அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற விருது வழங்கும் விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும்.-Photos-2ம் இணைப்பு


கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் மூத்த தமிழ் ஊடகவியலாளர்களான சின்னத்துரை சண்முகராஜ், பாலசிங்கம், இளையதம்பி பாக்கியராசா, கந்தசாமி அரசரட்னம், கருப்பையாப்பிள்ளை லோரண்ஸ் கூஞ்ஞே ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜேசப் கலந்து கொண்டார்.

பத்திரிகை நிருபர்கள், பிரதேச ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள், புகைப்படக் கருவிகள், பெக்ஸ் மெசின்கள், வொயிஸ் ரேக்கோடர்கள் என்பன இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், யோகேஸ்வரன், பேராசிரியர் சபா ஜெயராஜா, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

2ம் இணைப்பு

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற விருது வழங்கும் விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும்.





இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விருது வழங்கும் விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை(17-03-2015)கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தமிழ்ச் சங்க மண்டபத்தில் மாலை 5 மணிக்கு ஊடகவியலாளர் அ.நிக்ஸன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை கலந்து கொண்டார்.

அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், கௌரக விருந்தினர்களாக அமைச்சர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முதலில் ரி.எஸ். முருகேஷ் குழுவினரின் இசை நிகழ்ச்சி இடம் பெற்றது.அதனைத்தொடர்ந்து பேராசிரியர் சபா. ஜெயராஜா சிறப்பு சொற்பொழிவு இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு இடம பெற்றது.

-அதனைத்தொடர்ந்து நீண்ட வருடங்களாக ஊடகத்துறையில் கடமையாற்றி வரும் 06 ஊடகவியலாளர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை அவர்களினால் பதக்கம் அணிவித்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

-பின் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணணி,புகைப்படக்கருவி,ஒலிப்பதிவு கருவி மற்றும் தொலை நகல் இயந்திரம் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விருது வழங்கப்பட்ட மூத்த ஊடகவியலாளர்கள் 06 பேரின் ஊடக வரலாறு.......


லோரன்ஸ் கொன்சால் வாஸ் கூஞ்ஞ


சிறுவனான இருந்தபோதே பாதுகாவலன் பத்திரிகைக்கு செய்திகளை அனுப்பிய கொன்சால்வாஸ் கூஞ்ஞ,1976 முதல் வீரகேசரி பத்திரிகையின் நிருபராகக் கடமையாற்றுகின்றார். தலைமன்னார் மேற்கை பிறப்பிடமாகவும்; பேசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட லோரன்ஸ் கொன்சால்வாஸ் கூஞ்ஞ அமரர் திரு பிலேந்திரன் லோரன்ஸ் கூஞ்ஞவுக்கும் திருமதி லோரன்ஸ் மேரி கூஞ்ஞவுக்கும் நான்காவது புதல்வராவார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை தலைமன்னார் மேற்கு றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையிலும், இடைநிலை மற்றும் உயர் கல்வியை கல்முனை பத்திமாக் கல்லூரியிலும் கண்டி பூரணவத்த புனித சூசையப்பர் குருமடத்திலும் பயின்றார்.

இவர் சிறுவயதிலே யாழ் மறைமாவட்டத்திலிருந்து வெளிவருகின்ற பாதுகாவலன் பத்திரிகைக்கு மன்னார் மாவட்ட பங்குத்தள செய்திகளை அனுப்பியதன் மூலம் ஓர் செய்தியாளராக கால் பதித்ததுடன் கல்முனையில் படித்த காலத்தில் மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்து வெளிவந்த தொண்டன் பத்திரிகைக்கும் தனது ஆக்கங்களை எழுதி வந்தார்.

அத்துடன் இவர் 1976ம் ஆண்டு தொடக்கம் சர்வதேச பத்திரிகையாக கொழும்பிலிருந்து வெளிவருகின்ற வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளுக்கு தலைமன்னார் நிருபராக நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் இவர் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் லிமிட்டட் நிறுவனத்தின் வீரகேசரி பத்திரிகைக்கு தொடர்ந்து தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ என்ற பெயரில் மன்னார் பிராந்திய செய்தியாளராக செயல்பட்டு வருகின்றார்.

இவர் சிறுவயது தொடக்கம் பத்திரிகை தொழிலில் ஆர்வம் கொண்டு விளங்குவதால் மன்னார் பகுதியில் வன்செயல் தலைதூக்கிய காலங்களில் மன்னார் தீவு மக்கள் இரு முறை அயல் நாடான இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்றபோதும் இவர் இடம்பெயராது தலைமன்னார் பியரில் முஸ்லீம் மக்களுடன் தங்கியிருந்து தனது பத்திரிகை தொழிலை இலை மறைகாயாக இருந்து தொடர்ந்து செயல்படுத்தினார்.

அக்காலக் கட்டத்தில் இயக்கங்கள் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக எச்சரிக்கை விளம்பரம் ஒட்டுவதும் அணுப்புவதுமாக இருந்தபோது செய்தியாளனாக இவரை இனம் கண்டு கொண்ட இராணுவத்தினர் இவரை ஐந்து முறை விசாரனைக்கு என தள்ளாடி முகாமுக்கு அழைத்துச் சென்றபோதெல்லாம் அந்நேரம் இப்பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த கே.அரசரெட்னமும், மன்னார் அரசாங்க அதிபராக இருந்த கே.கணேஷ், மற்றும் வீரகேசரி நிறுவனமும் இவரின் விடுதலைக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளனர்.

அத்துடன் இவர் நடுநிலைமையாக இருந்தும் தந்திரமாகவும் தனது பத்திரிகை தொழிலிலை முன்னெடுத்துச் சென்றதால் அந்நேரம் இயக்கங்களுக்கிடையே போட்டியும் மோதலும் இடம்பெற்றபோது கூட அவர்களிடமிருந்தும் தப்பித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

தற்பொழுது இவர் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராகவும், மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பங்கின் மறையாசிரியர்களின் சங்க தலைவராகவும் மற்றும் வேறு பல அமைப்புக்களில் ஓர் உறுப்பினராக இருந்து சமூகசேவையாளராகவும் திகழ்ந்து வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.



சின்னத்துரை சண்முகராஜா


1964 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு இன்றைய தினம்வரை பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் ஷசண் என்று எல்லோராலும் அழைக்கப்படும் சின்னத்துரை சண்முகராஜா, பத்திரிகைப் பணியில் 50 ஆண்டுகளைக் கடந்து 51ஆவதாண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

அத்துடன் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அகவை எண்பதிலும் முத்து விழாக்காணவிருக்கிறார். ஆகவேதான் பத்திரிகைப் பணியில் 50 ஆண்டுகளையும் வயதில் 80 ஆண்டுகளையும் காணும் சண்ணுக்கு நீண்ட காலப் பத்திரிகையாளருக்கான விருதை, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வழங்கிக் கௌரவிக்கிறது.

ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14ஆம் திகதி வாழ்நாள் நீண்டகாலப் பத்திரிகைத்துறைச் சேவைக்காக இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப் பத்திரிகை மன்றமும் இணைந்து மவுண்ட்லவனியா ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் 10ஆவது வருட விருது வழங்கல் நிகழ்ச்சியிலும் இவர் கௌரவிக்கப்பட்டார்.

1940 களில் தனது ஆரம்பக் கல்வியை யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையிலும் அதற்கடுத்து யாழ்.மத்திய கல்லூரியிலும் பயின்ற ஷண், 1964 ஆம் ஆண்டு முன்னாள் தினகரன் ஆசிரியர் வி.கே.பி.நாதனை ஆசிரியராகக் கொண்டு எம்.டி.குணசேனாவின் இன்டிபென்டன்ட் நியுஸ்பேப்பர்ஸ் ஸ்தாபனத்திலிருந்து வெளியான ஷஷராதா வார இதழின்மூலம் பத்திரிகைத்துறைப் பயணத்தை ஆரம்பித்தார்.

1966 ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே ஸ்தாபனத்திலிருந்து, இலங்கைப் பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகத்தை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினபதி, சிந்தாமணியிலும் பிறகு சூடாமணியிலும் பணியாற்றினார். கடைசியாக வீரகேசரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு இன்றும் கூட அதே பத்திரிகையில் குசுநுநுடுயுNஊநுநுசு ராகப் பங்களிப்புச் செய்து வருகிறார். 85 வருடப் பத்திரிகையான வீரகேசரியில் 80 வயது ஷண்ணின் பெயரிலான கட்டுரைகள், தகவல்கள் 1964 ஆம் ஆண்டு ராதா முதல் 2015 வீரகேசரி வரை இன்றும் வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பரராஜசிங்கம் பாலசிங்கம்


பேராதனை பல்கலைக்கழத்தின் பட்டதாரியான பரராஜசிங்கம் பாலசிங்கம் தற்போது சன்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தின் ஆலோசகராக கடமையாற்றுகின்றார். இலங்கை ஊடகவியல் கல்லூரியின் பதில் பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார். ஊடகத்துறையில் 50 வருடங்களாக பணிபுரியும் அவரை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அவரது சிறப்பான சேவைக்காக கௌரவிக்கின்றது.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் டெயிலி நியூஸ் பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் இணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தினகரன் பத்திரிகையின் பதில் ஆசிரியராகவும் செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை பத்திரிகை ஆசிரியர்சங்கத்தினால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு அண்மையில் வழங்கப்பட்டது. சிறந்த ஊடகவியலாளர்களுக்கான டிஆர் ஜயவர்த்தன விருதை இவர் இரண்டு முறை பெற்றுக்கொண்டார்.

பாலசிங்கம் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முரண்பாட்டுத் தீர்வுக்குழுவின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

கொழும்பு அக்குவானஸ் கல்லூரியின் இதழியல் கற்கை துறையின் பணிப்பாளராகவும் கொழும்பு பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம். இலங்கை ஊடகவியல் கல்லூரி ஆகியவற்றின் இதழியல் கற்கைப் பிரிவின் வருகை விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.

ஊடகத்துறைக்குள் பிரவேசிப்பதற்காக முன்னர் விஜய கல்லூரி, கொழும்பு ஷhஹிரா கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். நீண்டகாலமாக ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டு வருதுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

இளையதம்பி பாக்கியராசா


கடந்த 50 வருடகாலமாக பத்திரிகையாளராகப் பணிபுரியும் இளையதம்பி பாக்கியராஜா, 1964 ஆம் ஆண்டில் வீரகேசரி பத்திரிகையில் மண்டூர் நிருபராக பணிபுரிய ஆரம்பித்தவர். அன்றுமுதல் பத்திரிகை, வானொலி என பல்வேறு ஊடகங்களிலும் அர்பணிப்புடன் பணியாறிய அவர், இன்றும் சமூக உணர்வுடன் எழுத்துத் துறையில் ஈடுபட்டுவருகின்றார். அவரது தொடர்ச்சியான ஊடகப்பணியைப் போற்றும் வகையில் அவரை கௌரவிக்க இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் முன்வந்திருக்கின்றது.

பாக்கியராஜா 1999 ஆம் ஆண்டில் பின்னர் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்து அன்று முதல் இன்று வரை பணிபுரிந்து வருகின்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஈழநாடு ஆகியவற்றிலும் நிருபராகப் பணியாற்றியவர்.

மண்டூர் நலன் நலன் விரும்பிகள் ஒன்றியம், மட்டக்களப்பு ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம், மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றிலும் இணைந்து பணியாற்றியவர்.
கனடாவிலிருந்து வெளியிடப்பட்ட ஆதவன் பத்திரிகையின் ஸ்தாபகஆசிரியர், மண்டூர் இராமகிருஷ;ண வித்தியாலயம், பட்டிருப்பு மகா வித்தியாலயம், கல்முனை பாத்திமா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவனான இவர், மண்டூர் கலைவாணி சனசமூக நிலையம், பிரயாணிகள் சங்கம், மண்டூh, பிரஜைகள் குழு, மட்டக்களப்பு புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணி மன்றம் ஆகியவற்றின் செயலாளராகவும், மண்டூர் 1 ஆம் 2 ஆம், பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கந்தசாமி அரசரட்ணம்



வீரகேசரி ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட மித்திரன் தினசரி பத்திரிகையில் சுடச்சுட வெளிவரும் சுவாரஸ்யமான உள்ளத்தை உருக்கும் சோகமான செய்திகளை வாசித்த போது பத்திரிகைத் துறையில் இணைய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டடதால் தான் பத்திரிகைத்துறையில் இணைந்துகொண்டதாகக் கூறுகின்றார் அரசரட்ணம். சுமார் 50 வருடகாலமாக இப்பணியில் உள்ள அவரை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கௌரவிக்கின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள நண்பர் ஒருவர் மூலம் வீரகேசரி பத்திரிகையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய தமிழ் பத்திரிகைகள் வரலாற்றில் முன்னணியாக விளங்கிய யாழ்ப்பாண நிருபர் அமரர் செல்லத்துரையை யாழ். அலுவலகத்தில் சந்தித்து தனது விருப்பத்தைத் தெரிவித்ததை அடுத்து அவரின் சிபாரிசுடன் 1967 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து மானிப்பாய் வீரகேசரி நிருபராக அரசரட்ணம் ஊடகப் பணியில் இணைந்தார்.

போர்கக்காலச் சூழ்நிலையிலும் குண்டுச் சத்தங்கள் மத்தியிலும் இரவு 10 மணி வரை காரியாலயத்திலிருந்து கடமையாற்றி வந்துள்ளார். இக்காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரமான சம்பவங்கள் மற்றம் மறக்க முடியாத நிகழ்வுகள் இன்றும் தனது மனதில் பதிந்திருக்கின்றன என அவர் சொல்கிறார். ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது நானும் முகாமையாளரும் அங்கு கடமையாற்றிய ஏனையவர்களும் மேசையின் கீழ் படுத்துவிட்டு மாலை 5 மணியளவில் புகையிரதப் பாதையால் நடந்து சென்றோம் என்கிறார் அவர்.

பத்திரிகைத் துறையில் 50 வருடங்களை பூர்த்தி செய்யவிருக்கும் நிலையில் அரசரட்ணத்தின் சேவை மேலும் தொடரவேண்டும்.

கருப்பண்ணப்பிள்ளை பரமசிவம் (க.ப. சிவம்)


பாடசாலை இலக்கிய கலை கலாசாரம் மற்றும் பல்துறை செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் க.ப.சிவம் 1959 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் ஈடுபட்டுவருபவர். 1959 ல் முத்தமிழ் முழக்கம் மாத சஞ்சிகை வெளிட்டவர். 1960 முதல் 1963 வரை மலைமுரசு மாத சஞ்சிகை வெளியீட்டில் ஈடுபட்டவர். கடந்த 55 வருடகாலமாக ஊடகத்துறையில் பணியாற்றும் அவரை இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கௌரவிக்கின்றது.

பல்வேறு வகைகளிலும் இழிவுபடுத்தப்பட்ட மலையக தமிழ் மக்களின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் உந்து சக்தியாக மலைமுரசு விளங்கியது. அதில் கடமையாற்றினார். அக்காலத்தில் வெளியாகிய உரிமைக் கூறல், பகுத்தறிவு, விடிவு, நாம், சமூக முன்னேற்றம், தொண்டன் ஆகிய பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியவர்.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். மேடைப் பேச்சாளர், நாடக தயாரிப்பாளர். 1965 ம் ஆண்டு முதல் இன்று வரை வீரகேசரி பத்திரிகையின் கண்டி நிருபராக பணி புரிபவர். கண்டியிலும் அவரது கிராமமான அம்பிட்டியாவிலும் இன மத ஐக்கியத்துக்கான பல்வேறு சமூக சமய அமைப்புக்களில் பணியாற்றுபவர். மத்திய மாகாண இந்து மாமன்றத்தின் ஸ்தாபகர் தர்ம கர்த்தாக்களில் ஒருவர்.

கண்டி சுதந்திரப் பத்திரிகையாளர் சந்திப்பில் பொருளாளர். 1985 முதல் இன்று வரை இந்து கலாச்சார அமைச்சின் மூலம் தமிழ் மணி, பத்திரிகை முன்னோடி, கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும் கௌரவத்தையும் பெற்றதுடன் மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சின் சாகித்திய பரிசில்களையும் பட்டங்களையும் பலமுறை பெற்றவர். மலையக கலை கலாசார சங்கத்தின் இரத்தின தீப பரிசில்களையும், மலையக கலை இலக்கிய பேரவை, இந்து இளைஞர் மன்றம், இந்து மாமன்றம், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், மத்திய மாகாண முதலமைச்சர் நிதியம் உட்பட பல்வேறு அமைப்புக்களினதும் பரிசில்களையும், பட்டங்களையும் பெற்றார்.

இவரது 75 ஆவது பிறந்த தினத்தை 2008 ல் மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ தனது செயலகத்தில் கொண்டாடியதோடு பொன்னாடை போர்த்தி பரிசில்கள் வழங்கி கௌரவித்தார். வீரகேசரியின் சார்பில் சேவை நலம் பாராட்டி அட்டன் நகரில் நிர்வாக இயக்குனர் குமார் நடேசன், பிரதம ஆசிரியர் பிரபாகரன் ஆகியோரால் பொன்னாடை போர்த்தி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மலையக மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும், எழுச்சியையும், ஏற்றத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் எம்மக்களின் குரலாக ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரி பத்திரிகையில் இன்று வரை பணியாற்றும் பாக்கியம் பெற்றுள்ளதையிட்டு பூரிப்படைவதுடன் அனைத்து மக்களுடனும் ஒன்றித்து செயற்பட்டு ஐக்கியமும், சமாதானமும் நின்று நிலைத்திட என்றென்றும் தனது ஊடக சேவையை முன்னெடுத்துச் செல்வதே தனது இலட்சியமாகும் என்றும் தெரிவித்தார்.















இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற விருது வழங்கும் விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும்.-Photos-2ம் இணைப்பு Reviewed by NEWMANNAR on March 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.