மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 இருபதுக்கு - 20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிரான சோபஸ் - திஸேரா கிண்ணத்திற்கான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று புதன்கிழமை காலி சர்வதேச அரங்கில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும்இழந்து 484 ஓட்டங்களைப் பெற்றது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் சில்வா ஆகியோர் நிதானமாக ஆடிக்கொண்டிருக்க 17 ஓட்டங்களுடன் சில்வா ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு களமிறங்கிய திரிமான்னவும் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கருணாரத்னவுடன் ஜோடி சேர்ந்த சந்திமால், நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி, இலங்கை அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
அபாரமாக ஆடிய கருணாரத்ன 186 ஓட்டங்களை விளாசினார். மறுமுனையில் நின்ற சந்திமால் 151ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அஞ்சலோ மெத்தியுஸ் தன் பங்கிற்கு 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி இன்றைய இரண்டாம் நாள் தேனீர் இடைவேளையின் பின்னர் சகல விக்கெட்டுகளையும் இழந்து 484 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக பந்துவீச்சில் பிஷூ 4 விக்கெட்டுகளையும் டெய்லர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பிராவோ 50 ஓட்டங்களையும் டெய்லர் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக ஹேரத் 6 விக்கெட்டுகளையும் பிரசாத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 233 ஓட்டங்களால் பின்னிலை வகித்த நிலையில் இலங்கை அணி பொலோ ஒன் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணியை இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட அழைத்தது.
தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, போட்டியின் நான்காம் நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பிளக்வுட் 92 ஓட்டங்களையும் பிரத்வைற் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ஹேரத் 4 விக்கெட்டுகளையும் பிரசாத் மற்றும் சிறிவர்தன ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹேரத் தெரிவுசெய்யப்பட்டார்.
இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி...
Reviewed by Author
on
October 18, 2015
Rating:

No comments:
Post a Comment