ஹக்கீமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக இன்று சாய்ந்தமருது மக்களால் அமைச்சரின் கொடும்பாவியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நியமனத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் சிபாரிசு செய்துள்ளமையை ஆட்சேபித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி தொடர்பிலான விவகாரம் பரபரப்பாகியுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் ஹாபிஸ் நபீர் ஹஹமரை முதலமைச்சர் வேட்பாளராக சிபார்சு செய்துள்ளது.
இதனை எதிர்த்து சாய்ந்தமருது மக்கள் இன்று ஜும்மா தொழுகையின் பின் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஹாபிஸ் நபீர் ஹஹமரை சிபார்சு செய்தமை அம்பாறை மக்களுக்கு செய்த பெருந்துரோகம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கல்முனை பள்ளிவாசல் முன்பாக வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் குழுவொன்றும் பொதுமக்கள் சிலரும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவியை எரிக்க முற்பட்ட போது கல்முனை பொலிஸார் கொடும்பாவியை எரிக்காது தடுக்க முற்பட்டதால் பெரும் தள்ளுமுள்ளுக்கள் ஏற்பட்டதையடுத்து சாய்ந்தமருது ஜும்மா முன்பாக போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டது.
எனினும் கல்முனை பொலிஸார் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவியை ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திலிருந்து பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். வாக்களிக்காதவர்களுக்கு முதலமைச்சர் பதவியா? கூடிய வாக்களித்த சாய்ந்தமருது மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
கட்சிக்கு உழைப்பவர்களுக்கு இடமில்லை. தலைவர் ஹக்கீமே ஏன் இந்த புறக்கணிப்பு? தனி ஒருவரிடம் பேரம் பேசுவது ஏன்? என்று பலவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர். இச்சம்பவத்தால் சாய்ந்தமருது பிரதேசமே அல்லோலகல்லோலப்பட்டு காணப்பட்டது.
ஹக்கீமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
February 06, 2015
Rating:

No comments:
Post a Comment