அண்மைய செய்திகள்

recent
-

கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக எம்மை காணவருபவர் கலைஞர் அடைக்கலம் அந்தோனிமுத்து அவர்களின் அகத்திலிருந்து.



கலைஞனின் அகம்
கணனியில் முகம்

கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக எம்மை காணவருபவர்  நாட்டுக்கூத்துக் கலைஞர் ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆரம்பக்கல்வியின் ஆசான்  வரவுகவிஞர் சிறுவர் இலக்கியப்படைப்பாளி கவிஞர் கலாபூஷண விருது பெற்ற மூத்த கலைஞர் அடைக்கலம் அந்தோனிமுத்து அவர்களின் அகத்திலிருந்து......................

தங்களைப்பற்றி…
மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவு பிரதேசத்தத்தை பிறப்பிடமாகும் தற்போது மன்னார் எழுத்தூரில் வசித்து வருகின்றேன். எனது தந்தை அடைக்கலம் நாட்டுக்கூத்துக்கலைஞராக இருந்தபடியாலும் எனது தாயனவர் லூர்த்தம்மாவின் வழிநடத்தலினாலும் சிறுபராயத்தில் இருந்தே கலையார்வமும் கல்விச்செயற்பாடுகளும் எனக்குள் உருவாகி இந்த நிலையை அடைந்துள்ளேன்.

தங்களது ஆசிரியர் சேவையின் ஆரம்பம் பற்றி…
எனது சொந்த இடமான விடத்தல் தீவின் ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையின் பழைய மாணவன் நான் எனது 18 வயதிலேயே தொண்டர் அடிப்படையில் ஆசிரியர் பணியை ஆரம்பித்து 1962 ல் அரசாங்க ஆசிரியராக நியமனம் பெற்று 1966ல் யாழ்-கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கல்லுரியில் சேர்ந்து பயிற்சி பெற்று 1968ஆம் ஆண்டில் பயிற்சிபெற்ற ஆசிரியராக வெளியேறினேன்.

தாங்கள் பணியாற்றிய பாடசாலைகள் பற்றி…

நுவரெலியாவில் உள்ள பரிசுத்த திரித்துவக்கல்லுரியிலும் பின்னர் மன்னார் தேவன்பிட்டி – விடத்தல்தீவு-பெரியமடு-தட்சணாமருதமடு-ஆகிய இடங்களில் உதவி ஆசிரியராகவும்  1975ம் ஆண்டு அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து அதிபராகப்பதவி உயர்வு பெற்ற பின்பு கற்கிடந்தகுளம்- விடத்தல்தீவு-தாழ்வுபாடு-ஆண்டாங்குளம் ஆகிய இடங்களில் கடமையாற்றியதுடன். பெரியபண்டிவிரிச்சான்  பாடசாலையை தலமைப்பாடசாலையாகக்கொண்டு அதற்குட்பட்ட பத்துப்பாடசாலைகளை உள்ளடக்கி கொத்தணி அதிபராகவும் கடமையாற்றியுள்ளேன்.

தங்களின் கல்விப்பணிகள் பற்றி…
மன்னார் மாவட்டத்தின் ஆரம்பக்கல்வி அபிவிருத்தியில்  அயராது உழைத்துள்ளேன்
முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி 1972 தொடக்கம் 1990 வரை முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி நெறிகளையும் வளவாளராக பொறுப்பேற்று பல பயிற்சிகளை வழங்கினேன்.
1983 சிறந்த பல்கலைக்கழகத்தில் முன்பள்ளி சான்றிதல் பெற்ற காரணத்தினால் முன்பள்ளி அபிவிருத்தி மேற்பார்வையாளனாகவும் கடமை புரிந்தேன் அத்தோடு நில்லாமல் முன்பள்ளி கல்விச்சேவைகள் சீரமைப்புக்கள் சகலவற்றிலும் மன்னார் மாவட்டம் சார்பில் பங்கேற்று பிரதேச உரையாளராக கடமையாற்றினேன்.

ஆரம்பக்கல்விப்பாடசாலைகளின் அபிவிருத்திச்செயற்திட்டம் இணைப்பாளராகவிருந்து சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணம் விளையாட்டு உபகரணம் மைதானம் நூலகம் நீர்வசதி கட்டிட வசதி ஆகியவற்றைப்பெற்றுக்கொடுத்துள்ளேன்.

தங்களது கல்விச்சேவையில் தங்களால் நிகழ்த்தப்பட்ட சாதனைக்குரிய விடையமாக நீங்கள் கருதுபவை…

என்னுடைய பல சேவைகளில் என்னை மிகவும் கவர்ந்தவை சிறுவர் முன்பள்ளிபாடசாலைகளின் நிகழ்த்தப்பட்டவையே சொல்லுவேன்  1992 வன்னிப்பகுதியில் கொத்தணி அதிபராக பொறுப்பேற்றபோது பெரியபண்டிவிரிச்சான் சின்னவலயன் கட்டுப்பாடசாலை வரை துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தே எனது சேவையை தொடர்ந்தேன் 
சிறுவர்களுக்காகவே மன்னார் மாவட்டத்தில் சிறுவர் வாரம் என்ற ஒன்றை ஆரம்பித்தேன் .
சிறுவர்களுக்கான பழமொழிகள்-ஆத்திசு10டி-கொன்றைவேந்தன்-திருக்குறள்-ஆகியவை மனனப்போட்டிகள்
1-5 வகுப்புரை பேச்சுப்போட்டிகள் 5-நாட்கள்
6ம் நாள் கற்றல் கற்பித்தல்- கண்காட்சி-சிரமதானம்
7ம் நாள் மெய்வல்லுநர் போட்டி உடற்பயிற்சி கண்காட்சி போன்றவற்றை தொடர்ச்சியாக செய்து பலரின் பாராட்டினைப்பெற்றேன்.
1992 ஆண்டு புரட்டாதி 21-22-23-ஆகிய தினங்களில் 10 பாடசாலைகளும் பங்கேற்று  கொத்தணிமட்டப் போட்டிகளை நடத்திக் கலைநிகழ்வுகளுடன் இரவு முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகள் அனைவவையும் மிகவும் கவர்ந்ததோடு மிகவும் பாரட்டையும் பெற்றதோடு எனக்கு மனநிறைiவையும் தந்தது.

அரசகட்டுப்பாட்டு பகுதிக்குள் -
சிறுவர் வாரம் 1996 ம் ஆண்டு உதவிக்கல்விப்பணிப்பாளாராக பொறுப்பேற்ற போது இச்செயற்றிட்டம் மன்னார் வலையப்பாடசாலைகள் மட்டத்தில் அமுலாக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வுக்கு வருகைதந்திருந்த மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர்  திரு.டிவகலாலா அவர்கள் எனது புத்தாக்கத்தினை விதந்து பராட்டியதுடன் மலரத்துடிக்கும் அரும்புகள்  மலரையும் வெளியிட்டு வைத்தமையையும் இனிய நினைவுகள் எனது இச்செயற்பாடகள் நல்லமுறையில் நடக்க மிகவும் ஊக்கமளித்து உதவியவர்களான அமரர் எஸ்-வேதநாயகம்ää ஜனாப் அப்துல் ஹக் இருவரையும் என்றும் மறவேன்.

தங்களின் கவிதையாற்றல் பற்றி-

எந்த தலைப்பை தந்தாலும் நினைத்தாலும் அவ்விடத்திலே கவிதையாத்துவிடுவேன் அந்தளவு திறமையினை ஆண்டவன் தந்தள்ளார்  பெரும் கொடைதான் என்னால் வாழ்த்துப்பாமாலை வரவேற்புப்பா பிரியாவிடைக்கவிதைகள் அத்தோடு

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் கீதம்

மன்-ஆண்டாங்குளம் றோ.க.பாடசாலை  கீதம்

மன்-பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தின் கீதம்
 
விடத்தல் தீவு மரியன்னை பேரில் பாடப்படும் பாடல் அடைக்கல மாதாவே உமது புகழ்…
மன்னார் அமுது எனும் புனைபெயரில் ஆக்கங்களை இப்போதும் எழுதி வருகிறேன்.
அத்தோடு பத்திரிகைகளில்  சிறுகதைகள் கட்டுரைகள் கவிதைகள் எழுதியுள்ளேன் 2007 டிசம்பர் 27ல் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் கஸ்ரங்கள் பற்றிய கட்டுரை சுடரொளியில் வெளிவந்தது.
மன்னார் அமுது காத்திருப்பு தினக்குரலில் 10-01-2010
பிரிந்தவர் கூடினால் தினகரனில்  07-05-2009 வெளிவந்துள்ளது.


தங்களது முதலாவது கவிதைப்படைப்பு பற்றி---

1998ம் ஆண்டு “பாலர் கவிதைகள் ஐம்பது”சிறுவர் பாடல் தொகுப்பாக வெளியிட்டேன் அப்போது அது எனது பெரும் படைப்பாக கருதினேன் அதிலும் சில பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள் தற்போது 10 கவிதைகள் தான் பாடலாகவும் ஒரு நூலாகவும் வெளியிடுகிறார்கள் சிறந்த வர்ணத்தில் படங்களுடன் அடடைப்படமும் கண்ணைக்கவரும் வகையில் வெளியிடுகிறார்கள்.

சிலுவைப்பாதை சிந்தனையாக-2002
வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம் என்ற கருப்பொருளில் நூல் வெளியிட்டேன் அதுமட்டுமல்லாமல் பல நூல்களுக்கு திறனாய்வு செய்துள்ளேன்
நாவண்;ணனின்-அக்கினிக்கரங்கள்
அருட்சந்தை வின்சன்பற்றிக்கின்-உளவளத்துணை
மன்னார் அமுது-மடுமாதா காவியம்
மன்னார் ஆயுர் வேதசபையின்- மருத்துவக்கதிர்
அருட்தந்தை தமிழ்நேசனின்  - தண்ணீருக்குள் தாகமா… போன்ற நூல்களுக்கும் தற்போது வந்து கொண்டிருக்கும் நூல்களுக்கும் எழுதி வருகின்றேன்.

எழுத்து துறை தவிர்ந்து ஏனைய துறைகளில் ஆர்வம் இல்லையா—

ஏன் இல்லை எழுத்துத்துறையோடு நடிப்புத்துறையிலும் எனது பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளேன் மன்;னார்  கல்வித்திணைக்களத்தின் நிதி உதவிக்காட்சியாக அமரர் தொ.மகஸிமல் லெம்பட் அவர்களின் நெறியாள்கையில் அரங்கேறிய “பாதுகை” நாடகத்தில் பரதன் பாத்திரத்திலும் வில்லியம்தெல் நாடகத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளேன். அத்தோடு முருங்கன் பங்கில் 1981 தவக்கால அரங்கேற்றத்தில் திருப்பாடுகளின் காட்சியில் புனித திருமுழுக்கு யோவானாக நடித்து புகழ் பெற்றேன்
வுhழ்வுதயத்தில் பணியாற்றியபோது உறவுப்பால நிகழ்வுகளையும்  கலைநிகழ்ச்சிப்பரிமாற்றங்களையும் ஒழுங்குசெய்ததோடு பல நாடகங்களை நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளேன்.
2001ம் ஆண்டில் மன்னார் கலை இலக்கியப்பேரவையை ஆரம்பித்து தலைமையேற்று 2 வருடங்கள் பல நிகழ்வுகளை அரங்கேற்றம் செய்துள்ளேன்.
     
தங்கள் சமூகப்பணி பற்றி- 
நான் இனம் மதம் மொழி பேதம் கடந்த உறவினிலே நம்பிக்கை கொண்டவன் எனது சேவைக்காலத்திலும் தற்போதும் சமூகப்பணிகள் பலவற்றில் என்னை ஈடுபடுத்தி வருகின்றேன்
மன்னார் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளராகவும் தலைவராகவும் கடமையாற்றி ஆன்மீகத்தில் ஆசிரியர்கள் இணைத்துள்ளேன்.
துற்போது மன்னார் மறைமாவட்ட அருட்பணிப்பேரவையின் உறுப்பினராகவும் பொதுநிலையினர் பேரவையின் தலைவராகவும் செயலாற்றி வருகின்றேன்
கலைவழி இறைபணி இறைபணி புரியும் திருமறைக்கலாமன்றத்தின் நிறைவேற்று சபையின் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றி வருகின்றேன்.
 

மன்னாரின் கலைவளர்ச்சி எவ்வாறு உள்ளது….

துற்போது எனக்கு 74 வயது எனது இளமைக்காலத்தில் கலை இலக்கியப் பேரைவ தொடங்கியிருக்கலாம் தொடங்கினேன் எனது 52 வயதில் அப்போது எனக்கு ஊக்கமோ ஆக்கமோ யாரும் தரவில்லை என்னிடம் 150ற்கு மேற்பட் முன்பள்ளி ஆசிரியர்கள் இருந்தபோதிலும் 2வருடங்களுக்கு மேலாக கலை இலக்கியப்பேரவையை தொடர்ச்சியாக கொண்டு செல்ல முடியவில்லை… ஒவ்வொருவரும்  ஒவ்வோரு சிந்தனையில் எனக்கும் அதிகமான வேலைச்சுமை ஒழுங்கான கலையார்வம் உள்ளவர்கள் என்னோட இணைந்திருந்தால் இந்த 20 வருடத்தில் எத்தனை கலைஞர்களை; உருவாக்கியிருப்பேன்.

மன்னார் மாவட்டத்தினை கலை சிறப்பு மிகுந்த மாவட்ட உருவாக்கியிருப்பேன். காலம் கடந்த ஞானம் பயன் ஏதும் இல்லை… தற்போது மன்னாரைப்பொறுத்தமட்டில் பல அமைப்புகள் பல வகையான அபிவிருத்தி செயற்திட்டங்கள் நடைபெறுகின்றது அதிலும் குறிப்பாக கலை இலக்கிய வளர்ச்சியும் ஏற்றம் கண்டுள்ளபோதும் ஒரு சிலரின் குறுகிய எண்ணத்தினாலும் சிந்தனையாலும் குறுகிய வட்டத்திற்குள்தான் சுழன்று கொண்டுதான் இருக்கிறார்கள் இவர்கள் மூத்தவர்களை மதிப்பதும் இல்;லை கண்டு கொள்ளுவதும் இல்லை வளர்ந்து வரும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளும் குறைவு இருந்தபோதிலும் நாவலாசிரியர் எஸ்.ஏ.உதயன் கலாபூஷணம் குழந்தை மாஸ்ட்டர் இன்னும் பலரால் மன்னாரின் புகழ் பரவிக்கொண்டுதான் இருக்கின்றது பாராட்டுக்குரியது எப்படியாக இருந்தபோதிலும் அங்கொன்றும் இங்கொன்றும் மறைவாக வாழ்ந்து கொண்டு இருக்கும் கலைஞர்களை தேடித்தேடித் வெளிக்கொண்டுவரும் ஒப்பற்ற செயலை என்னையும் பேட்டிகாணும் அன்பர் வை.கஜேந்திரன் காணும் இவ்விதமாக எம்மைப்போன்ற கலைஞர்களை வெளிக்கொனரவெனவே அதுவும் குறிப்பாக மன்னார் கலைஞர்களுக்கு மணிமகுடம் சு10டும் நியூ மன்னார் இணையம் மன்னார் மண்ணில் உருவாகி நல்லதொரு சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றமையும் இடைவிடாத இப்பணிதொடரவேண்டும் இனிவரும் காலம் மன்னாரிற்கு பொற்காலம் தான்.

ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் என்ற வகையில் கல்வி முறையில் மாணவர்களின் அன்றைய நிலையும் இன்றைய நிலையும்….

நல்லதொரு கேள்வி… எனது ஆரம்ப கல்விச்செயற்பாடு கிராமங்களை உள்ளடக்கியதாகவே அமைந்தது ஒரு கிராமத்தில் ஒரு மாணவன் சாதாரணதரம் கற்றுக்கொண்டிருந்தவன் பொருளாதார வசதியின்மையால் பரீட்சையில் சித்தியடையவில்லை அதனால் அவன் மாடுமேய்த்துக்கொண்டிருந்தான். அந்த வேளையில் தான் நான் அங்கு கடமைபுரிவதற்கு சென்றிருந்தேன் அவனைக்கூப்பிட்டு என்ன பிரச்சினை எனவிசாரித்தேன் அவன் தனது நிலமையை சொன்னான் நீ வெளிவாரியாக சாதாரண தரம் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வைத்தேன் அத்தோடு அவனுக்கு பரீட்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன். நானே படிப்பித்தேன் அவன் சாதாரண தரம் உயர் தரம் இரண்டிலும் பாசாகி விவசாயத்துறைக்கு தெரிவானான் தற்போது சிறந்த கிராம சேவகராக பணியாற்றுகிறான் அத்தோடு சிறந்த வாழ்வை அமைத்து வாழ்கிறான். இந்த மாணவனைப்போல இன்னும் பலர் உளர் இவர்கள் எண்ணைக்காணும் போது காட்டுகின்ற மரியாதை நன்றியுணர்வு மனம் நெகிழ்ந்து போகிறேன்
ஆன்றைய மாணவர்களும் அவர்களது சிந்தனையிலும் கல்வி மட்டும் தான் இருந்தது. இன்றை சு10ழல் செல்லவே தேவையில்லை எல்லாமே நவீனம் தான் மாணவர்களை ஒரு ஒழுங்கான செயற்பாட்டிற்கு கொண்டு வருதல் மிகவும் கடிணமாகவுள்ளது இருந்தாலும் கொண்டுவரவேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது இதை மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணரவேண்டும் அப்போதுதான் நன்மை உண்டாகும்…

தற்போதைய ஆசிரியர்களின் நிலை பற்றி-

எல்லாமே மாறிக்கொண்டுதான் போகிறது… இன்றைய நிலையில் எல்லாமே மனவேதனையடையவேண்டிய நிலைதான் ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகளை செய்கிறார்கள் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ஒவ்வொருவரிடமும் தியாக உணர்வு பண்பு பகிர்வு கடமையுணர்வோடு கற்றுக்கொடுக்க வேண்டும் அது போல மாணவர்களும் நல்ல முறையில் கற்று கொள்ள வேண்டும்… வெறுமனே நேரத்தினை கடத்தி விட்டு சம்பளம் பெறுவதும் முழுமையான மனத்திருப்தியை தருமா…எங்கள் காலத்தில் எமக்கு கிடைத்த ஊதியத்தோடு ஒப்பிடுகையில் பலமடங்கு அதிகமாகவே உள்ளது அன்று சேவை அதிகம் ஊதியம் குறைவு இன்று சலுகையும் ஊதியமும்  அதிகம் சேவை குறைவு….

தற்போது மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளுக்கு நவீனம் பல வகைகளில் துணைபுரிகின்றது கற்றலை இலகுவான முறையில் கொண்டசெல்கின்றது இதனால் ஆசிரியர்கள் மீது தங்கியிருக்கவேண்டிய சுழ்நிலை இல்லை தமது கல்விச்செயற்பாட்டை தாமாகவே நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கு சகலவசதி வாய்ப்புக்களையும் நவீன யுகம் வழங்குகின்றது. அரசாங்கத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் ஊதியங்கள் பெறுகின்ற ஆசிரியர்கள் அவற்றின் மூலம் தம்மை வளப்படுத்திக்கொள்வதுடன் மாணவர்களை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்துகின்றார்களா என்றால் இல்லை என்பதே உண்மை எல்லோரும் அல்ல ஒரு சிலர் ஆசிரியத்தொழிலுக்கு பெருமை சேர்க்கின்றார்கள் ஆசிரியர்களிடத்தில் மாணவர்களுக்கும் மாணவர்களிடத்தில் ஆசிரியர்களுக்கும் மரியாதையும் மனிதமாண்பும்  இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களின் மனப்பாங்கை அறிந்து கொண்டு அவர்களுக்கான கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டால் இனிவருங்கால மாணவசமதாயம் சிறப்பாக அமையும்.
     

கலைஞனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் எவையென நீங்கள் கருதுகிறீர்கள்…

பல்வேறு வகையான திறமைகள் கலைஞனுக்கு இருக்க வேண்டும் பாடல் ஆடல் நடிப்பு கவிதையாத்தல் என பல வரையறைகள் அந்தக்காலத்தில் இருந்தது உடனே கலைஞனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள.; யாப்பு இலக்கணம் செய்யுள் இலக்கியம் விதிகள் கடப்பாடுகள் புலவர்களோ பண்டிதர்களோ மகான்களோ தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே படித்தவர்கள் மட்டில் தான் எல்லாமே…

அவற்றை மாற்றியமைத்தான் மகாபாரதி பின்பு பாரதிதாசன் பின் பல்லாயிரம் புலவர்கள் பண்டிதர்கள் கல்விமான்கள் அப்படியிருந்த காலம் மாறி தற்போது எல்லோருமே கலைஞர்கள் தான் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் போல வாயில் வருவதை எல்லாம் எழுதி நூலாக்கி விட்டு தானுமி; கலைஞன் தான் மார்பு தடடிக்கொண்டுதிரியும் பலர் நம்மிடையே உள்ளனர் இவர்கள் கலைஞர்களா… எந்தவொரு படைப்பும் மக்களால் விரும்பி படிக்கவும் அப்படைப்பு மக்களுக்காக வாழுகின்றதோ அதுதான் அப்படைபினை வெளிக்கொணர்ந்த கலைஞனை நினைவுபடுத்தி அச்சமூகத்தில் அவனை கலைஞனாக நிலைநிறுத்தும் அத்தோடு எண்ணமும் செயலும் ஒன்றாய் செயற்பாடாக வெளிப்படவேண்டும் சொல்லும் செயலும் வாழ்வாககொண்டவன் தான் உண்மையான கலைஞன் ஆவான்
தலைசிறந்த கலைஞன் தன்னை கலைஞராக பிரகடனம் செய்து கொள்ள மாட்டான் தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழ் தமிழாக இருக்க வேண்டும்.
உங்களை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் வழிகாட்டி என்றால் யாரை நினைவில கொள்வீர்கள்…

எனது வழிகாட்டியாக தமிழ்மணி அகளங்கன் அவர்களைச்சொல்வேன் ஏன் என்றால் அவருடைய எழுத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் ஒற்றுமையுண்டு அவரது ஒவ்வொரு செயற்பாடுகளை நான் நன்கு அறிந்திருக்கிறேன் அவருடன் பழகியதினாலும் சொல்கிறேன் அவரிடம் ஒரு முறை கேட்டேன் ஏன் அகளங்கன் என பெயர் வைத்தீர்கள் எனக்கேட்டபோது களங்கம் அகளங்கன் களங்கமற்றவன் என்றார் அதுபோலவே அவரும் அவரது குடும்பத்தினரும் எண்ணமும் செயலும் ஒன்றாக இருப்பதால் அவரை வழிகாட்டியாக கொண்டுள்ளேன்.

நீங்கள் மிகவும் சந்தோஷமடைந்த விடையம் பற்றி-

நான் எனது வாழ்க்கையில் மிகவும் சற்தோஷமடைந்த விடையம் என்று சொன்னால் அது நான் முன்பள்ளி ஆசிரியராக அதிபராக கடமையாற்றியது தான் முன்பள்ளி  என்றால் அது அந்தோனிமுத்துதான் என்று சொல்லும் அளவிற்கு எனது சேவை செயற்பாடு இருந்தது அந்தளவிற்கு நான் எனது கடமையை சரிவரச்செய்துள்ளேன் என்ற மனத்திருப்தியுள்ளது.

மிகவும் மனமுடைந்து போனவிடையம் பற்றி---
எனது வாழ்வில் என்னை மிகவும் பாதித்த விடையமாக என்னால் கொண்டுவரப்பட்ட சிறுவர் வாரத்தினை திறம்படச்சொய்து நான் மன்னாருக்கு மாற்றலாகி வந்த போது மன்னாரில் அச்சேவையை தொடரும் போது பல எதிர்ப்புகள் முரண்பாடுகள் ஒருசிலரிடம் எதிர்பார்ப்பும் இருந்தது எதிர்ப்புக்களை மீறி சில அதிகாரிகளின் உதவியுடன் திறம்படச்செய்யவேண்டும் என்ற ஊந்துதலில் இருக்கும் போது எனது பணிக்காலம் நிறைவுக்கு வந்து விட்டது.
மீண்டும் சேவை அதிகரிப்பு விண்ணப்பம் கோரியும் ஒரு சிலரின் எண்ணத்தால் எனது நியமனம் இரத்து செய்யப்பட்டது என்னை மட்டம் தட்டி ஏளனம் செய்து மட்டுப்படுத்தி ஒதுக்கி தனிமைப்படுத்தி விட்டார்கள் எனக்கு ஆசிரியர்த்தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாது எனது எண்ணமும் செயலும் மணவர்களின் கல்வி நிலை வளர்ச்சி எழுச்சி பற்றியதே எல்லாவற்றிலும் இருந்து என்னை விலக்கி வைத்தது.

 என்னை பெரிதும் பாதித்தது இருட்டறையில் தள்ளியது போல…
நான் எனது உள்ளத்தை சிதைவடைய விடவில்லை உளவியல் படித்ததன் மூலமும் இறைவனின் அருளாளும் அந்த இருட்டறையில் இருந்து வெளிவந்து விட்டேன் வேறு ஒருவர் என்றால் கட்டாயம் இறந்திருப்பார்… வாழ்வில் மறக்கமுடியாதவை அந்த நினைவுகள் இன்னும் ….

மன்னாரில் கலைஞர்களுக்கு கௌரவம் எவ்வாறு உள்ளது…

முன்பைவிட பரவாயில்லை இப்போது பல அமைப்புக்கள் மன்னாரில் தமது இலக்கியப்பணியை செயலாற்றுகின்றது பாராட்டுக்குரியது சில அமைப்புக்கள் இன்னும் குறுகிய வட்டத்திற்குள் நின்று தான் செயற்படுகின்றது அந்த குறுகிய மனப்பாங்கு மாறுமானால் மன்னார் இன்னும் பல மடங்கு பொலிவுடன் பிரகாசமாய் ஒளிரும். ஏனக்கு 2007ம் ஆண்டு கலாபூஷணம் அரசவிருது கிடைத்ததை முன்னிட்டு மன்னார் திருமறைக்கலாமன்றத்தால் கௌரவித்து விருதும் தந்துள்ளார்கள் அதுபோல பல அமைப்புக்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்கள் எனக்குண்டான மதிப்பும் கௌரவமும் எனது மாவட்டத்தில் உள்ளது மனமகிழ்ச்சியே…

தங்களின் சமூக சேவைகள் பற்றி-

மன்னார் பொது நூலக நிர்வாக உறுப்பினர்.
மன்னார் சைவத்தமிழ் இலக்கிய அமைப்பின் நிர்வாக உறுப்பினர்.
மன்னார் சிரேஷ்ட முதியோர் சங்கத் தலைவர்.
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க முதியோர் சங்கத்தின் செயலாளர்.
மன்னார் செபஸ்தியார் பேராலயத்தின் முதியோர் சங்கத்தின் பொருளாளர்.
மன்னார் அடம்பன் பொதுச்சேவை ஊழியர் சங்கத் தலைவர்.
மன்னார் சர்வோதய சபையின் நிர்வாக சபை உறுப்பினர்.
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்.

மன்னாரின் சொத்து நியூ மன்னார் இணையம் பற்றி தங்களின்….

நீங்கள் என்னைத்தேடி வந்து பேட்டியெடுத்து நியூ மன்னார் இணையத்தில் வெளிக்கொணர்வது ஆச்சரியமாகவும்! அதிர்ச்சியாகவும் …! உள்ளது ஏன் என்றால் எல்லாம் முடிந்தது. என இருக்கும் போது இல்லை இன்னும் இருக்கு என்று சொல்வது போல இதுவரை மன்னாரில் இப்படியானதொன்று இல்லையே என்ற கவலை இருந்தது இன்றோடு அந்தக்கவலையும் பறந்தது எனது மனப்பாரமும் குறைந்தது நியூ மன்னார் இணையத்தின் சேவையே சிறந்தது…

நியூ மன்னார் இணையத்திற்காக…
வை.கஜேந்திரன்  













கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக எம்மை காணவருபவர் கலைஞர் அடைக்கலம் அந்தோனிமுத்து அவர்களின் அகத்திலிருந்து. Reviewed by Author on September 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.