அண்மைய செய்திகள்

recent
-

மற்றைய எம்.பி.க்களும் தமது நிதி ஒதுக்கீடு பற்றி வெளிப்படுத்த வேண்டும்: முதலமைச்சர்


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் பெற்றுக்கொண்டதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜானாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு கேட்டு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள விக்னேஸ்வரன், தனது முறைப்பாடுகள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தெரிவித்துள்ள தகவல்களுக்கு மேலாக ஆதாரங்கள் எதனையும் தான் வழங்க வேண்டிய தேவை இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

செயற்திட்டங்களுக்கென்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமையை சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளிப்படையாக கூறியதுபோல், ஏனையோர் இது விடயத்தில் வெளிப்படையாக இன்னமும் கருத்துத் தெரிவிக்காதது கவலையளிக்கிறது என்றும் இன்று மாவை சேனாதிராசாவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன் சுரேஸ்பிரேமச்சந்திரனைப் போல் ஏனையவர்களும் வெளிப்படையாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுளார்.

விக்னேஸ்வரன் அனுப்பிய கடிதத்தின் விபரம் வருமாறு:

இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கில்லை. ஆனால் ஜனாதிபதியிடம் தெரிவித்த முறைப்பாடு குறித்துப் பதிலளிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளதால் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

எமது மக்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் விடயங்களையே நம்பிக்கையானவையாகத் தென்பட்டால் நாம் மக்கள் நலம் கருதி வெளியிடுகின்றோம். அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் பிழையேதும் செய்யவில்லை என்று அவர்கள் நினைத்தால் அதைப் பகிரங்கமாகக் கூறலாம். உதாரணத்திற்கு கடந்த சனிக்கிழமை (13.06.2015) அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வப் பேச்சாளர் கௌரவ சுரேஸ் பிரேமச்சந்திரன்(பா.உ) அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டலாம்.

அவரது கருத்தின் பிரகாரம் -
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் உள்ள ஆறு(6) கிணறுகளை புனரமைப்பதற்காகவும் வேறு தொடர்புடைய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் ரூபா ஐந்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டினையும் வலிகாமம் கிழக்கில் எட்டு(8) வீதிகளைப் புனரமைப்பதற்காக ரூபா நாற்பது மில்லியன் நிதி ஒதுக்கீட்டினையும் கேட்டிருந்தோம். அந் நிதி ஒதுக்கீடுகள் மீள்குடியேற்ற அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்திட்டங்களைக் கொடுத்தார்களா? வாகனங்களைப் பெற்றார்களா? என்பதை அந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்களையே கேட்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இங்கு கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் வெளிப்படையாக என்னென்ன தேவைகளுக்காக, எவ்வளவு நிதி ஒதுக்கீடு அவரால் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதிஒதுக்கீட்டினை பெற்றுள்ளார்கள் என்ற எனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அவரது இந்தக் கருத்துக்கள் அமைந்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரது இப் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமான ஆதாரங்களுக்கு மேலதிகமான ஆதாரங்கள் எதனையும் என்னிடம் பெறவேண்டிய தேவை இருக்காது எனக் கருதுகின்றேன்.

வடமாகாணசபையைப் புறக்கணித்தே இக்கோரிக்கை விடுக்கப்பட்டதென்பதையும் பணம் தென்னிலங்கையில் இருந்தே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதுகின்றேன்.

செயற்திட்டங்களை உத்தியோக பூர்வமாக நடைமுறைப்படுத்துவது வடமாகாணசபை அலுவலர்கள். வடமாகாணசபைக்கு இவற்றிற்கான பணம் ஒதுக்கப்பட்டு வருகின்றது. வடமாகாணசபையுடன் கலந்துரையாடல் இன்றி இப்பேர்ப்பட்ட செயல்த்திட்டங்களில் இறங்குவது ஒரே விடயம் சம்பந்தமாக இரட்டையான நடைமுறைப்படுத்தல் நடைபெற இடமளிக்கும் என்பதை உணர்ந்திருப்பீர்கள். வடமாகாணசபை மூலமாக நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் அந்நிதியம் வடமாகாணசபை மூலமாகவே ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும்.

மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நிதி ஒதுக்கீடு பற்றி அந்தந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்க முன்வரவேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உத்தியோகப் பேச்சாளர் கௌரவ சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தும், ஏனையோர் அது பற்றி இன்னமும் வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்காதது கவலையளிக்கிறது. மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கௌரவ சுரேஸ்பிரேமச்சந்திரனைப் போல்; வெளிப்படையாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க முன்வரவேண்டும் என விரும்புகின்றேன்.

தமிழ்த்தேசியத்திற்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமை உணர்வும் அர்ப்பணிப்புத் தன்மையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் என்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
மற்றைய எம்.பி.க்களும் தமது நிதி ஒதுக்கீடு பற்றி வெளிப்படுத்த வேண்டும்: முதலமைச்சர் Reviewed by NEWMANNAR on June 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.