அண்மைய செய்திகள்

recent
-

பிரேசிலை உலக அளவில் ஒளிரச்செய்யும் திருவிழா!



மதமும் கலாசார மணமும் கலக்க, கட்டிலடங்கா கற்பனை ஒப்பனைகளோடு, மண்வாசனை மனிதர்களின் ஆடல் பாடல் அணிவகுப்பில், தெருக்களே மலரும் தேன்மதுர திருவிழா!
மக்கள் எல்லோருமே கலைஞர்களாக பிரதிபலிக்கும் மகிழ்ச்சிக்கான மாபெரும் மனித எழுச்சி, இப்படி ஒரு நிகழ்ச்சி இதுவரை வேறு எங்குமே சிந்திக்கப்படவில்லை.

பிரேசிலை உலக அளவில் ஒளிரச் செய்யும் இந்த கார்னிவல் திருவிழா ஒரு புதிய அடையாளத்தை பெற்றது.

ஈஸ்டர் பண்டிகையோடு ஒரு வெள்ளோட்ட தொடர்பு இதற்கு உண்டு.





விழாக்காலம் ஒரு விரத காலம்

வருடாந்திரம் வரும் 6 நாட்கள் கார்னிவல் பண்டிகை, ஈஸ்டருக்கு 51 நாட்களுக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை மதியத்தில் துவங்குகிறது.

ஈஸ்டருக்கு 45 நாட்களுக்கு முந்திய புதன்கிழமை நண்பகலில் நிறைவடைகிறது. அதனால், ஈஸ்டரை மையப்படுத்தியே இந்த விழா நடக்கிறது.

இந்த விழாக்காலம் வெறும் கொண்டாட்ட களிப்பாக மட்டும் அல்லாமல், தங்களுடைய மதம், கலாசார புனித புரிதலில் விரதம் எடுக்கிறார்கள்.

மாமிச உணவின் சுவையில் மயங்கி திளைப்பது அங்குள்ள வழக்கம். ஆனாலும், ரோம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், வேறு சில பாரம்பரிய கிறிஸ்தவர்களும் இந்த 6 நாட்களும் அனைத்துவித மாமிச உணவையும் ஒதுக்குகிறார்கள்.

நகரங்களுக்கு ஏற்ப மாறுபடும் கோலாகலம்

இந்த கார்னிவல் திருவிழாவின் அடிப்படை அணிவகுப்புதான். உடைகள் அணிவதில் ஆயிரமாயிரம் வினோதங்கள், அணி அணியாக வரிசைவகுப்பு, ஒன்றுக்கொன்று ஒற்றுமையில்லா ஒப்பனை பங்களிப்பு என பலமணிநேரம் பார்த்தாலும் ஆர்வதாகம் அகலாது.

ஆடைகளுக்கும், வேடங்களுக்கும் முழு சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது. அலங்கார ஊர்திகளும் அவர்களோடு பங்கேற்கிறது.

பிரேசிலின் நகரங்களுக்குள்ளே கொண்டாட்டமுறை கொஞ்சம் வேறுபடுகிறது.

பிரேசிலின் தென்கிழக்கு நகரங்களான ரியோ டி ஜெனிரோ, சாவ் பாவ்லா, மற்றும் விட்டோரியோவில், பெரிய ஜனதிரளும் ஒழுங்கமைவுமான அணிவகுப்பு சம்பா பள்ளியின் தலைமையில் நடத்தப்படுகிறது.

வடகிழக்கு நகரங்களான ஒலிண்டா, ரெஸிபே, சால்வாடார், போர்டோ செகூரோ நகரங்களிலும் பெரிய அணிவகுப்புகள் உரிய அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

பார்ப்பதோடு நில்லாமல், அப்பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்களும் புகுந்து கலக்குகின்றனர்.

பிரேசில் மற்றும் ஆப்பிரிக்கா கலாசார கூட்டு நிகழ்வுகளும் பங்களிப்பு பெறுகிறது. ஒப்பனைகள் அவரவர் செலவிலே செய்யப்படுகிறது. பெரும்பாலும் தங்களது முன்னோர் தொடர்பிலான தோற்றங்களை தெரிவு செய்கின்றனர்.


ஒலிண்டா தெரு ஊர்வலம் தனித்தன்மை கொண்டது. இதில் உள்ளூர் மக்களின் ப்ரவோ, மரகட்டு என்ற நாட்டுப்புற நடனங்கள் வெகு விமரிசையாக வெளிப்படுவது நகரத்தவர்களையும் ஈர்க்கிறது.

கார்னிவல் திருவிழாவின் திகதிகள் ஆண்டுகள்தோறும் மாறுபடுகிறது. இந்த ஆண்டில் பிப்ரவர் 5 முதல் 10 ம் திகதி வரை நடக்கிறது.

கார்னிவல், பிரேசிலில் நடக்கும் தேசிய அளவிலான பெரிய கொண்டாட்டம். உற்பத்தி தொழிற்சாலைகள், பெரிய மால்களை தவிர, அனைத்து அலுவலகங்கள், தொழிலகங்களும் 6 நாட்களும் விடுமுறை விடுகின்றன.

இந்த பண்டிகை சார்ந்த வணிகமும் ஒருவாரத்திற்கு இரவும் பகலுமாக நடக்கிறது.

குறிப்பாக, கடற்கரை நகரங்களில் தனிச்சிறப்பு பெறுகிறது. ரியோ டி ஜெனிரோவில் மட்டும் 49 லட்சம் மக்கள் இந்த கொண்டாட்டத்தில் 2011 ல் பங்கெடுத்துள்ளனர். இவர்களில் 4 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள் என்பது இன்னும் விஷேசம்.

பிரேசில் நகரங்களையே மேடையாக்கிக் கொண்ட கார்னிவல் நிகழ்ச்சி, அவர்களுக்கு அடுத்த வருடம் வரை போதுமான மகிழ்ச்சி.

பிரேசிலை உலக அளவில் ஒளிரச்செய்யும் திருவிழா! Reviewed by Author on February 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.