எமது வார்த்தைக்கு மதிப்பளித்து மக்கள் வாக்களித்தனர்: மாவை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழ் மக்கள் ஆர்வத்துடன் இன்று வியாழக்கிழமை (08) காலை முதல் வாக்களித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கொல்லன் கலட்டி தமிழ் கலவன் பாடசாலையில் தனது மனைவியுடன் சென்து வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மாவை இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், தமிழ் மக்களை பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தோம்.
அதற்கமைய மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரண்டு மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு அதிகமான மக்கள் வாக்களிப்பதற்காக சென்று வருகின்றனர். பொது எதிரணி வேட்பாளர் வெற்றிபெறுவது நிச்சயம் என அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து கூறுகையில், இது ஜனநாயகத்துக்கான ஜனாதிபதி தேர்தல் இல்லை. எங்கள் வாக்குகளை வேறு ஒருவர் பயன்படுத்தக்கூடாது என்ற வகையில் நாங்கள் வாக்களித்து வருகின்றோம்.
ஆட்சி மாறினால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. பொது எதிரணி ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்டவுள்ளதாக கூறுகின்றது. அது தெற்கில் மட்டுமா அல்லது வடக்கிலும் நிலைநிறுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது எனத்தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் காலை முதல் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எமது வார்த்தைக்கு மதிப்பளித்து மக்கள் வாக்களித்தனர்: மாவை
Reviewed by NEWMANNAR
on
January 08, 2015
Rating:
No comments:
Post a Comment