மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இலட்சியக் கனவு,,,
பாராளுமன்றத் தேர்தலின் போது பலத்த சவால்களை எதிர்கொண்டு தனித்துவமாக நின்று போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். எமது மக்களுக்கு வழங்கி வரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எமது இலட்சியக் கனவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
நாம் எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாட்டிற்கும், எமது உழைப்பின் ஊடான அரசியல் செயற்பாடுகளுக்கும், எமது மக்கள் பணிகளுக்கும் உரிய பலனை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தந்திருக்கவில்லை.
ஆயினும், ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களினதும், விடிவிற்காக நடைமுறை யதார்த்த வழிமுறையில் நாமே உழைத்து வருவதை உணர்ந்து எமக்கு வாக்களித்த மக்களுக்கு நாம் நன்றிகூற கடமைப்பட்டிருக்கின்றோம்.
சக தமிழ்க்கட்சிகளின் கூட்டின்றி, தேசிய கட்சிகளின் ஆதரவின்றி, அரச தரப்பின் அனுசரணையின்றி தனியொரு கட்சியாக தேர்தல் களத்தில் துணிந்து நின்றவர்கள் நாம் மட்டுமே.
அரசியல் அரங்கில் இருந்து எம்மை முற்றாக அகற்றப் போவதாக வழமைபோல் விடுக்கப்பட்ட சவால்களை எதிர்கொண்டு பலத்த தடைகளுக்கு மத்தியிலேயே எமது வெற்றியை நாம் நிலைநாட்டியிருக்கின்றோம்.
நாம் மக்களின் மன அரங்குகளில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருப்பவர்கள் என்பதை எமது வெற்றி எடுத்துக் காட்டியிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக 6 தடவைகள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றிருந்தவர்கள் என்று தமிழ்க் கட்சி தலைவர்களில் எவருமில்லை.
ஆனாலும் எமது மக்கள் எமக்கு வழங்கிய ஆதரவின் மூலம் தொடர்ச்சியாக 6ஆவது தடவையாகவும் பாராளுமன்றம் சென்று எமது கட்சித் தலைமையே வரலாறு படைத்திருக்கிறது.
நாம் எமது மக்களுக்கு வழங்கி வரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எமது இலட்சியக் கனவு. அதற்கான அரசியல் பலத்தை அடைவதற்காக தொடர்ந்தும் நாம் உறுதியுடன் உழைப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இலட்சியக் கனவு,,,
Reviewed by Author
on
August 22, 2015
Rating:

No comments:
Post a Comment