வடமாகாண சபை உறுப்பினர்களின் நிதி அதிகரிப்புக் கோரிக்கை கைவிடப்பட்டது!
வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் பிரமாண அடிப்படையிலான நிதி 6 மில்லியன் ரூபாயை 10 மில்லியன்களாக்குமாறு மாகாணசபை உறுப்பினர்கள் விடுத்தகோரிக்கைக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மறுப்பு தொவித்துவந்த நிலையில், குறித்த நிதி அதிகரிப்பு கோரிக்கை முழுமையாக கைவிடப்பட்டுள்ளது.
மாகாணசபை உறுப்பினர்களுக்கு பிரமாண அடிப்படையிலான நிதியாக வருடாந்தம் 6 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படுகின்றது.
இதன் ஊடாக உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் காணப்படும் மக்களுடைய தேவைகளை நிறைவு செய்ய முடியும்.
எனினும் குறித்த நிதி 6 மில்லியன் என்பதால் அதிகளவு தேவைகள் மற்றும் பிரச்சினைகள் காணப்படும் வடமாகாணத்தில் நிதி பற்றாக்குறை உள்ளதாக சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள் 6 மில்லியன் ரூபாய் நிதியை 10 மில்லியன் ரூபாயாக அதிகரித்து வழங்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த நிதி அதிகரிப்பை செய்ய முடியாது. எனவும் முதலில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்கான செயற்றிட்டங்களை விரைவாக வழங்கி மக்களுக்கு பயன்படுத்துங்கள் எனவும் முதலமைச்சர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ம் திகதி நடைபெற்ற வரவுசெலவு திட்ட விவாதத்தின் இறுதி நாளில் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் பின்னர் உறுப்பினர்கள் முதலமைச்சருடன் பேசியதற்கிணங்க 22ம் திகதி நிதி ஆணைக்குழுவுடன் மாகாண பிரதம செயலாளர் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்படி நிதி அதிகரிப்பு கோரிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இது குறித்து அவைத்தலை வர் சீ.வி.கே.சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
நிதி ஆணைக்குழு குறித்த நிதி அதிகரிப்புக்கான சம்மதம் வழங்காத நிலையில்,அந்தக் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
இதேவேளை எதிர்கட்சி தலைவர் சி.தவராசாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
மாகாணசபைக்கு வழங்கப்படும் மற்றைய நிதிகள் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
அதனை மாகாணசபை இந்த வேலைக்கு இவ்வளவு நிதி என்பதை தீர்மானிக்கின்றது. ஆனால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மக்களுக்கு தேவையான வேலைகளை இனங்கண்டு செய்து கொடுக்க முடியும்.
நிதி அதிகரிப்பு கோரிக்கை நியாயமானது. ஆனால் அதனை அவ்வாறு அதிகரித்து வழங்க முடியாத நிலையும் இருக்கின்றது.
குறிப்பாக மற்றைய மாகாணங்களில் இந்த நிதி குறைவாகவே வழங்கப்படுகின்றது என்ற நியாயம் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் நிதி அதிகரிப்பு கோரிக்கைக்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவித்துவிட்டார். எனவே அந்தக் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
வடமாகாண சபை உறுப்பினர்களின் நிதி அதிகரிப்புக் கோரிக்கை கைவிடப்பட்டது!
Reviewed by NEWMANNAR
on
January 09, 2016
Rating:

No comments:
Post a Comment