அண்மைய செய்திகள்

recent
-

உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோளும், இலங்கை தமிழ் அரசியலும்


அன்பார்ந்த தமிழ் மக்களே, தமிழர்களின் ஆரம்ப கால அரசியல் தோல்வி அடைந்த பின்பு ஆயுதப் போராட்டம் பல தமிழ் அமைப்புக்களாலும் நடாத்தப்பட்டு, அதிலும் இறுதிவரைக்கும் போராடிய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒரு அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. அது விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி. இது எல்லொருக்குமே தெரிந்த ஒன்று. இது இப்படி இருக்க, போராளிகள் அமைப்பு எப்படி, யாரால் எதற்காக உருவாக்கப் பட்டது? சிந்தித்து பாருங்கள் தமிழ் மக்களே.

ஐக்கிய நாடுகள் சபையில் போர்க்குற்ற விசாரணை நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் குற்றம் செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இவ்வேளையில் போராளிகள் அமைப்பு எவ்வாறு தேர்தலில் போட்டியிட முடியும்?

இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளின் தடையை நீக்கி விட்டதா? தடை செய்யப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்? சரியாக சிந்தித்து பாருங்கள்.

இவை மட்டுமின்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு வே. பிரபாகரன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கட்சிதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இவர்கள்தான் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று இலங்கை தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையிலும் சகல தமிழ் அமைப்புக்களும் சேர்ந்து போராடி வருகிறோம்.

இந்த போராளிகள் அமைப்பானது இரண்டு மாதத்தில் எப்படி முளைத்தது? ஏன் முளைத்தது?  போர் முடிந்து ஆறு வருடங்கள் தாண்டிவிட்டன.

ஒரு அரசியல் கட்சி உருவாக்கப்படுவதன் முன் குறைந்த பட்சம் இரண்டு வருட காலத்திற்கு முன்பாவது தேர்தலில் போட்டியிடுவதன் காரணம், தமிழ் மக்களுக்குக்காக என்ன செய்யப்படும் என்பது பற்றி பிரச்சாரங்கள் நடத்துவதுதான் முறை. இது எதுவுமே இல்லாமல் திடீரென பெய்த மழை போல நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம் என்றால் வேடிக்கையாக உள்ளது.

இம்முறை தேர்தலில் இந்த போராளிகள் அமைப்பு போட்டியிட்டால் நடக்க போவது பின்வருமாறுதான்.

இவர்களின் தோல்வியால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை தங்கள் பிரதிநிதிகளாக ஏற்கவில்லை என்பார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் வாக்குகளை திட்டமிட்டு சிதறடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. ஒரு வேளை இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அது மேலும் மோசமானது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்ற ரீதியில் தேர்தலில் போட்டியிடும் போராளிகள் அமைப்பு சார்ந்த அனைவரும் இலங்கை அரசால் கைது செய்யப்படுவார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களும் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு, மீண்டும் கடத்தல்களும் கொலைகளும் தொடரும்.

விடுதலை புலிகள் மீண்டும் உருவாகி விட்டார்கள் என்று சிங்கள தேசத்தின் பிரச்சாரங்களும் வெடிக்கும்.

இது மட்டுமல்லாமல், ஐ.நா சபையால் விடுதலை புலிகள் மீதும் போர்க்குற்றம் இருக்கும் பட்சத்தில் இந்த போராளிகள் அமைப்பு விடுதலை புலிகள் என்று குற்றம் இவர்கள் மீது எய்யப்படும்.

ஆகவே அன்பார்ந்த உலகெங்கும் இருக்கும் தமிழ் மக்களே, உங்கள் உறவுகளுக்கு நன்கு விளக்கம் கொடுங்கள். இந்த போராளிகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்பு.

தயவு செய்து அந்த அமைப்பிற்கு வாக்களித்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் திரு வே. பிரபாகரன் அவர்களை கொச்சைப் படுத்தவோ, தமிழர்களுக்காக உயிரை துறந்த மாவீரர்களின் உன்னத தியாகங்களையும், இன்றும் தலைவரின் வழியில் போராடும் போரளிகளையும் கேவலப் படுத்தவோ வேண்டாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சில தவறுகள் இளைத்தாலும் இன்றும் தமிழ் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் பிழைகளை சுட்டிக்காட்டாமல் வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.

இம்முறை 25 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்ய வைத்து இலங்கை அரசாங்கத்தை அதிர வைக்க வேண்டும்.

இலங்கை அரசியலை தீர்மானிப்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்க வேண்டும். இம்முறை தேர்தலின் முடிவுகள் தமிழ் மக்களின் கைகளில் என்று நம்புகின்றோம்.


உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோளும், இலங்கை தமிழ் அரசியலும் Reviewed by Author on July 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.