வாக்காளர் பெருமக்களின் நாளைய தீர்ப்பு என்ன?
நாட்டில் எட்டாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நாளை பதினேழாம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் பிரசாரப் பணிகள் பல்வேறு அரசியல் கட்சிகளினாலும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கடந்த காலங்களில் போன்று பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இல்லாத நிலையில், தேர்தல் திணைக்களத்தின் அறிவுரைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதேவேளை, அரசியல் கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று வசைபாடவும், சேற்றை வாரி இறைக்கவும் தவறவில்லை. இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளையும் அரசியல்வாதிகளின் வாய் நிறைந்த வாக்குறுதிகளையும் மக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்தனர்.
அந்தவகையில், மக்களின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 பிரதிநிதிகள் நேரடியாகவும் 29 பிரதிநிதிகள் தேசியப் பட்டியலின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்தப் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கென 6,151 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இத்தடவை நடைபெறும் பொதுத் தேர்தல் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் மோசடிகளற்ற, சமூகத்துக்கு சேவை செய்யக்கூடிய, உண்மையான கொள்கைப் பற்றுடைய வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டுமெனவும் அவ்வாறானவர்களை சரியாக இனங்கண்டு மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும் சமாதான விரும்பிகளும் புத்திஜீவிகளும் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வந்தனர்.
அதுவே நல்லாட்சியை உறுதி செய்ய வழிவகுக்கும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாகும். அந்தவகையில் பிரதான கட்சிகள் பலவும், மக்களால் ஊழல் பெருச்சாளிகள் என அடையாளம் காணப்பட்ட பலருக்கு இத்தடவை தங்கள் கட்சியில் வேட்புமனு கொடுக்காமல் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், அது எந்தளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குரியதாகும். எவ்வாறெனினும் நாட்டுக்கும் தாம் சார்ந்த சமூகத்துக்கும் கொள்கைப் பற்றுடன் சேவையாற்றக்கூடிய சிறந்த பண்பாளர்களை தெரிவு செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு மக்களை சார்ந்ததாகும்.
பொதுவாகவே அரசியல்வாதிகள் வாய் நிறைந்த வாக்குறுதிகளை வழங்குவதும் தேர்தல் பிரசாரங்களின் பொருட்டு வீட்டுக்கு வீடு ஏறி கரங்கூப்புவதும் பின்னர் அதேவேகத்தில் தேர்தல் முடிந்த கையோடு மக்களை மறந்து விடுவதும் சர்வசாதாரண விடயமாகும்.
ஒருவகையில், 'ஆறு கடக்கும் வரையுமே அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ' என்ற போக்கையே பெரும்பாலான அரசியல்வாதிகள் கொண்டுள்ளதாக வாக்காளர் பெருமக்கள் சதா குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும் புதிய விடயமல்ல.
பெரும்பாலான அரசியல்வாதிகள் அறிக்கை விடுவதோடு தமது கடமை முடிந்தது என்ற வகையில் காலத்தை ஓட்டி விடுகின்றனர். இவ்வாறான போக்குகள், மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் தொட.ர்பில் மிகுந்த ஏமாற்றத்தையும் விரக்தியையுமே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
அதுமாத்திரமன்றி இன்னும் ஒருசாரார் மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நோக்கத்தில் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இதன் பொருட்டு தேர்தல் காலங்களில் அன்பளிப்புகள் வழங்குவது, மக்களை உற்சாகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளை கடந்த காலங்களில் பரவலாக அவதானிக்க முடிந்தது.
மேலும் மக்களுக்கு வழங்குவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் பெருமளவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியலை ஒரு வியாபாரமாகவும் அதிகார ஸ்தானமாகவும் கையாண்டு அதன்மூலம் அதிகூடிய வரப்பிரசாதங்களை அடையலாமென என்னும் ஒரு சில அரசியல்வாதிகள், பணத்தை வாரி இறைத்து மக்களை தமது பக்கம் ஈர்க்க முனைகின்றனர்.
இவ்வாறானவர்களை இனங்கண்டு, அதற்கேற்ப மக்கள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டியது அவர்களின் கடப்பாடாகும். இன்றேல் மக்களின் தலையில் அரசியல்வாதிகள் சவாரி செய்யும் நிலைமைகளே மிஞ்சுவதாக இருக்கும் என்பதை மறந்துபோகக்கூடாது.
நாட்டில் நல்லாட்சியை உறுதி செய்ய வேண்டுமானால் அது தொடர்பில் சிந்தித்து செயற்படுவதும் அவசியமானதொன்றாகும். வெறுமனே பகட்டு வார்த்தைகளுக்கும் வெற்று வாக்குறுதிகளுக்கும் மக்கள் துணைபோகாதிருப்பது மிகவும் பிரதானமாகும்.
இன்றைய அமைதியின் பின்னணியில் பல்வேறு தரப்பினரும் பாரிய இழப்புக்களை சந்தித்தும் அதன்பொருட்டு அதீத விலைகொடுத்தும் வந்துள்ளனர். அந்தவகையில் அமைதிச் சூழலை தொடர்ந்தும் தக்கவைத்து கொள்வதும் அனைவரினதும் கடப்பாடாகும்.
இவற்றுக்கு மத்தியில் மக்கள் இத்தடவை சுததந்திரமாகவும் நிம்மதியாகவும் வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமானது தேர்தல் ஆணையாளருக்கு அதிக அதிகாரங்களையும் ஒழுங்கு விதிகளையும் நிறைவேற்றக்கூடிய வாய்ப்பை வழங்கியுள்ளமையே இதற்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், தேர்தல் ஆணையாளர் தேர்தல் ஒழுங்கு விதிகளை எத்தரப்பினரும் மீறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. அனைத்தையும் வாக்காளர் பெருமக்கள் மனதிற்கொண்டு நாட்டில் நல்லாட்சியை உருவாக்க சமூகத்திக்கு சேவை செய்யக்கூடிய சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வது இன்றியமையாதது.
அதன்பொருட்டு நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளை பதிவு செய்துகொள்ள வேண்டும். வாக்களிக்க செல்ல காலதாமதமானாலோ அன்றேல் வாக்களிக்கத் தவறும் பட்சத்திலோ வாக்கு மோசடிகள் இடம்பெறவும், சரியான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவும் முடியாது போகும்.
நாளை நடைபெறவிருக்கும் எட்டாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலானது நாட்டின் தலைவிதியையே நிர்ணயிக்கக்கூடிய ஒன்றாக அமையவிருக்கின்றது என்ற யதார்த்தத்தை மனதில் கொள்வது அவசியமாகும். மக்கள் அதனை உணர்ந்தேனும் தமது வாக்குகளை சரியான முறையில் உபயோகிப்பது மிகவும் அத்தியாவசியமாகும்.
அதேவேளை, ஒவ்வொரு தேர்தலின் போதும் பெருந்தொகையான வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அதற்கு காரணம், வாக்களிக்கும் மக்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது என்ற பூரண அறிவின்மையே ஆகும்.
இதனால் வாக்குகள் வீண்விரயமாவதையும் அதன் மூலம் தாம் விரும்பிய வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலைமைகள் காணப்படுகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது. எனவே, வாக்காளர்கள் வாக்களிக்கும் முன்னர் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப செயற்படுவது இன்றியமையாதது.
மறுபுறம் இது தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படாமல் போவதற்கும் காரணமாக அமைந்துவிடும். இவையனைத்தையும் கருத்திற்கொண்டு வாக்காளர் பெருமக்கள் தங்கள் புள்ளடிகளை சரியான முறையில் இட்டு நாட்டின் எதிர்காலத்தை சரியான பாதையில் இட்டுச்செல்லக் கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டும்.
இவையனைத்திற்கும் மத்தியில் தேர்தலுக்கு முன்னர் எவ்வாறு நாட்டில் அமைதிச்சூழல் பேணப்பட்டதோ அதேபோன்று தேர்தலின் பின்னரும் நாட்டில் அமைதி பேணப்படுவது மிகவும் இன்றியமையாததாகும் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம்.
வாக்காளர் பெருமக்களின் நாளைய தீர்ப்பு என்ன?
Reviewed by Author
on
August 16, 2015
Rating:

No comments:
Post a Comment