உடுமலை ஆணவக் கொலை குற்றவாளிகள் சிக்கியது இப்படித்தான்!
உடுமலையில் காதல் திருமணம் முடித்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை செல்போன் டவர் மூலம் கண்டுபிடித்தோம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர், திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த கவுசல்யாவை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் பெற்றோரும், உறவினர்களும் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் நடுரோட்டில் தம்பதி மீது ஒரு கும்பல் சரமாரி அரிவாளால் வெட்டியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுசல்யா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் கொலைக் கும்பல் பதுங்கி இருப்பதாக உடுமலை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உடுமலை காவல்துறையினருடன், திண்டுக்கல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிகாமணி, காவல் ஆய்வாளர் தெய்வம், உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான சிறப்பு படையினர் பட்டிவீரன்பட்டியில் உள்ள மணிகண்டன் என்பவர் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
அங்கிருந்து தப்பியோட முயற்சித்த கொலைக் கும்பலை சேர்ந்த திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வக்குமார் (29), பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெகதீசன் (30), திண்டுக்கல் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த மதன் (எ) மைக்கேல் (30), பழனியை சேர்ந்த மணிகண்டன் (32), இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மற்றொரு மணிகண்டன் (35) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் 5 கத்திகள் மற்றும் அரிவாள், ரூ.44 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.
குற்றவாளிகளை கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "கவுசல்யாவின் தந்தை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தவுடன், கொலைக் கும்பல் அந்த பகுதியில்தான் பதுங்கி உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்தோம். எந்த இடம் என்பதை செல்போன் டவர் மூலம் நெருங்கினோம். பட்டிவீரன்பட்டியில் கொலையாளிகளின் படங்களை காட்டி நள்ளிரவில் மக்களிடம் கேட்டறிந்தோம். வீட்டை நெருங்கியதை அறிந்த அந்த கும்பல் தப்பியோடியது. நாங்கள் விரட்டிச் சென்று பிடித்தோம்" என்று தெரிவித்தனர்.
உடுமலை ஆணவக் கொலை குற்றவாளிகள் சிக்கியது இப்படித்தான்!
Reviewed by NEWMANNAR
on
March 17, 2016
Rating:

No comments:
Post a Comment