தமது காணிகளையே தமிழர் கோருகின்றனர்--- ஜனாதிபதி
தமது காணியை மற்றுமொருவர் கையகப்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வடக்கிலுள்ள மக்கள் கடந்த 27 வருடங்களாக தமது காணிகளையே கோரிநிற்கின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி, நகோயா நகரில் வாழ்ந்து வரும் இலங்கைப் பிரஜைகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிடுகையில், இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்ந்தும் பலமான நிலையில் உள்ளதுடன், எந்தவகையிலும் அது வலுவிழந்து காணப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளினால் முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களால் ஏமாற்றமடைய வேண்டாமெனவும் இதன்போது ஜனாதிபதி கேட்டுள்ளார்.
தாய் நாட்டின் மீது கரிசனையுடன் பார்வையை செலுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பை நல்குமாறும் ஜனாதிபதி ஜப்பானில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புகளை உரியவாறு நிறைவேற்றாமையால், தற்போதைய அரசாங்கமே சர்வதேசத்திற்கு பதிலளிக்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஜப்பான், வியட்நாம், கொரியா போன்ற நாடுகள் யுத்த வெற்றியை நிலையான வெற்றியாகக் கொண்டு உலகின் பலமான நாடுகளாக மாறியபோதிலும், இலங்கையினால் அவ்வாறு தோற்றம்பெற முடியவில்லை. தேசிய நல்லிணக்கம், 27 வருடங்களாக வடக்கிலும், தெற்கிலும் மக்களிடையே நிலவிய சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையை செங்கற்களாலும், சீமெந்தினாலும் கட்டியெழுப்ப முடியாதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தமது காணிகளையே தமிழர் கோருகின்றனர்--- ஜனாதிபதி
Reviewed by Author
on
May 30, 2016
Rating:

No comments:
Post a Comment