மன்னாரில் இருந்து 'சன்னார்' கிராமத்திற்கான பஸ் சேவை இடம் பெறாமை குறித்து கேட்ட அங்கவீனமுற்ற முன்னாள் போராளி மீது தாக்குதலை மேற்கொண்ட நேரக்கணிப்பாளர் - Photos
மன்னாரில் இருந்து மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்திற்கு உரிய நேரத்திற்கு போக்குவரத்துச் சேவை இடம் பெறாமை குறித்து இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை நேரக்கணிப்பாளரிடம் சேவை தொடர்பில் கேட்கச் சென்ற போது வன்னி யுத்தத்தின் போது தனது கையை இழந்து,ஒரு கண்ணையும் இழந்த முன்னால் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் மீது இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை நேரக்கனிப்பாளர் ஒருவர் கோழைத்தனமாக தாக்குதல் மேற்கொண்டமை குறித்து மன்னார் மக்கள் மத்தியில் பலத்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை(6) மாலை 4.25 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும்,பிரபல சமூக சேவையாளருமான சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராம மக்கள் தமது தேவை கருதி வெள்ளிக்கிழமை காலை மன்னார் வந்துள்ளனர்.
மன்னார் வருகை தந்த இவர்கள் தமது கடமைகள் முடிவடைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மன்னாரில் இருந்து சன்னார் கிராமத்திற்கு செல்லும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பஸ்சிற்காக காத்து நின்றனர்.
எனினும் குறித்த பஸ் தரிப்பிடத்திற்கு வரவில்லை.
இந்த நிலையில் சன்னார் கிராம மக்கள் மன்னார் நேரக்கணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று இவ்விடயம் தொடர்பில் கேட்டுள்ளனர்.
இதன் போது தனது கையை இழந்து,ஒரு கண்ணையும் இழந்த முன்னாள் போராளி ஒருவர் குறித்த பிரச்சினை தொடர்பில் மன்னார் சாலையின் நேரக்கணிப்பாளரிடம் கேட்ட போது அவர் குறித்த அங்கவீனமுற்றவர் மீது கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் கண் பகுதியில் சிறு காயமடைந்த அவர் அவ்விடத்தில் இருந்து வெளியேறினார்.
எனினும் அங்கு வந்த சன்னார் கிராம மக்கள் அவர் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கேட்டதுடன் எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட குறித்த முன்னாள் போரளி மற்றும் அக்கிராம மக்களுடன் மன்னார் அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை நேரக்கணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றேன்.
அங்குள்ள அதிகாரிகளிடம் குறித்த பிரச்சினை தொடர்பில் கேட்ட போது கடந்த கால அரசாங்கம் வேறு,தற்போதைய அரசாங்கம் வேறு என கூறி அந்த மக்களை இழிவு படுத்தி கதைத்தனர்.
தான் அடித்தேன் என்பதனை குறித்த அதிகாரி ஒத்துக்கொள்ளவில்லை.இதனால் மக்கள் கோபமடைந்தனர்.
நீண்ட நேரத்தின் பின் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வடமாகாண பணிப்பாளர் முஹமட் அஸ்ஹர் சம்பவ இடத்திற்கு வந்தார்.
வரிடம் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தினேன்.
உடனடியாக அங்கவீனமுற்ற முன்னால் போராளி மீது தாக்குதலை மேற்கொண்ட மன்னார் சாலையின் நேரக்கணிப்பாளரை பகிரங்க மன்னிப்பு கோரும்படி தொரிவித்தார்.
அதற்கு அமைவாக குறித்த நேரக்கனிப்பாளர் நீண்ட நேரத்தின் பின் பகிரங்க மன்னிப்பு கோரியதோடு, இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வடமாகாண பணிப்பாளர் முஹமட் அஸ்ஹர் அவர்களும் மன்னிப்பு கோரினார்.
இதன் போது கடந்த வன்னி யுத்தத்தின் போது தனது கையை இழந்து,ஒரு கண்ணையும் இழந்த சன்னார் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான குறித்த குடும்பஸ்தர் மன்னிப்பு வழங்கினார்.
கடந்த காலங்களில் அரசியல் பலத்தை பயன்படுத்தி தாம் செய்த குற்றங்களில் இருந்து தப்பிக்கொள்ள நினைத்தவர்கள் தற்போதுள்ள புதிய அரசாங்கத்தில் இருந்து தப்பிக்கொள்ள முடியும் என்பது இலகுவான காரியம் இல்லை.
முன்னாள் போரளியான குறித்த குடும்பஸ்தர் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த மக்கள் தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தரும்,பிரபல சமூக சேவையாளருமான சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.
மேலும் மன்னார் நேரக்கணிப்பாளர் அலுவலகத்திற்கு பயணம் தொடர்பில் சேவைகளை கேட்க செல்லும் பயணிகளிடம் ஒழுங்கான முறையில் விடையளிக்காது கடினமாக நடந்து கொள்வதாக அறியமுடிகிறது.
மன்னாரில் இருந்து 'சன்னார்' கிராமத்திற்கான பஸ் சேவை இடம் பெறாமை குறித்து கேட்ட அங்கவீனமுற்ற முன்னாள் போராளி மீது தாக்குதலை மேற்கொண்ட நேரக்கணிப்பாளர் - Photos
Reviewed by NEWMANNAR
on
February 07, 2015
Rating:
No comments:
Post a Comment