யாழில் வீட்டுத்திட்ட விண்ணப்பத்தில் முகவர் அரசியல் நடக்கின்றது!
யாழில் வீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும், கடைகளிலும் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனை மாவட்டத்தின் இணைத் தலைவர்களாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், அமைச்சர் ஒருவருமே செய்து வருகின்றனர் என வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய 48 ஆவது அமர்வில், வடக்கு,கிழக்கில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பிலான பிரேரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினரான பா.கஜதீபன் தெரிவிக்கையில்,
அண்மையில் நான் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அவர்களுக்கு வீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவம் என்று சொல்லி ஒரு படிவம் வழங்கப்பட்டது. அதனை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இணைத் தலைவர்களுள் ஒருவருமாக இருப்பவருடைய ஆதரவாளர்களே மக்களிடம் விநியோகித்தனர்.
இதனை நிரப்பிக் கொடுத்தால் வீட்டுத் திட்டம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைவிட மக்களிடத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 21 இலட்சம் ரூபா வீட்டுத் திட்டம் கிடைப்பதை எதிர்க்கின்றது என்ற கருத்தையும் பரப்பி வருகின்றனர்.
எங்களுக்கு 21 இலட்சத்தில் என்ன 42 இலட்சத்தில் கட்டிக்கொடுத்தாலும் வரவேற்போம். ஆனால், எங்கள் கலாசார - சூழலுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொடுக்க வேண்டும்" - என்றார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அவைத் தலைவர் சி.வி. கே.சிவஞானம், முகவர் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மக்களையும் எங்களையும் முரண்படச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதையும் கைவிட வேண்டும் என்றும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
யாழில் வீட்டுத்திட்ட விண்ணப்பத்தில் முகவர் அரசியல் நடக்கின்றது!
Reviewed by Author
on
March 26, 2016
Rating:

No comments:
Post a Comment