இலங்கையில் 24341 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு....
நாட்டில் கடந்த 11 மாத காலப் பகுதியில் 24341 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல் தெரிவிக்கின்றது. இதில் அதிகூடிய எண்ணிக்கையினரான 6345 பேர் கடந்த ஜனவரி மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 11 மாதங்களில் தலைநகர் கொழும்பில் 7978 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்தபடியாக 3384 பேர் கம்பஹா மாவட்டத்திலும் யாழ். மாவட்டத்தில் 1436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாநகரசபைப் பிரிவில் மாத்திரம் குறித்த காலப்பகுதியில் 2166 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது பருவமழை ஆரம்பித்துள்ளதால் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதுகுறித்து மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்கள், திணைக்களங்கள், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் அவசர கவனம் செலுத்த வேண்டும் என கோரப்படுகின்றது.
சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் அண்மைக்காலத்தில் சற்று மந்தகதியை அடைந்துள்ளன. அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் நடைபெற்றுவந்த வாரத்தின் ஒரு நாள் துப்புரவுப் பணிகளும் தொடர்ச்சியாக நடைபெறாது தற்போது கைவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளின் தினசரி கழிவகற்றல் பணிகளிலும் பல்வேறு பிரதேசங்களில் பாதிப்பேற்பட்டுள்ளது. வடிகான்கள் முறையாக உரிய காலத்தில் துப்புரவு செய்யப்படாததினால் நீண்ட காலத்திற்கு மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் காணப்படுகின்றது.
பாடசாலைகள், பாடசாலைகளுக்கருகிலுள்ள சுற்றுப்புறச்சூழலில் காணப்படும் குப்பை கூளங்கள் தினசரி அகற்றப்படாததினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இதே போன்று மக்கள் குடியிருக்காத வெற்றுக் காணிகளில் நாட்பட்ட குப்பை கூளங்கள் அகற்றப்படாது காட்சியளிக்கின்றன. இவை குறித்தும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரிகள் அவசர கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.
இலங்கையில் 24341 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு....
Reviewed by Author
on
December 03, 2015
Rating:

No comments:
Post a Comment