ்ச்சியைப் பார்க்கும்போது மட்டக்களப்பு நகரில் 17.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரி ஆற்றுப் பகுதியில் 65.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பிரதேசத்தில் 19.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பிரதேசத்தில் 7.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 53.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 22.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 22.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி கே. சூரியகுமாரன் நேற்று கூறினார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக் குளம் 29 அடி நீர் மட்டமும், வாகனேரிக்குளம் 19 அடி 2 இஞ்சி நீர் மட்டமும், தும்பங்கேணிக் குளம் 13 அடி 9 இஞ்சி மட்டமும், கட்டு முறிவுக்குளம் 12 அடி நீர் மட்டமும், உறுகாமக் குளம் 16 அடி ஒரு இஞ்சி நீர் மட்டமும், நவகிரிக்குளம் 31 அடி 4 இஞ்சி நீர் மட்டமும், வெலிக்காக்கண்டிக் குளம் 15 அடி 7 இஞ்சி நீர் மட்டமும், வட முனைக்குளம் 12 அடி 11 இஞ்சிநீர் மட்டமும் உயர்ந்து காணப்படுவதாக இக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித் துள்ளனர்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பெய்யும் கனத்த மழையினால் இயல்பு நிலை கடுமையாக பாதிப்பு Reviewed by NEWMANNAR on December 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.