இலங்கையில் தமிழர் தேசத்திற்கான அங்கீகாரமும் சுய நிர்ணய உரிமையும் வேண்டும்!
இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான அங்கீகாரமும், சுய நிர்ணய உரிமையும் வழங்கப்பட வேண்டுமென ஸ்பெயின் நாட்டில் பிரிந்து செல்லும் உரிமை கோரி போராடும் கடலோனியா (Cataloniya) மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அல்போன்ஸ் லோபெஸ் டேனா தெரிவித்துள்ளார்.
கடந்த 23ம் திகதி மார்ச் மாதம் பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற
உறுப்பினர்களுடனான ஒன்று கூடல் நடாத்தப்பட்டது.
பிரித்தானிய பிரதமரின் வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பிரித்தானியாவின் பல தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை தொடர்பான செயற்ப்பாட்டாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ச்சியாக சர்வதேசத்துடனான தமிழர்களின் உறவைப் பலப்படுத்துவதன் மூலம் மேற்கொண்டு வரும் அரசியல் செயற்பாடுகள் பல நாட்டுத் தலைவர்களின் கவனத்தையும் கரிசனையையும் தமிழர்கள் மீது ஏற்ப்படுத்தி உள்ளது.
இங்கு கருத்துரைத்த ஸ்பெயின் நாட்டில் பிரிந்து செல்லும் உரிமை கோரி போராடும் கடலோனியா (Cataloniya) மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவரும் கடலோனிய சுதந்திரத்திற்கான ஒருமைப்பாட்டு அமைப்பினை (Catalan Solidarity for independence) உருவாக்கியவருமான அல்போன்ஸ் லோபெஸ் டேனா ( Alfons López Tena),
பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான ஒன்று கூடலுக்கு அழைப்பு கிடைத்தமைக்கு பெருமை அடைகின்றேன்.
ஒரு கடலன் (Catalan) என்கின்ற முறையிலும் ஸ்பெயின் நாட்டின் முன்னாள் நீதித்துறையின் உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற வகையிலும்
இலங்கைத் தீவில் உள்ள தமிழர் தேசத்தின் நிலைமை, அங்கீகாரத்திற்கான போராட்டம், அதன் இருப்பு, மனித உரிமைகள், நீதி மற்றும் சுதந்திரம் என்பவற்றை புரிந்து
கொள்வதுடன் அவற்றினை ஏற்றுக் கொண்டுள்ளேன்.
நீதி விசாரணையும் தண்டனையளித்தலும், போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் இடம் பெறாது தடுத்தல் என்பவற்றினூடாக கெளரவமும் நீதியும் கூடிய ஒரு இறுதியான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான அங்கீகாரத்தினை வழங்குதல், தமிழர்களுக்கான ஆட்சி அதிகாரங்களை உறுதிப்படுத்தல், இலங்கையில் உள்ள இரு தேசிய இனங்களுக்கும் அதிகாரங்களைப் பகிர்தல், எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி தமிழர்களின் சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் போன்ற இன முரண்பாட்டு அடிப்படைக் காரணிகளின் தீர்வு கொடுக்கப்பட வேண்டும்.
இவ் இலக்கை அடைவதற்கு தொடர்ந்து உங்கள் எல்லோருடனும் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றேன் என்றார்.
இலங்கையில் தமிழர் தேசத்திற்கான அங்கீகாரமும் சுய நிர்ணய உரிமையும் வேண்டும்!
Reviewed by Author
on
March 29, 2016
Rating:

No comments:
Post a Comment