அண்மைய செய்திகள்

recent
-

கம்மன்பிலவின் முகத்தைக்கூட பார்க்க பிடிக்கவில்லை என்கிறார் சம்பந்தன்


உதய கம்மன்பிலவின் முகத்தை பார்ப்பதற்கும் கூட எனக்கு விருப்பம் இல்லாதுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை எனக்கும் உள்ளது. காரணம் நான் இந்நாட்டு குடிமகன். நான் இலங்கையன் எனும் போது ஏன் முடியாது? நாட்டை பிளவுபடுத்தும் நபர்களே பொய்க்கதைகளை கூறுகின்றனர்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்களே அதிகமாக உள்ளனர். எனவே அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களுக்கே வழங்க வேண்டும்.

இதேபோன்றே தெற்கில் சிங்களவர்கள் அதிகம் என்பதால் அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களிடம் வழங்க வேண்டும். இது தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

நாட்டை பிரிக்க வேண்டும் என யாரும் கோரவில்லை. எல்லோரும் இலங்கையர்களே. நாட்டை யாரும் பிரிக்க முடியாது.

அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்காக சென்றிருந்தேன். கலந்துரையாடல் முடிவின் போது சிலர் என்னிடம் வந்து, எமது இடத்தின் ஒரு பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இதனை நேரடியாக சென்று பாருங்கள் என்றனர்.

இதனையடுத்து நான் இராணுவ முகாமுக்குள் சென்றேன். என்னை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. நானும் பலவந்தமாக செல்லவில்லை. அங்கு ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை. நான் அங்கு சென்று பார்த்தேன். மக்கள் கூறியது போல் அவர்களின் இடம் சூறையாடப்பட்டிருந்தது. நான் ஒன்றும் கூறவில்லை. இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்திடம் கதைக்கின்றேன் எனக் கூறி அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

அங்கு இரண்டு மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர்.நான் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது இவ்வாறு சென்று அவதானிப்பது வழமை. இதேபோன்று கடந்த காலப்பகுதியில் வலிகாமத்துக்கும் சென்று பார்த்து வந்தேன். அங்கு இராணுவத்தினரும் இருக்கவில்லை. மக்களும் இருக்கவில்லை. இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவித்து பொதுமக்கள் பாவனைக்கு இடத்தை பெற்றுக் கொடுத்தேன்.

நான் நேரில் சென்று அவதானிப்பது எனது உரிமை. நான் பலவந்தமாக செல்லவில்லை. நான் வாகனத்தில் ஏறி வரும்போது இராணுவ அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம், சேர் நீங்கள் வருவீர்கள் என்று முன்னதாகவே அறிவித்து இருந்தால் நான் அதற்கென ஒருவரை ஏற்பாடு செய்து எல்லாவற்றையும் காண்பித்து இருப்பேன் என்றார்.

ஆனால் நான் அங்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லவில்லை.நாட்டைப் பிளவுபடுத்தும் நபர்களே இவ்வாறான கதைகளை கூறுகின்றனர். நான் பலவந்தமாக செல்லும் மனிதன் அல்ல.

நாட்டை இல்லாமல் செய்ய எத்தனிக்கும் உதய கம்மன்பிலவே இதனை முதலில் கூறியிருந்தார். அந்த மனிதரின் முகத்தை கூட பார்க்க எனக்கு விருப்பமில்லை.

இதுதொடர்பில் எவருக்காவது விளக்கம் வேண்டும் என்றால் நேரடியாக என்னிடம் வந்து பேச சொல்லுங்கள்.

அதைவிடுத்து பொய் கூற வேண்டாம் என்றார் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள்.
கம்மன்பிலவின் முகத்தைக்கூட பார்க்க பிடிக்கவில்லை என்கிறார் சம்பந்தன் Reviewed by NEWMANNAR on April 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.