உள்ளக விசாரணை ஆணைக்குழுவில் சர்வதேச சமூகத்தவரே பெரும்பான்மையாக இடம்பெற வேண்டும்: ஈ.பி.ஆர்.எல்.எவ்
இலங்கை அமைக்கவுள்ள விசாரணை ஆணைக்குழுவில் சர்வதேச சமூகத்தவரே பெரும்பான்மையாக இடம்பெற வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
.ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகளை ஜனாதிபதி அழைத்திருந்தார். அங்கு கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) இன் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு
கூறினார்.
ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்று அழைத்திருந்தார். இங்கு ஜெனீவா தீர்மானங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது. ஏறத்தாழ 25 கட்சிகளும் 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பல கட்சிகளும் இதில் பங்கேற்றிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் இதில் கலந்து கொண்டார்.
இலங்கையில் தமிழ் மக்களுடைய அரசியல் வரலாறு என்பது மிகவும் கசப்பான வரலாறு என்றும் மாறிமாறி வந்த அரசாங்கங்களால் அவர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்றும் கூறியதுடன், இப்பிரச்சினை ஜெனிவா வரை செல்வதற்கும் இந்த அரசாங்கங்களே காரணம் என்றும் எடுத்துக் கூறினார்.
தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்கொண்டு யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும்படியும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இலங்கையின் நீதித்துறைக்குட்பட்டு ஒரு பிரத்தியேக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்றும் அதில் உள்ளுர் நீதிபதிகளுடன் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்றும் வெளிநாட்டு விசாரணையாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.
விசாரணை ஆணைக்குழு ஒரு பெருமதிமிக்க நம்பகத்தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்படி விடயங்கள் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் சகல அரசாங்கங்களின்மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்ற சூழலில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால், இந்த விசாரணை ஆணைக்குழுவில் பெரும்பான்மையோர் வெளிநாட்டைச் சேர்ந்த நீதிபதிகளாகவும் விசாரணையாளர்களும் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த விசாரணையில் சாட்சியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்கள் சாட்சியளிக்க வேண்டுமாயின், அதற்கான சுமூகமான ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டுமென்றும் வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதனூடாகவே அத்தகைய சுமூக சூழலை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார். மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமெனவும்
வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டுமெனவும் ஐ.நா. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் இராணுவம் அகற்றப்பட வேண்டியதன் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
புலம் பெயர் தமிழர்கள் மற்றும் இலங்கையில் பணியாற்றிய சர்வதேச தொண்டு நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களின் சாட்சிகளினூடாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆகவே அவர்கள் மீண்டும் சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இங்கில்லை. அவ்வாறானவர்கள் சாட்சியமளிக்கக்கூடிய வகையில் ஐரோப்பாவிலும் ஆணைக்குழுவின் ஒரு பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறான நிகழ்வுகள் மீளவும் நடக்காமல் இருப்பதற்கு தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையானதும் நீடித்து நிலைக்கக்கூடியதுமான அரசியல் தீர்வை வலியுறுத்திய அவர், பாராளுமன்றத்தை ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றுவதற்கு முன்பாக அரசாங்கம் தமிழர் தரப்புடன் பேசி, இனப்பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வைக் காண முன்வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அடுத்த ஓரிரு வாரங்களில் தமது எழுத்து மூலமான அறிக்கையையும் கையளிப்பதாக அவர் கூறினார்.
உள்ளக விசாரணை ஆணைக்குழுவில் சர்வதேச சமூகத்தவரே பெரும்பான்மையாக இடம்பெற வேண்டும்: ஈ.பி.ஆர்.எல்.எவ்
Reviewed by NEWMANNAR
on
October 23, 2015
Rating:

No comments:
Post a Comment