மண்சரிவு ஏற்படுவதற்கான காரணங்கள், குடியிருப்பு பிரதேசங்களின் ஸ்திரத் தன்மை குறித்து ஆராய வேண்டும்! விக்னேஸ்வரன்
மண்சரிவு ஏற்படுவதற்கான காரணங்கள், குடியிருப்பு பிரதேசங்களின் ஸ்திரத் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து இது போன்ற பாரிய மண்சரிவுகளில் இருந்து மனித உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் திட்டங்களை வகுக்க வேண்டும் என வடக்கு முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத்திய மலைநாடு மற்றும் கொழும்பு பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ள, மண்சரிவுகளில் பாதிப்புற்றவர்களுக்கான வடமாகாண முதலமைச்சரின் அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில்,
நேற்றைய தினம் அதாவது 18.05.2016ல் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் 7வது ஆண்டு நினைவேந்தல் துன்பியல் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உறவுகளை இழந்த பெற்றோர்கள், சகோதரர்கள் ஆகியோரின் துன்பச் சுமைகளை நாமும் பகிர்ந்து கொண்டு திரும்பிய வேளையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்ட செய்தி எம் அனைவரையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் கொழும்பை அண்டியுள்ள களனி கங்கைப் பகுதியிலும் மற்றும் கேகாலை மாவட்டத்தில் உள்ள புளத்ஹொஹுப்பிட்டிய பிரதேசங்களிலும் ஏற்பட்ட வெள்ள மற்றும் பாரிய மண்சரிவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 . 1/2 லட்சத்தையும் தாண்டியுள்ளதாக அச்செய்தி தெரிவித்துள்ளது.
அத்துடன் மாவனல்ல, அரநாயக்க பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் 134 பேர் வரை மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் இதில் 14 பேரின் சடலங்களை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் இவர்களுக்கான அவசர உதவிகள் தேவைப்படுமிடத்து அவற்றை விரைந்து முன்னெடுப்பதற்கு நாம் அனைவரும் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும் இச்சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் வினயமாக வேண்டி நிற்கின்றேன்.
மண்சரிவு ஏற்படுவதற்கான காரணங்கள், குடியிருப்பு பிரதேசங்களின் ஸ்திரத் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து இது போன்ற பாரிய மண்சரிவுகளில் இருந்து மனித உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் திட்டங்களை வகுக்க வேண்டும்.
முன்னர் கொஸ்லந்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட போதும் அவ்விடத்தைப் பார்வையிட்ட பின்னர் இதே கருத்தையே வெளிக்கொண்டு வந்தேன்.
தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்ற மீட்புப் பணியாளர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்படுவதற்கான காரணங்கள், குடியிருப்பு பிரதேசங்களின் ஸ்திரத் தன்மை குறித்து ஆராய வேண்டும்! விக்னேஸ்வரன்
Reviewed by Author
on
May 20, 2016
Rating:
Reviewed by Author
on
May 20, 2016
Rating:


No comments:
Post a Comment