அண்மைய செய்திகள்

recent
-

சுதந்திர இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்து வந்த பாதை...


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கதுருவெல, நவோதய விளையாட்டரங்கில் இன்று நடைபெறுவதையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

இலங்கையின் சுபீட்சத்திற்கும் மேம்பாட் டுக்கும் அளப்பரிய பங்களிப்பு செய்து வருகின்ற பிரதான அரசியல் கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாகும். அதனால் இவ்வரசியல் கட்சி இந்நாட்டு அரசியல் வரலாற்றில் தனக்கென தவிர்க்க முடியாத தனியொரு இடத்தைப் பிடித்து விளங்குகின்றது.

முன்னாள் பிரதமர் மறைந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டது தான் இந்த அரசியல் கட்சி. அவர், தான் நினைத்த மாத்திரத்திலோ, எடுத்த எடுப்பிலேயோ இக்கட்சியை அமைத்துவிடவில்லை. மாறாக சுமார் மூன்று தசாப்த கால பொது வாழ்வில் தாம் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தான் அவர் இக்கட்சியை அமைத்தார். இது மறைக்க முடியாத உண்மை.

எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க

நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பியரின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் இந்நாட்டுக்கு சுயாட்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ஆரம்பமானது. அதனடிப் படையில் சுயாட்சி பெறுவதையே நோக்கமாகக் கொண்ட தேசப்பற்றாளர் கட்சி 1926 இல் ஆரம்பிக்கப் பட்டது. அதன் தலைவராக எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க இருந்தார். இதேநேரம் இலங்கை தேசிய சங்கத்தின் செயலாளர் பதவி, 1934 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சிங்கள மகா சபையின் தலைவர் பதவி, 1945 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் பதவி ஆகிய பதவிகளை வகித்த எஸ்.டபிளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க 1930 கள் முதல் பிரதிநிதிகள் சபையில் அங்கத்தவராகவும் இருந்து வந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் பிரதிநிதிகள் சபையில் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த எஸ்.டபிளியு.ஆர்.டி. பண்டாரநாயக்கா 1945 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதியன்று சுதந்திர இலங்கைச் சட்டத்தை பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்தார். இச்சட்டம் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் பிரித்தானியா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும் இலங்கைக்கு டொமினிக்கன் அந்தஸ்து வழங்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்தது. அதனால் சோல்பரி பிரபுவின் யாப்பை பிரநிதிகள் சபை ஏற்க வேண்டிய நிலைமை உள்ளானது.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைக்கப்பெறப்போவதற்கான உறுதிப்பாடு தென்பட்டதைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவென அரசியல் கட்சிகளும் தோற்றம் பெற்றன. அந்த வகையில் தேசிய மட்ட அரசியல் கட்சியின் தேவையை உணர்ந்த இந் நாட்டுத் தேசியத் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை ஸ்தாபித்தனர். மறைந்த பிரதமர் தேசபிதா டி.எஸ். சேனாநாயக்க அதன் முதலாவது தலைவரானார். எஸ்.டபிளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க அதன் உபதலைவராகத் தெரிவானார்.

இவ்வாறான நிலையில் 1947 இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் அத்தனகல்ல தொகுதியில் போட்டியிட்ட எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க அதிகப்படியான வாக்குகளால் தெரிவாகி சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் சுகாதாரம் உண்ணாட்டு மருத்துவ அமைச்சரானார். இருப்பினும் எஸ்.டபிளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க தேசியத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கத்திற்கு அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இதனால் கொள்கை ரீதியான முரண்பாடு ஏற்பட்டது.

இவ்வாறான சூழ்லில் 1951 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தில் விசேட உரையாற்றி தன் நிலைப்பாட்டை முன்வைத்த எஸ்.டபிளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கத்தையும், அமைச்சுப் பதவியையும் விட்டு வெளியேறி எதிரணிக்குச் சென்று அமர்ந்தார். அதனோடு சேர்த்து புதிய அரசியல் பயணம் குறித்து அவர் சிந்திக்கவும் தொடங்கினார். அதன்படி தாம் கடந்து வந்த பொது வாழ்வில் பெற்றுள்ள அனுபவங்களைப் பின்புலமாகக் கொண்டு நாட்டினதும் நாட்டு மக்களினதும் சுபீட்சத்தையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தூரநோக்கோடு சுமார் ஐம்பது நாட்களில் அதாவது 1951 செப்டெம்பர் 02 ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தார். தேரர்கள், வைத்தியர்கள், விவசாயிகள், தொழி லாளர்கள், ஆசிரியர்கள் ஆகிய ஐம்பெரும் சக்திகளை ஒன்றிணைக்கும் தொனிப் பொருளுட னேயே இக்கட்சி உதயமானது.

நாடு சுதந்திரமடைந்து மூன்று வருடங்கள் நிறைவடைவதற்குள் தேசியத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய தேவையை நிறைவு செய்யும் வகையில் இக்கட்சி உருவானது.

இக்கட்சி ஸ்தாபிக்கப்பட்ட சொற்ப காலத்தில் அதாவது 1952 இல் பொதுத் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் எஸ்.டபிளியு.ஆர்.டி. பண்டாரநாக்க தலைமையிலான ஸ்ரீல.சு.கட்சி 09 ஆசனங் களை வென்றெடுத்தது. இருப்பினும் இவர்கள் எதிர்க்கட்சி ஆற்ற வேண்டிய பணியை உரிய முறையில் நாலாண்டு காலப் பகுதியில் நிறைவேற்றினர். இதன் விளைவாக 1956 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீல.சு. கட்சி தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன் மூலம் எஸ்.டபிளியு. ஆர்.டி. பண்டாரநாயக்க பிரதமரானார். இதுவே 56 புரட்சி எனப்படுகின்றது.

ஸ்ரீல.சு.கட்சித் தலைவரான பிரதமர் எஸ்.டபிளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க இப்பதவிக் காலத்தில் நாட்டில் புரட்சிகர வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்தார். அவற்றில் சுய மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பு குறிப்பிடத்தக்க ஒன்று.

அதுவரைக்கும் நாட்டில் குறிப்பிட்ட பிரிவின ருக்காக மட்டுப்படுத்தப்பட்டிருந்த கல்வி வாய்ப்பு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக நகரம், கிராமம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகள் இன்றி எல்லா மட்டத்தினரும் கல்வியில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். இதன் பயனாக கற்றவர்களும், புத்திஜீவிகளும் ஆயிரக்கணக்கில் உருவாகத் தொடங்கினர். அதன் பயனை நாடே அனுபவிக்க ஆரம்பித்தது.

இதேவேளை உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப வலுவான அரச துறையின் அவசியத்தை உணர்ந்த பிரதமர் பண்டாரநாயக்க துறைமுகங்கள், விமான நிலையம், போக்குவரத்து சேவை என்பவற்றை மக்கள் மயப்படுத்தினார். நெற்காணிகள் சட்ட த்தின் ஊடாக விவசாயிகளை வலுப்படுத்தினார். அணிசேராக் கொள்கையை நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையாக அறிமுகப்படுத்தினார். அத்தோடு வாக்குரிமை வயதெல்லையை 21 இலிருந்து 18 க்குக் குறைத்தார். அத்தோடு சாதாரணமானவரும் பாராளுமன்ற உறுப்பினராக முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தியதும் ஸ்ரீல.சு.கட்சியே.

இக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான மறைந்த பிரதமர் பண்டாரநாயக்க நாட்டின் சகல துறை களினதும் சுபீட்சத்திலும் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதன் பயனாக அவர் நாட்டில் மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் ஆற்றிய சேவைகள் இந்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட்டுள்ளன. அத்தோடு இன்றும் கூட அச்சேவைகள் நினைவு கூறப்படுவதுடன் எதிர் காலத்திலும் அவை நினைவு கூறப்படும் என்பது உறுதியானது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க

இருப்பினும் எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டார நாயக்கவின் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்ற மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் இந்நாட்டில் பலவிதமான சேவைகளை மேற் கொண்டுள்ளார். மூன்று தடவைகள் பிரதமராகப் பதவி வசித்துள்ள அவர் உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற நற்பெயரின் மூலம் இலங்கைக்கு மாத்திரமல்லாமல் உலகப் பெண் களுக்கே பெருமை தேடிக்கொடுத்தார்.

அதேநேரம் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அவர் முன்னெடுத்த வேலைத்திட்டங்களில் பாடசாலை கல்வி, சுகாதார மேம்பாட்டு வேலைத் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அத்தோடு அரச சேவையை வலுப்படுத்தவென இவரும் பல நிறுவனங்களை உருவாக்கினார்.

மக்கள் வங்கி, இலங்கை காப்புறுதி கூட்டுத் தாபனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இவரது சிந்தனையில் உதயமானவையே.

மேலும் 1971 இல் மக்கள் விடுதலை முன்ன ணியின் இளைஞர் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்திய அவர், சுய பொருளாதாரத் தன்னிறைவுக் கொள் கையையும் அறிமுகப்படுத்தினார். அத்தோடு இலங்கையை 1972 இல் குடியரசாக மாற்றிய பெருமையும் இவரையே சாரும்.

மேலும் அணிசேரா இயக்கத்தின் உலகளாவிய மாநாடு 1976 ஆம் ஆண்டு இலங்கையில் நடாத்தப்பட்டது. அதனூடாக அணிசேரா இயக்கத்தின் தலைமைப் பதவியையும் இவர் இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்தார்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

இவ்வாறு பல்வேறு சேவை களை இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள ஸ்ரீல.சு. கட்சியின் இரண்டாவது தலைவி யான ஸ்ரீமாவோ பண்டாரநாயக் கவின் மறைவைத் தொடர்ந்து கட்சியின் தலைமைப் பதவியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க பொறுப்பேற்றார். இந் நாட்டின் நிறை வேற்று அதிகாரம் கொண்ட முதலாவது பெண் ஜனாதிபதியும் இவரேயாவார்.

சிங்கள - தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட் டிருந்த சந்தேகங்களை களைந்து புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பவென இவர் தம் பதவிக்காலத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். அவற்றில் வெண் தாமரை இயக்கம், தவளம போன்ற வேலைத்திட்டங்கள் குறிப் பிடத்தக்கவை.

அத்தோடு புலிகள் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணவும் முயற்சி செய்தார். அத்தோடு நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் அரசியல் யாப்பை மாற்றி பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுத்தார்.

இவை இவ்வாறிருக்க நாட்டின் பல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் பல பல்கலைக்கழகங்கள் இவரினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. இதன் பயனாக பல்கலைக் கழகக் கல்வி வாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

மஹிந்த ராஜபக் ஷ

இவரைத் தொடர்ந்து இக்கட்சியின் தலைமைப் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றார். அவர் தேசியப் பிரச்சி னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயற்சி செய்த போதி லும் அம்முயற்சி பயன ளிக்கவில்லை. அதனால் மனிதாபிமான இரா ணுவ நடவடிக்கை மூலம் மூன்று தசாப்த காலம் நீடித்த ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இந்நாட்டின் வீதிக் கட்டமைப்பு அபிவி ருத்தியில் விசேட கவனம் செலுத்திய இவர், இந்நாட்டின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையை தெற்குக்கென நிர்மா ணித்து 2011 இல் திறந்து வைத்தார். அத்தோடு தனியார் மயப்படுத்தப் பட்டிருந்த ஷெல்கேஸ் நிறுவனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இவரது ஆட்சிக் காலத்திலேயே மீண்டும் அரசுட மையாக்கப்பட்டது.

மேலும் 2013 ஆம் ஆண்டில் பொது நலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டை இந் நாட்டில் நடாத்தி அவ் வமைப்பின் தலை மையை இலங்கை க்குப் பெற்றுக்கொடுத்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இவரைத் தொடர்ந்து இக்கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஜனவரியில் ஏற்றார். என்றாலும் இவர் இக்கட்சியின் பொதுச் செயலாளராக ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாகக் கடமையாற்றியுள்ளார்.

இப்பதவிக் காலத்தில் இவர் நாட்டுக்காக பலவித சேவைகளை ஆற்றியுள்ளார். அவற்றில் 2001 ஆம் ஆண்டில் வீழ்ச்சி கண்ட ஸ்ரீல.சு.கட்சி தலைமையிலான ஆட்சியை இரண்டாண்டுகளில் மீளவும் கட்டியெழுப்பினார்.

இதற்காக இரவு பகல் பாராது இவர் அயராது உழைத்தார். இதனடிப்படையில் 2004 இல் ஸ்ரீல.சு.கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டது. அவ்வுடன் படிக்கையில் ஸ்ரீல.சு.கட்சி பொதுச் செயலாளர் என்ற வகையில் இவரே கையெழுத்திட்டார்.

இதனூடாக 2004 ஏப்ரலில் ஸ்ரீல.சு.கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சிப் பீடமேறியது. இதற்காகப் பாரிய பங்களிப்பு செய்த பெருமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே சாரும்.

அதேநேரம் இவர் விவசாயம் நீர்ப்பாசனம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார்.

அதனால் மக்கள் நலன் சார்ந்த பல தேசிய வேலைத்திட்டங்கள் இவர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஐம்பது கிலோ கிறாம் கொண்ட ஒரு பசளை மூடையை ரூபா 350.00 என்ற மானிய விலைக்கு வழங்கும் திட்டம், மரக்கறி உள்ளிட்ட விவசாய உற்பத்திகளில் தன்னிறைவை அடைவதற்கான பயிர் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் திட்டம், விவசாயிகளுக்கு நீர் வழங்கும் மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம், தேசிய மருந்துப் பொருட் கொள்கை, புகைப்பிடித்தல் பாதிப்புக்களை சித்தரிக்கக்கூடிய படங்களை சிகரட் பெட்டிகளில் காட்சிப்படுத்துவதற்கான நடவடிக்கை.

நாட்டிலுள்ள பிரதான ஆஸ்பத்திரிகளின் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவுகளில் சேவை வழங்கும் நேரம் நீடிக்கப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்கவை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்களை அரசியல் யாப்புக்கான 19வது திருத்தத்தின் ஊடாகக் குறைத்த பெருமையும் இவரையே சாரும்.

ஸ்ரீல. சு. கட்சி ஸ்தாபிக்கப்பட்ட நோக்கம், கொள்கை, கோட்பாடுகளின் அடிப் படையில் நவீன யுகத்துக்கு ஏற்ப கட்சியை மீளவும் கட்டியெழுப்புவதற்கான சகல நடவடிக்கை களையும் அவர் முன்னெடுத்துள்ளார். அத்தோடு நாட்டினதும், நாட்டு மக்களினதும் மேம்பாட்டையும், சுபீட்சத்தையும் கருத்தில் கொண்டு விரோத அரசியலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஐ. தே. க. தலைமைத்துவ இணக்கப் பாட்டுடன் புதிய அரசியல் கலாசாரத்தையும் நாட்டில் இவர் தோற்றுவித் துள்ளார். நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் இந்த அரசியல் சிந்தனை பாரிய பங்களிப்பு நல்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு ஸ்ரீல. சு. கட்சியும், அதன் தலைவர் களும் இந்நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்காகவும் அபிவிருத்திக் காகவும் அளப்பரிய பங்களிப்பு நல்கியுள்ளனர். இதற்கு ஸ்ரீல. சு. கட்சியின் கடந்த 64 வருடகால வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு.


சுதந்திர இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்து வந்த பாதை... Reviewed by Author on September 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.