அண்மைய செய்திகள்

  
-

அதிர வைக்குமா ஜூன் 11? பேரணிக்கு முதல்வர் கொடுத்த 'கிரீன் சிக்னல்'! -


ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு 25 ஆண்டுகால சிறை வாழ்க்கையை நிறைவு செய்கிறார்கள்.

இவர்களின் விடுதலையை எதிர்நோக்கி நடக்கும் கோரிக்கை பேரணி அரசியல் கலப்பு இல்லாமல் அதிர வைக்கிறது.

விசாரித்துவிட்டுக் காலையில் அனுப்பி விடுகிறோம் என்று சொல்லித்தான், கடந்த 1991-ம் ஆண்டு ஜுன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளனை போலீஸார் அழைத்துச் சென்றார்கள்.

அன்றிலிருந்து இன்று வரையில் பேரறிவாளனுக்கு விடியவே இல்லை. இத்தனை ஆண்டுகால சிறைவாசத்தில் ஒருநாள் கூட பேரறிவாளன் பரோலில் வெளிவரவில்லை.

இவருடன் முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களும் சிறையில் வாடுகின்றனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும், 'ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மர்மம் இருக்கிறது' என அதிர வைக்கும் சந்தேகங்கள் வெளிவந்தாலும், நிரந்தரத் தீர்வு தள்ளிக் கொண்டே போனது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ' இவர்களை விடுதலை செய்வதில் அரசுக்கு எந்தத் தயக்கமும் இல்லை' என அறிவித்தார்.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் விடுதலையில் தாமதம் ஏற்பட்டது. சமூக ஆர்வலர்களும் மனித உரிமை ஆர்வலர்களும், ' அரசியல் சட்டப்பிரிவு 161-ன்படி மாநில அரசே அவர்களை விடுதலை செய்யலாம்' எனப் பேசி வந்தனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கு ஓரிரு வாரம் முன்பு வரையில், 'எப்போது வேண்டுமானாலும் ஏழு பேர் விடுதலை செய்யப்படலாம்' என சிறை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்தது.

இந்நிலையில், வருகிற ஜுன் 11-ம் தேதி வேலூரில் இருந்து கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி நடத்த அரசிடம் அனுமதி கேட்டார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள். அவரது கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்துள்ளதை மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்கின்றனர்.

இதுபற்றி அற்புதம் அம்மாளிடம் பேசினோம்.

25 வருஷம் முடிஞ்சு போச்சுப்பா. அக்கா, தங்கை கல்யாணத்துக்கும் அவன் வரலை. அவனுக்கு ஆதரவாக இருந்த கிருஷ்ணய்யர், சொந்த தாத்தா, பாட்டி சாவுக்குக்கூட அவன் வரலை.

விடுதலை செய்யனும்னு மாநில அரசு முடிவெடுத்தாலும், மத்திய அரசு இடையூறு செய்கிறது. இத்தனை வருஷமா தனிமைச் சிறையில அவஸ்தைப்பட்டுட்டு இருக்கான். சாதாரண சிறைவாசிகளுக்குக் கிடைக்கற சலுகைகூட அவனுக்குக் கிடைக்கலை.

அவனோட வாக்குமூலத்தை வச்சுத்தான் கோர்ட் தண்டனை கொடுத்தது. ஆனால், வாக்குமூலம் வாங்குன சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன், 'நான் தவறுதலா எழுதிட்டேன். அறிவு தப்பு பண்ணலைன்னு' சொன்னார்.

16 வருஷமா அறிவை கண்காணிப்பில் வச்சிருந்த சிறை அதிகாரி ராமச்சந்திரன், 'இவரைப் போல ஒரு நல்ல மனுஷனைப் பார்க்க முடியாதுன்னு' சொன்னார்.

என் மகன் தப்பு பண்ணலைங்கறதுக்கு எவ்வளவோ ஆதாரம் வெளியில் வந்தது. அவனும், 'எப்படியாவது வெளியில வந்துருவான்'னு நம்பிக்கையோட இருந்தோம்.

அவனோடு சேர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான், கோரிக்கை பேரணி நடத்த இருக்கிறோம்.

அரசியல் சார்பு இல்லாமல் மனிதநேயம் உள்ளவர்கள் எல்லோரும் இதில் கலந்துக்கனும். என்னோட கோரிக்கை மனுவை முதல்வர் வாங்கினாலே போதும். மனதளவில் திருப்தி அடைந்துவிடுவேன்" என்றார் கவலையோடு.

மனிதநேயத்தோடு இந்த கோரிக்கை பேரணியில் பங்கேற்போம்' என அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னால் தனிமைச் சிறையில் எந்தவொரு கைதியும் இவ்வளவு நாட்கள் அடைபட்டுக் கிடந்ததில்லை.

கோட்டையை நோக்கிய அற்புதம் அம்மாளின் பேரணி, ' முதல்வரை அதிரடியாக முடிவெடுக்க வைக்கும்' என நம்புகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

அதிர வைக்குமா ஜூன் 11? பேரணிக்கு முதல்வர் கொடுத்த 'கிரீன் சிக்னல்'! - Reviewed by Author on June 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.