ஏழு அதிசயங்களில் ஒன்றான பிரேசிலின் பிரம்மாண்ட சிலை: பராமரிக்க சிரமம் ஏன்?
பிரேசிலின், ரியோ டி ஜெனிரோவில் உள்ள மீட்பர் இயேசு கிறிஸ்து சிலை, உலகில் உள்ள இயேசு சிலைகளிலே பிரம்மாண்டமானது.
மேலிருந்து பார்த்தால் நாட்டின் தனிப்பெருஞ்சிலையாக, மக்களை காத்து ரட்சிக்க கைகளை விரித்து அழைப்பதுபோல, உள்ள மீட்பர் இயேசுவின் இந்த சிலை 38 மீட்டர் உயரத்தில் மலை மீது உருவாக்கப்பட்டுள்ளது.
தூரமிருந்து பார்த்தாலே, அந்த தேவதூதன் விஸ்வரூபமெடுத்து நேரே இறங்கி வந்ததுபோல ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அருகில் சென்றுபார்த்தால் நம் விழிகளில் அதன் எல்லைகள் அடங்காது.
இந்த மீட்பரின் முகவரி
Parque nacional da tijuca, Alto da Boa vista, Reo de janeiro- Rj, Brazil,
சிலை சிறப்புகள்
இது சிலை என்பதைவிட சிலை வடிவிலுள்ள ஒரு கட்டடம். இந்த சிலையின் உட்புறமாக தலை வரை செல்ல உள்ளே படிகள் உள்ளன. தோள்பட்டையில் ஒரு திறப்பும் உள்ளது.
இந்த சிலைக்கான பணிகள் 1922 ல் துவங்கப்பட்டது. சிலை முழுமையடைந்து அக்டோபர் 12, 1931 ல் திறக்கப்பட்டது.
இந்த சிலை பிரஞ்சு சிற்பகலை நிபுணரான Paul Landowski பிரேசிலியன் பொறியாளரான Heitor da silva costa மற்றும் பிரஞ்சு பொறியாளரான Albert Caquat ன் ஒருங்கிணைப்போடும் இவர்களின் தலைமைப் பணியின் கீழும் பெரிய திட்டத்தில் உருவாக்கப்பட்டது.
மீட்பர் இயேசுவின் முகம் மட்டும் ரோமானிய கலைஞர். ஜார்ஜ் லியோனிடாவால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது.
இந்த சிலையின் உயரம் 30 மீட்டர்(98 அடி), அதன் பீடம் 8 மீட்டர்(26அடி). இச்சிலையின் புஜங்களுக்கு இடையிலான அகலம் 28 மீட்டர்(92 அடி).
இந்த சிலையின் மொத்த எடை 635 மெட்ரிக் டன். இது வலுவூட்டப்பட்ட காங்கிரீட் மற்றும் வெளிர் Soapstone கற்களால் கட்டப்பட்டுள்ளது.
இதற்கான செலவு 2.5 லட்சம் அமெரிக்க டாலர் அதன் இப்போதைய மதிப்பு 3 கோடியே 30 லட்சம் அமெரிக்க டொலர்.
சிலையின் நோக்கு
இந்த சிலை அமைந்துள்ள இடம் காடு, மலைகளே. இதன் அதிகப்படியான உயரம் கருதியே அந்த இடம் தேர்வுசெய்யப்பட்டது.
தேசிய உயிரியல் பூங்கா உள்ள Tijuca காடுகளில் உள்ள Corcovado மலையில் 700 மீட்டர்(2,300 அடி) உயரமுள்ள ஒரு சிகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்த சிலையின் நோக்கு ரியோ டி ஜெனிரோ மற்றும் பிரேசிலை முழுதாக ஆக்கிரமிக்கிறது.
ஏழு அதிசயங்களில் ஒன்று
ரியோ டி ஜெனிரோ, பிரேசில் நாட்டின் பாரம்பரிய நினைவுச் சின்னமாக இச்சிலை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
உலக அதிசயங்கள் என்றாலே என்ன காரணமோ ஏழு இடங்களை தேர்வுசெய்வதுதான் வழக்கம். அதன்படி ஜூலை 7, 2007 ல் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஏழு அதிசயங்களில் இந்த பிரம்மாண்ட இயேசு மீட்பர் சிலையும் இடம்பெற்றுள்ளது.
சிலைக்கான சிந்தனை
உயரமான இந்த Corcovoda மலைப்பகுதியில் கிறிஸ்துவ மத நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பி அதை கிறிஸ்டின் மலையாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனை 1850 ம் ஆண்டிலேயே வின்செண்டியன் மதகுரு மற்றும் பெட்ரோ மரியா போஸ் ஆகியோருக்கு உதயமானது.
அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தனர். பேரரசர் இரண்டாம் பெட்ரோவின் ஆட்சியில், பிரேசில் பிரதிநிதியும் மன்னரின் மகளுமான இளவரசி இசபெல் மூலமாக முயன்றனர். அப்போது அத்திட்டம் பலிக்கவில்லை.
அடுத்து 1889 ல் நாடு குடியரசான போதும் மாநிலங்கள் மற்றும் தேவாலயங்கள் நிர்வாக பிரிவினைகள் நடந்ததால், இந்த முயற்சியை முன்னெடுக்க முடியாமல் போனது.
1920 ல் ரியோவில் உள்ள கத்தோலிக்க பிரிவினரால் மூன்றாம் கட்ட முயற்சி தீவிரமாக எடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் கடவுள் மறுப்பு கொள்கையும் கணிசமாக மக்களிடம் உருவாகியிருந்தது. இது தடையாக இருந்தாலும் செயல் வேகமெடுக்க எதிர்விளைவையும் ஏற்படுத்தியது.
இதற்கான நிதி வசூலிப்பிலும் கத்தோலிக்கர் பங்களிப்பே அதிகமிருந்தது. இயேசு கையில் உலகம் இருப்பதுபோலவே சிலை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது.
அது பெடெஸ்ட்ரியன் கிறிஸ்தவ பிரிவினரின் அடையாளமாகிவிடும் என்பதால், இரு கரங்களையும் நீட்டி மக்களை காக்கும் அமைதிக்கான அடையாளமாக இந்த வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சடங்குகளுக்கு அனுமதி
இங்கு கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவினர் புனித ஸ்நானம், திருமணங்கள் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த சிலையை சுற்றிலும் எஸ்கலேட்டர், நடைபாதைகள் போன்ற பார்வையாளர்களுக்கு தேவையான பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 2006 ம் ஆண்டு இந்த சிலைக்கான 75 வது ஆண்டு நிறைவு விழா நடந்தது.
மின்னல் தாக்கியது
பிப்ரவரி 10, 2008 ல் இந்த சிலையை மின்னல் தாக்கியது. அதில் சிலையின் தலை, இமை, விரல்கள் பாதிக்கப்பட்டது. பிறகு சிலையின் தலைப்பகுதியில் இடிதாங்கி பொருத்தப்பட்டது.
மீண்டும், ஜனவரி 17, 2014 ல் ஒரு மின்னல் தாக்கியது. இந்த சேதங்களை அரசு நடவடிக்கை எடுத்து சரி செய்துவிடுகிறது.
மறுசீரமைப்பு
2010 ல் பெரிய அளவில் இந்த சிலைக்கு புதுப்பித்தல் பணி நடந்தது. சிலை முழுதாக கழுவப்பட்டது. புஜத்திலிருந்து பெயிண்ட் ஸ்ப்ரே செய்யப்பட்டது. சிலையில் தண்ணீர் புகா தன்மையும் உள்ளது. பணியில் ஈடுபட்டவர்களே சிலையில் உள்ள பொருள்களை சூறையாடியிருந்தனர்.
அந்த தவறு இந்த நாட்டிற்கே எதிரான குற்றம் என்று மேயர் Eduardo Paes கடிந்திருந்தார். பிறகு, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தாக்காமல் மன்னிக்கப்பட்டு சட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மறுசீரமைப்பு பணியின்போது, 100 பேர் இந்த சிலைக்கு பயன்படுத்த 60,000 கற்களை அதே குவாரியில் வாங்கிக் கொடுத்தனர்.
பராமரிப்பது கடினம்
இந்த சிலையின் இடமும் அளவும் அதிக சேதத்துக்கு உள்ளாகும் சூழலாக இருப்பதால் பராமரிப்பது சிரமமே. இதற்கான வெளிர் கல் கிடைப்பதும் அரிதாகி வருவது கவனிக்க வேண்டியது.
கொடி நிறத்தில் ஒளிர்ந்தது
2010 ல் நடந்த FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது, இந்த சிலையில் பச்சை மற்றும் மஞ்சள் விளக்குகளை பிரேசிலுக்கு ஆதரவாக ஒளிரச்செய்திருந்தனர்.
மதமும் உலகமயமாய் விளங்க வேண்டும். அதே சமயம் அதன் உரிமை தங்கள் கைகளில் மட்டும் இருக்க வேண்டும். இந்த முரணான உணர்வுகள் ஒருபுறம் இருந்தாலும், இந்த உலக பிரம்மாண்ட நினைவுச் சின்னம் ஒரு உற்சாகமே!
ஏழு அதிசயங்களில் ஒன்றான பிரேசிலின் பிரம்மாண்ட சிலை: பராமரிக்க சிரமம் ஏன்?
Reviewed by Author
on
March 05, 2016
Rating:

No comments:
Post a Comment