முழுமையான அதிகாரங்களை நாம் வட மாகாண சபைக்கு வழங்குவோம்
வட மாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி தமது சொந்த இடங்களை இழந்து அநாதரவான அப்பாவி தமிழ் மக்களின் காணிகளை மீள கையளிப்போம்.மேலும் நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதே எமது அரசின் பிரதான நோக்கம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மனித உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகளை எம்மால் பறிக்க முடியாது. இந்த காரணத்தை மையப்படுத்தி சர்வதேசத்தினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசாங்கம் என்ற வகையில் நாமே பதிலளிக்க வேண்டியுள்ளது. ஆகவே சர்வதேசத்துடன் எம்மால் முட்டி மோத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 22 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலை புதுக்கடையிலுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு அருகில் இடம் பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேச தொழிலாளர் தினத்தின் போது விடுதலை புலிகளினால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டார். அன்னாரை இறுதி தருணத்தில் சந்தித்த நபர்களுள் நானும் ஒருவனாகும். எவ்வாறாயினும் அவரது ஆட்சியின் போது இன, மத பேதங்களை பாராமல் அனைத்து இனத்தவர்களுக்கும் சமமான அந்தஸ்தை வழங்கினார்.
எனினும் அவர் பயங்கரவாதத்திற்கு எதிராகவே செயற்பட்டார்.
உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிறப்பின் பிரகாரமே இன ரீதியாக பிளவுப்பட்டுள்ளனர். தனது பெற்றோர்கள் பின்பற்றும் மத ,இனத்தின் அடிப்படையிலேயே மனிதன் இன ரீதியாக பிளவுபடுகின்றான். ஆகவே இனவாதத்தின் அடிப்படையில் நாம் பிளவுப்பட வேண்டிய தேவைப்பாடு கிடையாது. இன ரீதியாக பிளவுப்படாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஐக்கியமாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்பட்டார்.
அவரது ஆட்சிக்காலத்தின் போது தமிழ் மக்களுடன் மிகவும் சமீபமாக செயற்பட்டார். இன ரீதியான பேதம் காட்டவில்லை. இதன்பிரகாரமே வடக்கு கிழக்கில் வீட்டு திட்டத்தினை ஆரம்பித்ததுடன், வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு ஜனசவியை பெற்றுக்கொடுத்தார். இதன் காரணமாகவே அவர் விடுதலை புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட வேளை வடக்கு கிழக்கில் வௌ்ளை கொடி தொங்க விடப்பட்டிருந்தது.
ஆகவே தற்போது நாட்டில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.
ரணசிங்க பிரேமதாஸ தலைமையில் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதனை போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும்.
ஆகவே தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ் ,முஸ்லிம் மற்றும் சிங்களவர்களின் முழுமையான ஆதரவினை பெறவேண்டியுள்ளது. அதற்கான பொறிமுறையை கட்டமைக்க வேண்டியுள்ளது.
இதன் அடிப்படையில் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை போன்று வடக்கு மாகாணத்திற்கும் அதிகாரங்களை வழங்க வேண்டியுள்ளது. அத்தோடு யுத்தக்காலத்தின் போது தமது சொந்த இடங்களை இழந்து நடுத்தெருவில் விடப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களின் காணிகளை மீள கையளிக்க வேண்டியுள்ளது.. இதற்கமைய வடக்கில் இராணுவத்திற்கு தேவையற்ற காணிகளை நாம் மக்களிடம் கையளிக்க உள்ளோம். நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதே எமது அரசின் பிரதான நோக்கமாகும்.
அதற்கான பொறிமுறையை கட்டமைக்க வேண்டியுள்ளது.
தேசிய ஐக்கியம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் மனித உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகளை எம்மால் பறிக்க முடியாது. இந்த காரணங்களை மையப்படுத்தி சர்வதேசத்தினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு நாமே பதிலளிக்க வேண்டியுள்ளது. ஆகவே சர்வதேசத்துடன் எம்மால் மோத முடியாது.
இந்நிலையில் இலங்கையர் என்ற அடிப்படையில் தேசிய ஐக்யத்தை கொண்ட இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றுப்படுவோம் என்றார்.
முழுமையான அதிகாரங்களை நாம் வட மாகாண சபைக்கு வழங்குவோம்
Reviewed by Author
on
May 02, 2015
Rating:

No comments:
Post a Comment