3 மாணவிகள் நீரில் மூழ்கி சாகவில்லை... பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!
விழுப்புரம் எஸ்விஎஸ் மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து குரல் கொடுத்துவந்த அதே கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23-ம் தேதியன்று கிணற்றில் பிணமாக மிதந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி, இவர்களது மகன் சுவாக்கர்வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கலாநிதி, சுவாக்கர்வர்மா, தாளாளர் வாசுகி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கல்லூரி விடுதி பணியாளர்களான சுமதி, லட்சுமி, கோட்டீஸ்வரி ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான கள்ளக்குறிச்சி மாடூரை சேர்ந்த பெருமாள் மகன் வெங்கடேசன் (40) என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் கடந்த 27ம் தேதி சரணடைந்தார்.
இந்நிலையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே, மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மாணவி மோனிஷாவின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாணவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மறுபரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே, இந்நிலையில், மூன்று மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், மாணவிகளின் மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்படவில்லை என்றும், நுரையீரலில் தண்ணீர் தேங்காததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்ததற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாணவிகளின் மரணத்தில் மறு பரிசோதனை தேவையா என மனுதாரர்கள் நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை நகல்கள் மனுதாரர்கள் தரப்புக்கு வழங்கப்பட்டன.
ள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வியிடம் எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி தாளாளர் வாசுகி அளித்த வாக்குமூலத்தில், "இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை வேண்டும் என்றே சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். 3 மாணவிகள் கைகளை ஒன்றாக கட்டிக் கொண்டு, எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்? திட்டமிட்டு, 3 மாணவிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை, தற்கொலை என்ற கோணத்தில் எனக்கு எதிராக காவல்துறையினர் திசை திருப்பி உள்ளனர். இதில், தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
3 மாணவிகள் நீரில் மூழ்கி சாகவில்லை... பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!
Reviewed by Author
on
February 08, 2016
Rating:
Reviewed by Author
on
February 08, 2016
Rating:

No comments:
Post a Comment