அண்மைய செய்திகள்

recent
-

மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் மையவாடியைக் கூட படையினர் விட்டுவைக்கவில்லை-ஹீனைஸ் பாறூக் எம்.பி ஆவேசம்.

மறிச்சுக்கட்டி மரைக்கார் தீவு  மக்கள் இறந்த தங்களது மூதாதயர்களை நல்லடக்கம் செய்ய நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த மையவாடி கடற்டபடையினரின் எல்லைக்குள் உள்வாங்கப் பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹீனைஸ் பாறூக் தெரிவித்துள்ளார்.

வில்பத்து பகுதியில்  சட்டவிரோதமாக முஸ்லிம் மக்கள் மீள் குடி யேற்றப்பட்டுள்ளார்கள் என்று அண்மைக்காலங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

1990ஆம் ஆண்டு இடம் பெற்ற இடப் பெயர்விற்கு முன்னர்  வசித்த குடும்பங்களும், தற்போது இருக்கின்ற குடும்பங்களும்  மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வில்பத்து சரணாலயத்தின் எல்லையாக   'மோதரகம ஆறு' என்ற ஆறு விளங்குகின்றது.

இவர்களின்  குடியேற்றங்கள் வில்பத்து சரணாலய பகுதிக்கு வெளியில் இவ்வாற்றிற்கு அப்பாற்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளது.

மாறாக வில்பத்துவின் எல்லைக்குள் சட்டவிரோதமாக யாரும் மீள்குடியேற்றப் படவில்லை.

எனவே இங்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பது என்பது முறைப்படி வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் அத்திணைக்களத்திடம் இருந்து முறையாக  விடுவிக்கப்பட்டும், அரசிற்கு சொந்தமான காணிகள், அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் விடுவிக்கப் பட்டு  முசலி பிரதேச செயலாளரினூடாக மக்களுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழ்கின்ற மக்களுக்கு ½ ஏக்கர் காணி வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அது தனியே முஸ்ஸிம்களுக்கு மாத்திரமல்ல. தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்களுக்கும் காணிகள் இங்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதில் கடற்படையினரினாலும், இராணுவத்தினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கு உற்பட்ட கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கே அதிகளவான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதே போல் சுமர் 735 ஏக்கர் முள்ளிக்குளம் காணியும், சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட சிலாபத்துறை காணியும், அதே போன்று சிங்கள மக்களுக்கு சொந்தமான கஜுவத்தை காணியும் படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாகவே குறித்த இடங்களில் இம்மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  மறிச்சுக்கட்டி மக்களுக்குச் சொந்தமான 'ஆனப்பாப்பான்'என்ற விவசாய நிலங்கள் முள்ளிக்குளம் கடற்படையினரால் சுவீகர்க்கப் பட்டுள்ளது. அத்துடன் மறிச்சுக்கட்டி மரைக்கார்தீவு  மக்கள் இறந்த தங்களது மூதாதயர்களை நல்லடக்கம் செய்ய நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த மையவாடி கடற்டபடையினரின் எல்லைக்குள் உள்வாங்கப் பட்டுள்ளது.

மேலும் குறித்த கடற்படைக்கு வெளியில் மறிச்சுக்கட்டி முஸ்லிம்கள் பரம்பரையாக வசித்த  இடங்களில் கூட படையினர் சிறு சிறு முகாம்களை அமைத்து இதுவரையும் அதனை மக்களிடம் விடுவிக்காமல் உள்ளனர்.

மேலும் மறிச்சுக்கட்டி , பாலக்குழி மற்றும் கரடிக்குழி ஆகிய கிராமங்கள் தங்களது ஜீவனோபாய தொழிலாக விவசாயத்தை முக்கியமாக மேற்கொள்கின்றனர்.கத்தாங்கண்டல் என்ற விவசாய நிலத்தில் சிலருடைய காணிகளில்கடற்படையினர் இன்றும் விவசாயம்  மெற்கொள்ளும் நிலை கவலையைத்தருகின்றது.

 முசலியில் படையினரிடம் இருக்கும் மேற்படி மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் கௌரவ சுவாமிநாதன் அவர்கள் பதவியேற்று ஒருசில நாற்களில் அவரிடம் வேண்டுகோகளை விடுத்தேன் அவர் அவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் மிகவிரைவில்உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்விடயம் மனிதாபிமானத்துடன் நோக்கப்படவேண்டும் என்றும் பிழையான தகவல்களை காட்டி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் பின்னடைவை ஏற்படுத்த நினைக்கும் சதிகாரர்களை  வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

மறிச்சுக்கட்டி முஸ்லிம்களின் மையவாடியைக் கூட படையினர் விட்டுவைக்கவில்லை-ஹீனைஸ் பாறூக் எம்.பி ஆவேசம். Reviewed by NEWMANNAR on May 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.