ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஏமாற்றம்-எஸ்.வினோ
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் சபையால் வாக்கெடுப் பின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம், போரின் பேரவலத்தால் பாதிக்கப்பட்ட தமிழருக்கு சந்தேகங்களையும், ஏமாற்றத்தையும் தருகின்றன. இந்தப் பிரேரணை மீது ஒத்த கருத்தில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் நிலைப்பாடும் எமக்கு வேதனையைத் தருகின்றது. - இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-தமிழ் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதி பலிக்கக்கூடிய நிலைப்பாட்டை ஒன்று கூடி ஒருமித்து எடுத்த பின்னர் ஜெனிவா செல்லும் குழு கட்சியின் தலைமையால் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தத்தமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளும், இதர கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களும் ஒட்டு மொத்த தமிழினத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் வரலாற்று நிகழ்வொன்றில் தனித்தனியான பயணம் மேற்கொண்டமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. கட்சிகளின் உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் தகைமை கட்சித் தலைவர்களிடமும், கூட்டமைப் பின் தலைமையிடமும் இல்லாத குறையை ஜெனிவா பயணத்தில் காணக்கூடியதாக இருந்தது.
இந்தப் பிரேரணை சம்பந்தமாக தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமல்லாது தமிழ் கட்சித் தலைமைகளிடமும் குழப்பமும், தெளிவின்மையும் இருக்கின்றதை நாம் மறுக்க முடியாது. எமது மக்களுக்கு தெளிவான ஒரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் கூட்டமைப்புக்கு உண்டு.
ஜனநாயக ரீதியில் தேர்தல்கள் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்ட கட்சியயான்று அந்த மக்களுக்கு பதிலளிக்கும் கடமைப்பாட்டையும் கொண்டுள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று பல விமர்சனங்கள் எழுகின்றன. இவை தீர்க்கப்பட வேண்டும். ஜெனிவா செல்லும் முன்னர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டப் பட்டிருக்க வேண்டும். நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஏகோபித்த முடிவுகள் எட்டப்பட்டிருக்க வேண்டும். கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள் கூடி பேசியிருக்க வேண்டும். கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு என்றால் யாருடைய தலைமையில் சென்றார்கள்?. எல்லாம் முடிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது.
அடுத்து என்ன செய்வது என்பதையாவது ஒன்றாக கூடி பேச முடியுமா?. ஜெனிவாவிலிருந்து எமது தலைவர்கள், பிரதிநிதிகள் நாடு திரும்பியவுடன் அடுத்தகட்ட நிலைப்பாட்டையாவது எமது மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக, ஒருமித்து கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். எமது மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களிடம் இதனையே எதிர்பார்க்கிறார்கள். எது எப்படி இருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் துரோகம் செய்யாது என்பது புரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பினும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதும், பரிகாரம் காண்பதும் தலைமையின் பொறுப்பாகும்.-என் றார்.
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஏமாற்றம்-எஸ்.வினோ
Reviewed by NEWMANNAR
on
October 07, 2015
Rating:

No comments:
Post a Comment