அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் எந்தவொரு அரசாங்கமும்,இன்று வரை இதயசுத்தியுடன் செயற்பட்டதாக வரலாறு இல்லை. அருட்பணி. எழில் இராஜேந்திரம். I

போரின் போதும், ஆயுத மௌனிப்பின் பின்னரும், காணாமல் ஆக்கப்படுதல் கலாச்சாரம் தொடர்வதற்கான ஆதாரங்கள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன. மாற்றத்தின் பின்னும் நாங்கள் மாறும் என்று நினைத்தவைகள் மாறவில்லை.என தமிழ் சிவில் சமூக அமைப்பின் இணைப்போச்சாளர் அருட்பணி. எழில் இராஜேந்திரம் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மன்னாரில் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,

 நீதிக்கான பயணத்தில் அத்தியாயங்கள் நீண்டு கொண்டே போகின்றன. காணாமல் ஆக்கப்படுதல் இலங்கை அரசியல் வரலாற்றில் கிளர்ச்சி எதிர்ப்பின் ஆயதமாக மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது.

 வயது பால் வித்தியாசமின்றி தமிழன் அல்லது தமிழிச்சி என்ற ஒரே ஒரு காரணத்திற்காக கடத்தப்பட்டவர்களின் கதி தெரியாது.
இன்றும் ஐ.நாவும்,மற்ற நாடுகளும், எங்களின் பிள்ளைகளை எங்களுக்குத் தருவார்கள் என்று நம்பி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது தான் எங்களுடைய கதை.

 சர்வதேச விசாரணை என்று தொடங்கி இன்று எல்லாரும் திட்டமிட்டு உள்ளக பொறிமுறையில் வந்து மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்.

காணாமல் ஆக்கப்படுதல் ஸ்ரீலங்கா அரசியல் வரலாற்றில் வௌ;வேறு தளங்களில் வௌ;வேறு நோக்கங்களை அடைவதற்காக அரங்கேற்றப்பட்டது.

 ஆட்சிக் கதிரைகளை கைப்பற்றிய எந்த அரசாங்கங்களும், இதற்கு விதி விலக்காக இருக்கவில்லை. 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் எந்தவொரு அரசாங்கமும்,இன்றுவரை இதயசுத்தியுடன் செயற்பட்டதாக வரலாறு இல்லை. எல்லா அரசாங்கங்களுமே குற்றவாளிகளை பாதுகாப்பதில் தீவிரத்தன்மையைக் கொண்டிருந்தன. ஆரம்பத்தில் இருந்தே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வாக சர்வதேச விசாரணை அவசியமென வலியுறுத்திக் கூறியுள்ளோம்.
இன்று ஆட்சி பீடமேறியிருக்கும் ஸ்ரீசேன அரசாங்கத்திடமும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான அரசியல் விருப்பு இருப்பதாக தெரியவில்லை.

 அதற்கான உதாரணங்களாக போர்க்குற்றவாளிகளாக வர்ணிக்கப்பட்ட ஜெனரல் சரத்பொன்சேகா பீல்ட் மார்சல் தரத்திற்கு உயர்தத்ப்பட்டார். 

மேயர் ஜெனரல் ஜெகத் டயசுகலாட்படையின் பணியாளர்களுக்கு பிரதம அதிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவர்களுக்கூரிய நியமனங்கள் ஸ்ரீலங்காவில் நிலவி வரும் தண்டனைகளில் இருந்து குற்றவாளிகள் தப்புவதற்கான கலாச்சாரம் செத்து விடவில்லை என்பதற்கான அறி குறியாகவே தென்படுகின்றது.

ஸ்ரீலங்காவின் குற்றவாளிகள் குறிப்பாக அரச கட்டமைப்பு சார்ந்த குற்றவாளிகள் தண்டணையில் இருந்து தப்புவதானது நிறுவனமயப்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலே குறிப்பிட்ட கலாச்சாரத்செறிவுத் தன்மை உள்ளக பொறிமுறையின் மூலம் இழைக்கப்பட்ட வன்கொடுமைகளுக்கு நீதிகிடைக்காதது என்பதன் பிரதான காரணியாக விளங்குகின்றது.

இதற்கு பின்னால் உள்ள ஸ்ரீலங்கா அரச கட்டமைப்பிற்கு வலுவூட்டும் சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியல் ஒரு போதும் சிங்கள நாட்டையும், மக்களையும், பௌத்தத்தையும், பாதுகாத்த சிங்கள பேரினவாத விடுதலையின் கதாநாயகர்களாக கொண்டாடப்படும் படைக்கட்டமைப்பையும், அது சார்ந்தவர்களையும், காட்டிக்கொடுத்து இனப்படுகொலை சார்ந்து குற்றவழக்கு தொடர அனுமதிக்கப்போவதில்லை என்பது வெள்ளிடைமலை. 

சிங்கள பேரினவாத அரசால் போர் வீரர்களாக முன்னிலைப்படுத்தப்பட்டவர்கள் ஒரே இரவில் துரோகிகளாக்கப்படுவார்கள். அல்லது குற்றவாளிகளாக்கப்படுவார்கள் என்பது சிறு பிள்ளை நிலாவை கையில் பிடித்து தரும்படி அழுவதற்கு ஒப்பாகும்.
ஆயத மௌனிப்பின் பின்னர் எல்லாருடைய இனத்துவ அடையாளங்கள் களையப்பட்டு ஒரு மித்த ஸ்ரீலங்கா அல்லாது ஸ்ரீலங்கன் அடையாளத்திற்குள் வலிந்து தினிக்கப்பட்டோம்.

இதன் மூலம் இது வரை நடந்த போராட்டத்தின் உண்மைத் தன்மையும் ஏற்புடைமைத் தன்மையும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இனத்துவ அடையாளம் முன்னுரிமைப்படுத்தப்படுவது தேசத்துறோகமாக கட்டமைக்கப்பட்டது.
 இது ஆயத மெனிப்பின் பின் எழுந்த மிக முக்கிய சொல்லாடல் ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மேலும் மேலும் வலு விழப்பு செய்யப்பட்டு அழுவதற்கும் அனுமதி பெற்று அழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். 

பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமையும்,மறுக்கப்பட்டிருக்கின்றது. 
மேற்குறிப்பிட்ட காரணிகள் ஸ்ரீலங்காவில் உள்ளக பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெறுவது என்பது சாத்தியமில்லை என்பதை கூறி நிற்கின்றது.

இவ்வரலாற்று திருப்பு முனையில் காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதி வேண்டிய பயணத்தில் புதிய தந்திரோபாயங்களை வழி வகுத்து போராட்டத்தை இன்னும் வீரியமாக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை வெறுமனே மனித உரிமை சார்ந்த பிரச்சினை அல்ல. இப்பிரச்சினை உதிரியானதாக மட்டும் நோக்கப்பட முடியாது.

 இனப்படுக்கொலை என்ற அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தில் இது ஒரு பகுதி மட்டுமே. ஆனாலும், தமிழின இனப்படுகொலையில் இதன் வகிபாகம் காத்திரமானது. ஏனெனில் தமிழன் அல்லது தமிழிச்சி என்ற ஒரு இனத்துவ அடையாளத்தை தக்க வைத்ததனால் மிகத் திட்டமிடப்பட்டு நோக்கம் தெளிவாக்கப்பட்டு அரச கட்டமைப்பின் உதவியோடு காணாமல் ஆக்கப்படுதல் அரங்கேற்றப்பட்டது. 

குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி அல்லது கிடைத்த உத்தரவின் பேரில் நன்கு திட்டமிடப்பட்டு தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

 இது மானிடகுலத்திற்கு எதிரான குற்றம் மட்டுமல்ல இனப்படுகொலையும் கூட. காணாமல் ஆக்கப்படுதல் எனும் குற்றம் தமிழர்களைப் பொறுத்தவரையில் இனப்படுகொலை என்ற சிங்கள பௌத்த அரசின் பாரிய அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தில் ஒரு பகுதி என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டிய வரலாற்று தேவை எழுந்துள்ளது. 

எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்து என்பதை தெரிந்து கொள்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கின்றது. 

முனித உரிமை சட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதியை தெரிந்து கொள்வதற்கு இட முண்டு .
இது சட்ட ரீதியில் அணுகப்பட வேண்டும். இதுவரைக்கு உதிரிகளாக சட்டத்தை கையில் எடுத்த நாம் இனி கூட்டாக சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாக இப்பிரச்சினையை அணுக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 

இதற்காக ஆயன்ரீனாவில் உள்ள காணாமல் போனவர்களின் தாய்மாரால் சட்டரீதியாக இப்பிரச்சினையை அணுகுவதற்கு சட்டவாளர்கள் அடங்கிய குழு வொன்றை உருவாக்கி இப்பிரச்சினை அணுகப்பட்டது. 

அதேபோல் தான் தமிழர் தரப்பிலும், இப்பிரச்சினை அணுகப்பட வேண்டும். அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. 

இதற்கு  ஐ.நா, இன்ர அமெரிக்கன் கோட், ஐரோப்பிய நீதிமன்று இல் கூறப்பட்டவைகளை அடிப்படையாக கொண்டு எங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்கலாம்.

அடுத்து அரசு மரண அத்;தாட்சிபத்திரம் தருவதை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டதால் நபர் இல்லை என்ற பத்திரம் அமுல் படுத்தப்பட வேண்டும். இது எதிர்காலத்தில் றெப்பரேசன் தொடர்பான கோரிக்கைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளதோடு காணாமல் ஆக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்பில் எந்த மாற்றத்தையும் கொணராமல் அரசின் பொறுப்புக்கூறலை மிக ஆணித்தரமாக வலியுறுத்தும்.

இறுதியாக காணாமல் போனோருக்கான காட்சியகம் அமைக்கப்பட்டு அங்கு அவர்களுடைய புகைப்படத்துடனான முழு விபரங்களும் காட்சிப்படுத்தப்படும் போது குறிப்பாக குற்றவாளிகள் அடங்கிய பட்டியல்கள் வெளித்தெரியப்படுத்தப்படும் போது அரச கட்டமைப்பும் அழுத்தங்களுக்குள்ளாகின்ற தன்மை ஏற்படுத்தப்படுகின்றது.

 இதன் மூலம் உண்மைக்கான தேடலும், நீதி வேண்டிய விடுதலைக்கான பயணமும் விரைவு படுத்தப்படுகின்றது. 

எங்களுக்கான சொல்லாடல் கலாச்சாரத்தை எங்களுக்காக இன்னொருவர் செய்யாமல் நாங்களே கட்டமைக்கின்ற சூழ்நிலை அவசியம் இதற்கு நாங்களே எங்கள் அனுபவங்களை ஆவணமாக்குகின்ற முயற்சி முடுக்கிவிடப்பட வேண்டும். என மேலும் தெரிவித்தார்.


காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் எந்தவொரு அரசாங்கமும்,இன்று வரை இதயசுத்தியுடன் செயற்பட்டதாக வரலாறு இல்லை. அருட்பணி. எழில் இராஜேந்திரம். I Reviewed by Admin on August 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.