இலங்கை தமிழரை நாடு கடத்துகிறதா பிரித்தானிய அரசு? போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்கள்


இலங்கையில் நடந்த போரிலிருந்து தப்பி பிரித்தானியாவில் அடைக்கலம் அடைந்துள்ள ஜனகன் சிவநாதன் என்பவரை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப உள்ளதாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் போர் நடந்தபோது ஜனகன் சிவநாதன்(22) பள்ளி பருவத்தில் கல்வி கற்று வந்துள்ளார். 2009ம் ஆண்டில் போரின் இறுதிக்கட்டத்தில் ஜனகனை சுற்றி வளைத்த சிங்கள ராணுவத்தினர் அவரை கைது செய்தனர்.
பின்னர், சுமார் 10 நாட்களாக தங்களது கட்டுப்பாட்டில் சிறை வைத்த சிங்களவர்கள் அவரை மிக கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர்.
தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்த தப்பிய ஜனகன், பிரித்தானியா நாட்டில் அடைக்கலம் தேடி Doncaster நகரில் உள்ள Stainforth என்ற பகுதியில் தற்காலிகமாக தங்கி வருகிறார்.
மேலும், இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை வெளிச்சத்திற்கு காட்டும் வகையிலும், ஈழத்தமிழர்களுக்காகவும் பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் Tamil Solidarity என்ற அமைப்புடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இலங்கையில் கடந்த 2013ம் ஆண்டு கொமன்வெல்த் கூட்டம் நடைபெற்றபோது, அதில் பங்கேற்க சென்ற பிரித்தானிய பிரதமரான டேவிட் கேமரூனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் ஜனாதிபதியான மைத்திரி பால சிறிசேன இந்தாண்டு பிரித்தானியாவிற்கு சென்றபோது, அதனை எதிர்த்தும் அவர் போராட்டத்தில் குதித்தார்.
இந்நிலையில், ஜனகனை இலங்கை நாட்டிற்கு திருப்பி அனுப்ப உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, புலம்பெயர்தல் அலுவலக அதிகாரியை சந்தித்த வேளையில் அவரை கைது செய்து தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்தனர்.
ஜனகனை இலங்கை தேசத்திற்கு திருப்பி அனுப்பினால், அவருக்கு மிகப்பெரிய ஆபத்து நேரலாம் என்பதால், திருப்பி அனுப்பும் முயற்சிக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த Alistair Tice என்பவர் கூறுகையில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தகவல்களை முந்தைய ராஜபக்ச அரசு சேகரித்து வைத்திருந்தது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அந்த தகவல்கள் அங்குள்ள விமான நிலையத்தில் இருக்கும் புலம்பெயர்வு அதிகாரிகளிடம் இருப்பதால், ஜனகனை திருப்பி அனுப்புவது ஆபத்து என்றார்.
போரினால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது ஆபத்தானது என அம்னிஸ்ட்டி மன்னிப்பு சபை கூறியிருப்பதை பிரித்தானிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
எதிர்வரும் யூலை 15ம் திகதி, ஜனகன் விவகாரம் குறித்து பிரித்தானிய அரசு விசாரணை நடத்த உள்ளதால், அதன் பின்னரே அவரை இலங்கைக்கு நாடு கடத்துவார்களா அல்லது பிரித்தானியாவிலேயே தங்க அனுமதிப்பார்களா என்பது தெரியவரும்.
இலங்கை தமிழரை நாடு கடத்துகிறதா பிரித்தானிய அரசு? போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்கள்
Reviewed by Author
on
June 13, 2015
Rating:

No comments:
Post a Comment