தேர்தல் சட்டமீறல்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை – பெவ்ரல்
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத பிரசார நடவடிக்கையை தடுப்பதற்கு பொலிஸார் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் என பெவ்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், பதாதைகள், சுவரொட்டிகள் போன்றவற்றை காட்சிபடுத்தவும் சட்டவிரோத தேர்தல் பிரசார அலுவலகங்களை நடத்திச் செல்லவும் முடியாது என பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆரச்சி கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக நாட்டின் அநேகமான பகுதிகளில் பாரியளவில் பிரசார பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதாகைகளை இன்று முதல் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என பெவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதில் 25 வன்முறை சம்பவங்களும் அடங்குகின்றன, இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் செயற்பட்ட விதம் திருப்தியளிக்கவில்லை எனவும் ரோஹன ஹேட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தை பாதுகாப்பதற்காக பொலிஸாருக்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பெவ்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, தேர்தல் சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு அமைய அனுமதி வழங்கப்பட்ட இடங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பிரசார பதாதைகளை காட்சிப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய இத்தகைய பதாதைகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனைகள் ஏற்கனவே அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத தேர்தல் பிரசாரம், மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் பிரிவுகள், ரோந்து சேவைகள் போன்றவற்றை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டமீறல்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை – பெவ்ரல்
Reviewed by NEWMANNAR
on
December 09, 2014
Rating:

No comments:
Post a Comment