சிரியாவைச் சேர்ந்த 10,000 அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா திட்டம்...
அமெரிக்காவானது எதிர்வரும் வருடத்தில் குறைந்தது 10,000 சிரிய அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிரியாவிலான மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு அமெரிக்காவில் மீள் குடியமர்த்தப்படுவதற்கு 1,500 சிரியர்களுக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தொகை கணிசமான அளவில் அதிகமாகும்.
எனினும் இந்த வருடம் ஐரோப்பாவை வந்தடைந்துள்ள 340,000 க்கு அதிகமான அகதிகளுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை மிகவும் குறைவாக கருதப்படுகிறது.
சிரியாவில் மோதல்கள் ஆரம்பமானது முதற்கொண்டு அமெரிக்கா மேற்படி அகதிகள் தொடர்பில் 4 பில்லியன் டொலரை உதவித் தொகையாக வழங்கியுள்ளது.
ஏற்றுக் கொள்ளும் அகதிகள் தொகையிலான இந்த அதிகரிப்பு, மோதல்கள் இடம்பெற்று வரும் இடங்களிலிருந்து மக்களை ஏற்றுக் கொள்வதுடன் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அதிகரிப்பதாக உள்ளதாக வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜோஷ் ஏர்னெஸ்ட் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு மேலதிகமாக 10,000 அகதிகளை அனுமதிப்பதற்காக குறிப்பிடத்தக்க நிதியை அமெரிக்கா ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
''இந்தப் பிரச்சினையின் அளவு குறிப்பிடத்தக்கதாக உள்ளதாக நாம் அறிகிறோம்" என ஏர்னெஸ்ட் தெரிவித்தார்.
அகதிகள் அமெரிக்காவுக்கு வரும் போது அவர்கள் தொடர்பில் பாதுகாப்புச் பரிசீலனைகளை மேற்கொள்வதற்கு 12 முதல் 18 மாத காலம் எடுக்கும் எனத் தெரிவித்த அவர், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கே முதலிடம் கொடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கெல், தனது நாடு 800,000 சிரிய அகதிகளை ஏற்கத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.அதேசமயம் தனது நாடு 20,000 சிரிய அகதிகளை ஏற்கவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் 4 மில்லியன் சிரிய அகதிகளைப் பதிவு செய்துள்ளதுடன் 2016 ஆம் ஆண்டுக்குள் 130,000 சிரிய அகதிகளை மீளக் குடியமர்த்த உலகமெங்குமுள்ள அரசாங்கங்களின் உதவியைக் கோரியுள்ளது.
அமெரிக்காவுக்குள் 65,000 சிரிய அகதிகளை மீளக்குடியமர்த்த அனுமதிக்குமாறு 14 அமெரிக்க செனட்சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கடந்த மே மாதம் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன், குடியேற்றவாசிகள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடும் முகமாக ஐக்கிய நாடுகள் பொது சபையில் உலகளாவிய அவசரக் கூட்டமொன்றை எதிர்வரும் மாதம் கூட்ட அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியாவைச் சேர்ந்த 10,000 அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா திட்டம்...
Reviewed by Author
on
September 12, 2015
Rating:

No comments:
Post a Comment