அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கு அன்பு மடல்-வலம்புரி

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு அன்பு வணக்கம். நேற்று முன்தினம் வடக்கு மாகாண சபையின் 53ஆவது அமர்வில் சபை உறுப்பினர் ஒருவர் வலம்புரியை மஞ்சள் பத்திரிகை என்று கூறியிருந்தார்.
பின்னர் அந்த சொற்பதம் கன்சாட்டில் இருந்து நீக்கப்பட்டது.

வலம்புரி மஞ்சள் பத்திரிகையா? என்பதை எம் மதிப்பார்ந்த தமிழ் மக்களே தீர்மானித்துக் கொள்வர். எனவே அது தொடர்பில் நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

ஏனெனில் வலம்புரிப் பத்திரிகை ஆரம்பிக்கப் பட்டு 16ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 16 ஆண்டுகளைக் கடந்து வலம்புரிப் பத்திரிகை தனது மேலான பணியை வழங்கி வருகிறது. வலம்புரி நாளிதழை கட்டிக் காத்தவர்கள் எங்கள் உயிரிலும் மேலான தமிழ் மக்கள். எனவே வலம்புரி மஞ்சள் பத்திரிகையா? என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.

மாறாக வலம்புரி நாளிதழை மஞ்சள் பத்திரிகை என்று கூறியவர் தொடர்பிலும் தீர்ப்பளிக்க வேண்டியவர்கள் எங்கள் தமிழ் மக்கள் என்பதால், மஞ்சள் பத்திரிகை என்பது குறித்து நாம் ஒரு போதும் எதிர்வாதம் புரிய வேண்டியதில்லை.

இதற்கு மேலாக எம் ஊடகங்கள், ஊடக சகோதரர்கள் தாங்கள் யார் என்பதை-தங்களின் ஒற்றுமையை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர்.
எனவே வலம்புரி மஞ்சள் பத்திரிகை என்று கூறிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் தொடர்பில் நாம் இங்கு பிரஸ்தாபித்தால் அது சுயநலத்தின் பாற்பட்டது என்றாகி விடும்.

அறம் காக்க வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு பத்திரிகைக்கு இஃது அழகன்று என்பது நம் முடிவு.
எதுவாயினும் நம்மிடம் இருக்கக்கூடிய கவலை எல்லாம் போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் தமிழ் உறவுகளைத் தூக்கி விடுவதற்கு யார் உளர் என்பதுதான்.

வடக்கு மாகாண சபை எமக்குக் கிடைத்தால் எங்களால் முடிந்ததை செய்து, எங்கள் மக்களின் துன்பத்தை கொஞ்சமேனும் போக்கலாம் என்று நம்பினோம். இருந்தும் வடக்கு மாகாண சபையின் சில உறுப்பினர்கள் ஏனோ தெரியவில்லை சபையின் நடவடிக்கைகளை குழப்பி முதலமைச்சரின் நல்ல செயற்பாடுகளைத் திசைதிருப்பப் பெரும் பாடுபடுகின்றனர்.

அன்புக்குரிய வடக்கு மாகாண சபை உறுப்பினர்களே! இப்போதும் நாம் உங்களிடம் கேட்பது எங்கள் மக்களின் வாழ்வியல் பற்றி கவனம் செலுத்துங்கள். எங்கள் தாயகத்தின் பொருளாதாரம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, உற்பத்தி முயற்சிகள், தொழிற்சாலைகள், வளப் பெருக்கங்கள், தமிழ்மொழிப் பாதுகாப்பு, மாணவர்களின்- இளைஞர்களின் ஒழுக்கம், பண்பாடு இவை பற்றி சிந்தியுங்கள். சபையில் இருக்கக்கூடிய நீங்கள் இதைச் சிந்திக்காவிட்டால் யார் சிந்திப்பர்.

ஒரு மாகாண அரசு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதை நாம் எவ்வாறு வழிப்படுத்துகிறோம் என்று யோசித்துப் பாருங்கள். கொழும்பில் இருக்கக்கூடிய ஒரு சிலரின் நாசகார செயலுக்கு நீங்கள் ஏன் பலியாகிறீர்கள். அவர்களை நம்பி உங்களுக்கு வாக்களித்த மக்களை மறந்து செயற்படுவது நியாயமா? என்று பாருங்கள்.

ஆகவே அன்புக்குரிய வடக்கு மாகாண சபை உறுப்பினர்களே! எங்கள் மக்களுக்கு உதவுவோம் என சத்தியம் செய்து முதலமைச்சருடன் சேர்ந்து திட்டமிட்டு செயல் ஆற்றுங்கள்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு நாங்கள் அல்லவா உதவி செய்ய வேண்டும். இதைச் செய்யாது விட்டால் பாவமும் பழியும் வந்து சேரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கு அன்பு மடல்-வலம்புரி Reviewed by NEWMANNAR on May 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.