முதல் தடவையாக இந்துக்களுக்கு திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு பாகிஸ்தானில் அங்கீகாரம்....
இந்துக்களுக்கு தமது திருமணத்தைப் பதிவு செய்து கொள்வதற்கு அனுமதியளித்த பெருமளவு முஸ்லிம்களைக் கொண்ட முதலாவது நாடு என்ற பெயரை பாகிஸ்தான் பெறுகிறது.
மேற்படி திருமணப் பதிவுக்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டம் திங்கட்கிழமை 3 மில்லியன் இந்துக்கள் வசிக்கும் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் திருமணப் பதிவுக்கான உரிமையை வழங்குமாறு நீண்ட காலமாக கோரி வந்துள்ளனர். அவர்கள் கட்டாய திருமணங்கள், பராயமடையாதோரின் திருமணங்கள் மற்றும் கைம்பெண்களுக்கான உரிமைகள் குறைவு என்பவற்றால் துன்புற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்நாட்டு பாராளுமன்றம் இதையொத்த சட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்கள் தமது திருமணத்தைப் பதிவு செய்வதற்கான உரிமையைப் பெற்றுள்ள போதும் இந்துக்கள் இதுவரை காலமும் அந்த உரிமையைப் பெறாது இருந்துள்ளனர்.
இந்நிலையில் புதிய சட்டமூலத்தின் பிரகாரம் சிந்து மாகாணத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட இந்துக்கள் தமது திருமணத்தை பதிவுசெய்து கொள்ள முடியும்.
எனினும் மேற்படி சட்டமூலம் திருமணத்தில் இணைபவர்களில் ஒருவர் மதம் மாறும் பட்சத்தில் திருமணத்தை இரத்துச் செய்ய அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய ஏற்பாட்டை உள்ளடக்கியுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள பல இந்துக்கள் வங்கி கணக்குகளைத் திறக்கவும் விசாவுக்கு விண்ணப்பிக்கவும் அடையாள அட்டைகளைப் பெறவும் சொத்துக்களிலான பங்குகளைப் பெறவும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். பாகிஸ்தானிய சனத்தொகையில் 2 சதவீதத்துக்கும் சிறிது அதிகமாக இந்துக்கள் உள்ளனர்.
முதல் தடவையாக இந்துக்களுக்கு திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு பாகிஸ்தானில் அங்கீகாரம்....
Reviewed by Author
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment