பெண்கள் மட்டும் வாழும் வினோத கிராமம்: வேதனைகளுக்கு கிடைத்த விடுதலையா?
பெண்கள் மட்டுமே வாழும் ஒரு வினோத கிராமம் உமோஜா (Umoja).
இது உதயமாகியிருப்பது மட்டுமல்ல, 25 ஆண்டுகளை நிறைவும் செய்திருக்கிறது. சக்திகள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில், சமத்துவம் என்ற பேச்சுக்கும் இடமில்லை.
அந்த பெண்கள் இதை சாதனையாக நினைக்கவில்லை. ஆண்களால் ஏற்பட்ட வேதனையிலிருந்து கிடைத்த விடுதலை என்றே நினைக்கின்றனர்.
இந்த கிராமம் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா நாட்டில் இருந்தாலும் தகவல் ஊடகங்களால், உலகம் முழுதும் பல கிராமங்கள் உருவாக முன்மாதிரியாகலாம்.
குடும்பங்களில் ஆணாதிக்க அடக்குமுறை, சமுதாயத்தில் பாலியல் வன்கொடுமை, சிறுமியோடு வல்லுறவு, இளம் வயது திருமணம், விருப்பமில்லா திருமணம், கணவனோடு புரிதலில் ஏற்படும் கசப்புகள். என எல்லா நாட்டிலும் பெண்களுக்கு பிரச்சனைகள் உண்டு.
ஆனால், இதுதான் வாழ்க்கை என்று சகித்துக்கொள்கிறார்கள் இல்லையேல் அழித்துக்கொள்கிறார்கள்.
இப்படியும் வாழமுடியும் என்று பெண் இனத்துக்கு ஒரு புதிய பாதையை காட்டியிருக்கிறாள் இந்த கறுப்பின பெண் ரிபெக்கா லோலொசோளி.
கணவனோடு கடைசிவரை சேரமாட்டேன் என்று 1990 ல் வெளியேறிய லோலொசோளி, ஒத்த கருத்துடைய 14 பெண்களுடன் வாழ துவங்கினாள். இதில், 80 வயது கிழவனோடு மணம் செய்யப்பட்டு, வெறுத்துவந்த 18 வயது இளம்பெண்ணும் ஒருவர்.
கணவனை பிரிவதற்கும் குடும்ப வாழ்க்கையை வெறுப்பதற்கும் முக்கிய காரணம் செக்ஸ் டார்ச்சரும், ஆணாதிக்க அடக்குதலும்தான்.
குழுவாக வாழும். அந்த கிராமத்துக்குள் ஆண்களுக்கு (பயணிகள் உட்பட) அறவே அனுமதியில்லை. ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களிடம் தஞ்சமடைந்தாலும் சேர்த்துக்கொள்கின்றனர். வளர்ச்சியாக வரவேற்கின்றனர்.
தற்போதைய ஜனத்தொகை 200 சிறுமிகள் உட்பட 47 பெண்கள். ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல வாழ்கின்றனர். சகோதரி உணர்வு பந்தமே ஒருங்கிணைப்பு சாரம்சம்.
சாம்புரு பழங்குடி இனத்தை சேர்ந்த இவர்கள், வருமானத்துக்காக மணிகளை கோர்த்து பாரம்பரிய ஆபரணங்கள் செய்வது, வீட்டுக்கு உபயோகமான கைவினை பொருள்கள் செய்வது கிராமத்தின் எல்லையில் சுற்றுலா பயணிகளிடம் விற்பது, உணவுக்கான தொழிலிலும் ஈடுபடுகின்றனர்.
அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று கல்வியை பற்றியும் பெண்ணுரிமை பற்றியும் விழிப்புணர்வு செய்கின்றனர். மற்ற நேரங்களில் விளையாட்டு போன்ற பொழுதுபோக்குகளிலும் மகிழ்கின்றனர்.
இவர்களுக்கு ’பெண்கள் கிராமம்’ இணையதளத்திலிருந்து வருமானமாக மாதந்தோறும் 2700 டாலர் கிடைக்கிறது. இங்கு மருத்துவமனை, பள்ளிக்கூடம் ஏற்படுத்திக்கொண்டனர். இன்னும் அத்தியாவசிய வசதிகளை பூர்த்திசெய்யும் முயற்சியில் உள்ளனர்.
ஆனால், இந்த பெண்கள் கிராமத்தை பற்றி அவர்களின் முன்னாள் கணவர்கள் மற்றும் கிராமத்தினர் அவ்வளவாக வரவேற்கவில்லை. அப்படியொன்றும் ஆண்களால் அவர்களுக்கு டார்ச்சர் இல்லை ஒரு நாடகத்தனமான உணர்வில்தான் அப்படி பொய்சொல்லி நடந்துகொள்கின்றனர் என்றே விமர்சிக்கின்றனர்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர். திருமணம் ஆகாத வாழ்க்கை தன் ஆயுளோடு முடிகிற ஒரு பயிர்தான். என்றாலும், தனக்கு பின்னால் ஒரு சந்ததி வளர வேண்டும் என்பதற்காக, இந்த ஆண்களின் வக்கிரங்களை சகிக்கதேவையில்லை என்பதுதான் இந்த கிராம பெண்களின் முடிவு.
இந்த பிறவியை மகிழ்ச்சிகரமாகவும் மற்றவர்களுக்கு உதவிகரமாகவும் குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண்சமுதாயத்துக்கு முற்போக்கான வழிகாட்டவும் ஆண்களிடமிருந்து முற்றிலுமாக பிரிந்துவந்த பெண்களால்தான் அதிகமாக சிந்திக்கவும் செயல்படவும் முடியும் என்பது இவர்களுடைய உணர்வுப்பூர்வமான பதில்.
வறுமையும் கல்வியறிவின்மையும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையும் மலிந்துள்ள ஆப்பிரிக்க நாட்டில், உருவான இந்த மகளிர் மட்டும் கிராமம், பெண்ணுரிமைக்கான ஒரு அங்கீகார வெளிச்சமே.
பெண்கள் மட்டும் வாழும் வினோத கிராமம்: வேதனைகளுக்கு கிடைத்த விடுதலையா?
Reviewed by Author
on
November 20, 2015
Rating:

No comments:
Post a Comment