தமிழ் கைதிகளை சந்தித்து மன சாந்தி அளிக்கும் நிவாரணச் செய்தியை அறிவிக்க வேண்டும்: இ.சாள்ஸ் நிமலநாதன்
நீண்ட காலமாக சிறையிலிருக்கும் தமிழ் கைதிகளை கருணை கொண்டு சிறையில் சந்தித்து இவர்களுக்கு மன சாந்தி அளிக்கும் நிவாரணச் செய்தியை அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன்
அது தொடர்பாக இன்று ஜாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை,
15-20வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தாம் அண்மைக்காலத்தில் விடுவிக்கப்படுவோம் என்பதற்கான எவ்வித நம்பிக்கையும் அற்ற நிலையில் வேதனையில் உழலும், கைதிகளின் பரிதாப நிலையை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதற்கு தங்களின் அனுமதியை வேண்டுகின்றேன்.
இது இந் நாட்டின் அனைத்து தமிழ் சமூகத்தையும் பாதித்து நிற்கும் ஓர் உணர்வு பூர்வமாக எரிந்துகொண்டிருக்கும் ஓர் பிரச்சனை என்பதை தாங்கள் அறிவீர்கள். இவர்கள் பலவித பிரயத்தனங்களை மேற்கொண்டு தங்கள் விடுதலைக்காக முயன்றுகொண்டிருக்கின்றனர். அவர்களின் கோரிக்கையை தங்களை வெறுமனே விடுவிக்கவேண்டுமென்பதல்ல, மாறாக தங்களில் குற்றமிருந்தால் அதனை நீதிமன்றில்
விசாரித்து நியாயமான தீர்ப்பு வழங்கும் படியுமே மிகவும் நீதியான கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
இவர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து தமது போராட்டங்களை முன்னெடுக்கும் போதெல்லாம் அமைச்சர் உட்பட பல அதிகார தரப்பினர் இவர்களை சந்தித்து வாக்குறுதிகளுக்கு மேல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.
இவர்களுக்கென விசேட நீதிமன்றங்கள் நிறுவி இவர்களின் பிரச்சனைகளுக்கு விரைந்து முடிவுகாண்போம் என்று கூட வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை ஆகவேதான் தற்போது இவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளனர்.
அதி மேதகு ஜனாதிபதி அவர்களே! பாரிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த துரதிஸ்ரசாலிகள் 15-20 வருடங்களுக்கு மேலாக சிறுசிறு குற்றங்களுக்காகவோ, அல்லது வெறும் சந்தேகத்தின் பேரிலோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களாகவோ உள்ளனர்.
இவர்கள் தமது வாழ்வின் பிரதான பகுதியை தொலைத்தவர்களாகவும், இளமைக்காலத்தை சிறையில் வீணாக்கியவர்களாகவும், எதிர்காலத்தை பறி கொடுத்தவர்களாகவும் காணப்படுகின்றனர். அதி மேன்மை தங்கிய தாங்கள் இறுதியாக இவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் அநியாயமாக தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் காணப்படும் போது நிச்சயமாக கவலைப்படுவீர்கள் என்பது திண்ணம். இவர்கள் தங்கள்மீது தவறு ஏதும்
இல்லாதபோதும் தண்டணைக்கு உள்ளாகி தம் எதிர்காலத்தை பறிகொடுத்துள்ளனர். இவர்களுக்கு
நாம் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளோம்.
எனவே நான் தங்களை மிகவும் உருக்கமாக வேண்டிக்கொள்வது என்னவென்றால், தாங்கள் இவர்கள் மீது கருணை கொண்டு இரக்கத்தோடும், பரிவோடும் இவர்களை சிறையில் சந்தித்து இவர்களுக்கு மன சாந்தி அளிக்கும் நிவாரணச்செய்தியை அறிவிக்கவேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கைதிகளை சந்தித்து மன சாந்தி அளிக்கும் நிவாரணச் செய்தியை அறிவிக்க வேண்டும்: இ.சாள்ஸ் நிமலநாதன்
Reviewed by NEWMANNAR
on
October 12, 2015
Rating:

No comments:
Post a Comment