புதிய அரசியலமைப்பிற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழு நியமனம் ...
சமூக ஆய்வாளர் பி. முத்துலிங்கம், பேராசிரியர் எம். சின்னதம்பி, பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் டி. தனராஜ், பேராசிரியர் மூக்கையா, கலாநிதி எஸ். சந்திரபோஸ், சட்டத்தரணி கணபதிபிள்ளை, விரிவுரையாளர் எஸ். விஜயசந்திரன், விரிவுரையாளர் கௌரி பழனியப்பன், சிரேஷ்ட அரச பணியாளர் எம். வாமதேவன், ஆய்வாளர் கௌதம் பாலசந்திரன், வண பிதா பொன்கலன், விரிவுரையாளர் உமாதேவி துரைராஜ், தொழில் அதிபர் சந்திரா சாப்டர், சமூக ஆய்வாளர் ரமேஷ் நந்தகுமார், முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, அன்டன் லோரன்ஸ், சண். பிரபாகரன் ஆகியோரை கொண்ட புதிய அரசியலமைப்பு வரைபிற்கான நிபுணர் குழுவை தமிழ் முற்போக்கு கூட்டணி நியமித்துள்ளது.
பி. முத்துலிங்கம் தவிசாளராகவும், அன்டன் லோரன்ஸ் செயலாளராகவும், சண் பிரபாகரன் அழைப்பாளராகவும் இந்த நிபுணர் குழுவில் பணியாற்றுவார்கள் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
நாம் அமைத்துள்ள இந்த நிபுணர் குழுவில் நம் நாட்டில் தேசிய மற்றும் சர்வதேசிய அங்கீகாரம் பெற்றுள்ள அறிவுசார் கல்விமான்களும், சமூக சிந்தனையாளர்களும், உள்வாங்கப்பட்டுள்ளார்கள். மலையக தமிழ் மக்களை பிரதானப்படுத்தி, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அமைந்துள்ள ஏழு மாகாணங்களிலும் வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்கள் சார்ந்த அதிகார பகிர்வு உட்பட்ட அரசியல், சமூக, கலாச்சார அபிலாஷகளை வரைபாக தொகுத்து தரும் பணி இந்த நிபுணர் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் வாழும் சகோதர தமிழ் மக்களின் அபிலாஷைகளை தொகுக்கும் பணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை ஆகிய அமைப்புகளும், சகோதர முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை தொகுக்கும் பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளும் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது. இந்த பணிகளுக்கு சமாந்திரமாக தமிழ் முற்போக்கு கூட்டணி தனது பணிகளை மேற்கொள்கிறது.
ஏற்கனவே உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் உள்வரும் வட்டாரங்களின் எல்லைகள் மீள்நிர்ணயம் தொடர்பில் நாம் அமைத்துள்ள குழு நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், மாத்தளை, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து தனது பணிகளை முடிவுக்கு கொண்டு தனது அறிக்கையை தயாரித்து உள்ளது. இந்த அறிக்கை உள்ளூராட்சி வட்டார எல்லை மீள்நிர்ணய குழுவுக்கு அடுத்த வாரம் சமர்பிக்கப்படும். நாம் இணைந்து ஏற்படுத்தியுள்ள நல்லாட்சியின் பின்னர் நாட்டில் ஏற்பட்டு வரும் எந்த ஒரு அரசியல் மாற்றத்திலும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே மலையகம் உட்பட்ட ஏழு மாகாணங்களிலும் வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்கள் புறந்தள்ளப்பட நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்ற உறுதிப்பாட்டுடன் கூடிய புதிய வரலாற்றை நாம் இப்போது எழுதி வருகிறோம்.
கல்விமான்களும், சமூக சிந்தனையாளர்களும் உள்வாங்கப்பட்டுள்ள இந்த நிபுணர் குழு தயாரித்து தரும் யோசனைகள் அடங்கிய அறிக்கை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்குழுவில் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவுக்கும், பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவைக்கும் சமர்பிக்கப்படும். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயன்முறையின் போது இந்த யோசனைகளை, உத்தேச புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவைக்கும் பணியை தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்கும்.
புதிய அரசியலமைப்பிற்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழு நியமனம் ...
Reviewed by Author
on
January 17, 2016
Rating:

No comments:
Post a Comment