அமைச்சர் ரவி கருணாநாயக்க கையெழுத்திட்ட நாணயத்தாள் செல்லுபடியாகுமா..?
இலங்கையில் செல்லுபடியாகும் நாணயத்தாள்களில் கையெழுத்திடுவது நிதியமைச்சரா அல்லது மத்திய வங்கிக்கு பொறுப்பான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவா கையெழுத்திட வேண்டும் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்களின் துறைகளை தீர்மானிக்கும் புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, மத்திய வங்கி, நிதிமைச்சரான ரவி கருணாநாயக்கவின் கீழ் கொண்டு வரப்படவில்லை. பிரதமரின் பொறுப்பில் வரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் மத்திய வங்கி கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் நாணயங்களை, அந்த நாட்டின் நிதியை கையாளும் மத்திய வங்கியே வெளியிடும். உலக நாடுகளில் மத்திய வங்கியானது நிதியமைச்சரின் கீழ் இயங்கி வருகிறது. நிதி தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் நபரான நிதியமைச்சரின் கீழ் மத்திய வங்கிகள் இயங்கி வருகின்றன.
இதனடிப்படையில், நாணயத்தாள்களில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் நபர் ஆகியோர் கையெழுத்திடுவர். முக்கியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஒரு நபரின் கையெழுத்து மாத்திரம் நாணயத்தாளில் இடப்படும்.
இலங்கையின் மத்திய வங்கி, இதுவரை காலமும் நிதியமைச்சின் கீழ் இருந்து வந்ததால், நாணயத்தாள்களில் நிதியமைச்சரும், மத்திய வங்கியின் ஆளுநரும் கையெழுத்திட்டு வந்தனர்.
எனினும் தற்போது மத்திய வங்கி பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. நாணயத்தாளில் மத்திய வங்கியின் ஆளுநரது கையெழுத்து தொடர்பில் பிரச்சினைகள் இல்லை. எனினும் நிதி விவகாரங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய பிரதமரின் கையெழுத்து பதிலாக வேறு ஒருவர் நாணயத்தாளில் கையெழுத்திட முடியுமா?.
மத்திய வங்கி தனது பொறுப்பின் கீழ் இல்லாத சூழ்நிலையில், நிதியமைச்சர் நாணயத்தாளில் கையெழுத்திட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கையெழுத்துடன் அண்மையில் வெளியிடப்பட்ட 5 ஆயிரம் ரூபா மற்றும் 50 ரூபா நாணயத்தாள்கள் செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்க கையெழுத்திட்ட நாணயத்தாள் செல்லுபடியாகுமா..?
Reviewed by Author
on
September 30, 2015
Rating:
Reviewed by Author
on
September 30, 2015
Rating:



No comments:
Post a Comment