அண்மைய செய்திகள்

recent
-

தற்கொலைத் தாக்குதல் நடத்த சிறார்களைப் பயன்படுத்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்!


இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதற்கு சிறார்களைப் பயன்படுத்தி வருவதாக அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த ஹாரி சர்ஃபோ எனும் மாணவர் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் கடந்த ஆண்டு இணைந்து சண்டையிட்டு வந்தார்.

குறுகிய காலத்திலேயே அதிலிருந்து வெளியேற முடிவு செய்த அவர், சிரியாவிலிருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் தப்பினார்.

ஜெர்மனியில் கைதான அவர், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் பெயரில் தற்போது அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், "தி இண்டிபெண்டென்ட்' ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிணைக் கைதிகள், இராணுவ வீரர்கள், சிறுபான்மையினர், சன்னி பிரிவினர் அல்லாதவர் என, தங்கள் எதிரிகளாகக் கருதுபவர்களை ஐ.எஸ். அமைப்பினர் படுகொலை செய்கின்றனர்.

தலையைத் துண்டித்தல், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல், கல்லால் அடித்துக் கொல்லுதல் உள்ளிட்ட முறைகளில் "மரண தண்டனை' நிறைவேற்றப்படுவதைத் தான் நேரில் கண்டுள்ளதாக ஹாரி சர்ஃபோ கூறினார்.

வெடிகுண்டுகள் பொருத்திய பெல்ட் அணிந்த 13 வயது சிறுவர்கள், ஏ.கே.47 ரக தானியங்கித் துப்பாக்கிகள் பயன்படுத்தும் சிறுவர்கள் உள்ளிட்ட சிறார்களை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப் பயன்படுத்தப்படுகின்றனர்.

கார் வெடிகுண்டு மூலம் நிகழ்த்தும் தற்கொலைத் தாக்குதல், தலை துண்டிப்பு போன்ற "மரண தண்டனை'களுக்கும் சிறார்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

உளவாளி என யாரை சந்தேகித்தாலும் உடனே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

அவருடைய சொந்த சகோதரரே அதனை நிறைவேற்றுவது உண்டு என்று ஹாரி சர்ஃபோ கூறியதாக "தி இண்டிபெண்டென்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

4,144 பேர் படுகொலை

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,144 பேரைப் படுகொலை செய்ததாக, பிரிட்டன் தலைநகர் லண்டனில் செயல்பட்டு வரும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

கடந்த 2014ம் ஆண்டு ஐ.எஸ். அமைக்கப்பட்டதிலிருந்து பல்வேறு "குற்றங்கள்' செய்தவர்களை தண்டனை என்ற பெயரில் படுகொலை செய்து வருகிறது.

வெளிநாட்டினர், சண்டையின் போது பிடிக்கப்பட்ட அரசுப் படை வீரர்கள், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பிணைக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

மேலும், ஓரினச் சேர்க்கை, மத நிந்தனை, போதை மருந்து, மதுபானம் கடத்தல் ஆகிய குற்றங்களைச் செய்தவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு "மரண தண்டனை' விதித்து வருகிறது.

இந்த வகையில், கடந்த மார்ச் மாத இறுதி வரையில், 4,144 பேர் படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 2,230 பேர் பொதுமக்கள். பெண்கள், குழந்தைகள் இதில் அடங்குவர்.

துரோகச் செயல்களைக் காரணம் காட்டி, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றிய சம்பவங்கள் பல நடைபெற்றுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியா மக்களுக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்தி வரும் கொடூரங்களை நிறுத்துவதற்கு, ஐ.நா. பாதுகாப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

நன்றி : Dina Mani
தற்கொலைத் தாக்குதல் நடத்த சிறார்களைப் பயன்படுத்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்! Reviewed by Author on May 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.