இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மீனவர்கள்!
இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 34 பேரும் நாளை காரைக்கால் செல்லவுள்ளனர்.
இராமேஸ்வரம், பாம்பன், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏப்ரல் 4ம் மற்றும் 27ம் திகதிகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களில் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 9 பேர் என 13 மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, பாம்பன் பகுதியை சேர்ந்த 21 மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவிற்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்திய இரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கமைய சிறையிலிருந்த 34 மீனவர்களையும் மே 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நீதிமன்றங்கள் விடுவித்தன.
எனினும், இந்திய, இலங்கை கடல் பகுதியில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்து வந்ததால் மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
கடல் பகுதியில் சீரான நிலை ஏற்பட்டதையடுத்து 34 மீனவர்களும் இந்திய கடலோரக் காவல் படை கப்பல் மூலம் காரைக்கால் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்படவுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மீனவர்கள்!
Reviewed by Author
on
May 23, 2016
Rating:

No comments:
Post a Comment