மட்டக்களப்பில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள்! குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை!
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.
மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தகம் நிலையம் மற்றும் வீடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதில் மட்டக்களப்பு பஸ்நிலையத்திற்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையம் மற்றும் கோவிந்தன் வீதியில் உள்ள வீடு என்பனவே இவ்வாறு உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதன்போது வர்த்தக நிலையத்தில் இருந்து சிகரட்டுகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்து நகைகள் திருடிச்செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி இதுவரையில் கணிக்கப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்தாம் குறிச்சி பகுதியில் ஒரே இரவில் ஐந்து கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தன.
கடந்த வாரம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்புக்கராச்சி பகுதியில் வீடு உடைக்கப்பட்டு பெருமளவான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் எந்த சந்தேக நபர்களும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள்! குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை!
Reviewed by NEWMANNAR
on
March 17, 2016
Rating:
No comments:
Post a Comment