முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம்....
முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்காவிட்டாலும் பரவாயில்லை. அதற்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் போதுமானதாகும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சராக நான் பதவி வகித்தபோது, தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு முன்னுரிமை வழங்கினேன். ஆனால் இன்று முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கை மற்றும் அமெரிக்க பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் அம்மக்களின் மீள் குடியேற்றத்திற்கு தடையாக இருக்க மாட்டோம்.
யுத்தம் முடிந்த பின்னர் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தை அப்போது நான் அவ்விடயத்திற்கு பொறுப்பான அமைச்சராக பதவி வகித்த போது சிறந்த முறையில் மேற்கொண்டேன். தமிழர் பகுதிகளில் சிங்கள மக்களையோ முஸ்லிம் மக்களையோ நான் குடியேற்றவில்லை.
ஆனால் எனக்கு பின்னர் பலர் மீள்குடியேற்ற அமைச்சர் பதவிகளை ஏற்றனர். ஆனால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற நடவடிக்கைமேற்கொள்ளவில்லை.
அதற்கு எதிராக பலர் செயற்பட்டனர். புத்தளத்தில் குருநாகரில் எமது மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் கேட்பது தம்மை சொந்த இடங்களில் வாழ வைக்க வேண்டும் என்பதுதான். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தபோது முழுமையான ஆதரவை வழங்கினோம்.
சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் எமது மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் மிதவாதத்தையே கடைப்பிடிக்கின்றனர். ஆனால் கூட்டமைப்பின் சிலர் இவ் விடயத்தில் கடும் போக்கை கடைப்பிடிப்பது கவலையளிக்கின்றது.
வில்பத்தில் முஸ்லிம்கள் தமது சொந்தக் கிராமங்களிலேயே மீள்குடியேற்றப்பட்டனர். ஆனால் பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புகளும் சில ஊடகங்களும் இதனை காடழிப்பாக காட்டினர்.
காடு அழிக்கப்பட்டு மக்கள் குடியேற்றப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதனை சந்தித்தும் எமது மக்களின் பிரச்சினைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றும் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்காவிட்டாலும் அதற்கு தடைபோடாமல் இருந்தால் போதும் என்றும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம்....
Reviewed by Author
on
October 24, 2015
Rating:
Reviewed by Author
on
October 24, 2015
Rating:


No comments:
Post a Comment