தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதம்
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (24) முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தமும், சிறையிலுள்ள மீனவர்களுக்கு உணவு வழங்குமாறும்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளதாக எமது இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று (23) நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் மீனவ சங்கத் தலைவர்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 87 மீனவர்களும், அவர்களின் 38 படகுகளும் கடந்த 2 மாதங்களாக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டு வருகின்றமைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என ராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அத்துடன் தமிழகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் சேதமுற்றுள்ள இலங்கையின் 18 படகுகளுக்கும் மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரதம்
Reviewed by NEWMANNAR
on
October 24, 2015
Rating:

No comments:
Post a Comment