மன்னார் மாவட்டத்தின் அடம்பனில் அமைந்தள்ள பசுமை புரட்சியினை மேற்கொள்ளும் “சுய தேவைப் பூர்த்தி மாதிரிப் பண்ணை”
மன்னார் மாவட்டத்தின் அடம்பனில் அமைந்தள்ள பசுமை புரட்சியினை மேற்கொள்ளும் “சுய தேவைப் பூர்த்தி மாதிரிப் பண்ணை”
திருக்கேதீஸ்வரஆலயத்தில் இருந்து 5கிலோமீற்றர் தூரத்தில் இயற்கை முறை விளைச்சலையும் அழகான காட்சிகளையும் கண்டு இனிமையாகப் பொழுதைக் களிக்கவென தனியெரு நபரினால் உருவாக்கப்பட்ட பண்னைதான் இந்த சுயதேவைப் பூர்த்தி மாதிரிப்பண்னை. இதற்கு அடம்பன் பண்னை என பெயரிடப்பட்டுள்ளது.
பண்ணையின் உரிமையாளரைப் பற்றி-
மன்னார் அடம்பனை சொந்த இடமாகவும் அடம்பன் கிராமத்தின் முதல் பட்டதாரியுமான இவர் யுத்தம் காரணமாக சுவிஸ்சுக்கு புலம்பெயர்ந்து அங்கு தனது திறமையினை வெளிப்படுத்தி கணணி விஞ்ஞானியாகவும் மொழி பெயர்ப்பாளராகவும்; செய்மதி மூலம் ஐரோப்பாவில் முதலாவது வானொலி மற்றும் தொலைக்காட்சியினை நடத்தியவர்களில் தானும் ஒருவராக தன்னை நிலை நிறுத்திய சுவிஸ் மூர்த்தி மாஸ்ரர் என்று அழைக்கப்படுகின்ற நாகேஸ் உருத்திர மூர்த்தி ஆவார்…
இவரது கல்வி தொழில் சேவைகள் பற்றி---
பிரதான தொழிலாக கணனிவிஞ்ஞானியாக சுவிஸ் நாட்டில் கடமையாற்றி ஓய்வுபெற்றவர்.
சுவிசில் அரச மொழிபெயர்ப்பாளராக கணணி ஆசிரியராக பத்திரிகை விநியோகஸ்த்தராக சமூக ஆலோசகராக வானொலி நடத்துனராக தொலைக்காட்சி நிறுவனப்பங்காளராக புத்தகவெளியீட்டாளராக மென்பொருள் வெளியீட்டாளராக வலம் வந்த இவர் தற்போது யாழ்பல்கலைக் கழகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில்வருககை தரு விரிவுரையாளராகவும் அடம்பன் பண்னையின்; நிர்வாகியாகவும் உள்ளார் திரு.நாகேஸ் உருத்திரமூர்த்தி.
இப்படியான பண்னையை அமைக்கவேண்டும் என்ற எண்ணம் ------
இது எனது சிறுவயதில் தோண்றிய எண்ணம் அப்போது எங்களுக்கு வசதி இருக்கவில்லை.1972ம் ஆண்டில் தான்?? அத்தோடு எனது தந்தை விவசாயியாக இருந்ததினாலும் விவசாயத்தின் மீதும் வயல்நிலங்களோடு திரிந்த காலமது அன்று தோன்றிய ஆசை அப்படியே என்னுடன் வளர்ந்து இன்று இங்கே ஒரு பண்னையாக உருப்பெற்றிருக்கின்றது.
போர் முடிந்த பின்புதான் நான் எனது சொந்த இடத்திற்கு வந்து இங்குள்ள சிலரை கூட்டி அந்த புளியமரத்தின் கீழ் தான் கலந்துரையாடினோம் (ஒரு புளியமரத்தினை காட்டினார் பெரிதாகவும் நிழல் தருவதாகவும் இருந்தது) பற்றைக்காடாகவும் கன்னிவெடிகளுமாக இருந்ததால்பெரும் சிரமத்தின் மத்தியில்; துப்பரவு செய்தோம்.2010 யூலை மாதம் இந்த சுயதேவைப் பூர்த்திப் பண்ணையை ஆரம்பத்தி போதும் 2013லிருந்து நான் அடம்பனில் தான் வசித்துக் கொண்டிருக்கின்றேன்.
சுயதேவைப்பூர்த்தி மாதிரிப் பண்ணை என்பதன் விளக்கம்---
சுயதேவைப் பூர்த்தி என்பது தனது தேவையினை வாழ்வாதாரத்தினை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சி தான். ஏனையவர்களும் இப்பண்ணையை மாதிரியாக எடுத்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்பண்னையை ஆரம்பித்தோம்.
இது எனது தனிப்பட்ட முயற்சியியே.தற்போது இங்கு 15 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களது குடும்பத்திற்கு வருமானம் கொடுப்பதன் மூலம் அவர்களது குழந்தைகள் கல்வி பெற வாய்ப்பு ஏற்படுகிறது என்பதே எனக்கு நிறைவு தருகிறது. எனது திட்டத்தில் இதுவரை சுமார் 65 வீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது
இப்பண்ணையில் என்னவெல்லாம் உள்ளது----
- பயோகாஸ்(Bio Gas) உயிரியல் எரிவாயு உற்பத்தி
- காற்றலை மூலம் மின்சாரம் காற்றலை மூலம் நீர்ப்பாசனம்.
- சோலர் சூரியசக்தி மூலம் நீர்ப்பாசனம் என மாற்று சக்திகளை அறிமுகப்படுத்திப் பயன் படுத்துகிறோம்.
- கோழி--தாரா-- வாத்து-- கினிக்கோழி-- வான்கோழி--ஆடு-- மாடு-- பண்டி முயல் போண்ற பல வகையான வளர்ப்பினங்கள் பண்ணையியை அழகு படுத்தும் போது
- ஒருங்கினைந்த நன்னீர் மீன்வளர்ப்பு மூலம் பறவைகளின் கழிவுகளை உணவாகவும் விவசாயத்திற்கு உரமாகவும் மாற்றப் படுகின்றது.
- பச்சை வீட்டுத்தோட்டம் மாதிரிக்காக உள்ளது. இதன் மூலம் குறைவான நீர்ப் பாவனை வெப்பக் கட்டுப்பாடு என்பன எடுத்துக்காட்டப் படுகிறது.
- பிரதான உற்பத்தியாகக் காடை அறிமுகம் செய்யப்பட்டு வடமாகணத்தில் காடை உற்பத்தியும் வளர்ப்பும் பெரும் அளவில் மேற்கொள்ளப் படுகிறது.
- நச்சு இரசாயனக் கலப்பற்ற இயற்கையான முறையில் காய்கறிகள் பழவகைகள் மற்றும் ஏனைய பயிர்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன.
- இயற்கையுரமும்--இயற்கையான பூச்சிநாசினிகளும் மட்டுமே பயன் படுத்தப் படுகிறது.
நிதிப்பங்களிப்பு எவ்வாறு கிடைக்கின்றது---
எல்லாமே எனது சொந்த பணத்தில் தான் செய்துவருகின்றேன்.எனது ஓய்வுதியம் முழுமையாகப் பயன் படுத்தப்படுகிறது.
சுவிசில் பல வேலைகள் செய்து 24 மணி நேரமும் சுறுசுறுப்பாய் இருந்த என்னால் ஓய்வு என்று சும்மா இருக்க பிடிக்கவில்லை.
வேலையின்றி இருந்தால் சோம்பேறியாகி வேகமாக கிழவனாகி விடுவேன்.
அல்லது மகாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் கவி வரியில் வருவது போல செத்துப் போய்விடுவேன்.
சிங்கப்பபூர் பென்சனியர் பெருஞ்சித்தனார்
வந்தமர்ந்தார் பெருங்கதிரை மீதினிலே
ஐந்தாறு நாளிலே அவர் காலமானார்
பெரும் பஞ்சியினாலே.
ஐரோப்பிய வாழ்வில் பிள்ளைகள் பெற்றோரை வயோதிப காலத்தில் பராமரிக்கும் வாய்ப்புக்கள் இல்லை என்பதால்; வயோதிபர் இல்லங்களே வதிவிடமாகிவிடும். அந்த வயோதிபர் இல்லத்திற்கு எனது ஓய்வுதியம் முழுவதும் கொடுத்தாக வேண்டும். அதே பணத்தில் எனது நாட்டில் நானும் வாழ்ந்து என்னுடன் 20 குடும்பங்களும் வாழ முடியும் என நான் நினைத்தேன்.
எனது ஆடம்பர படுக்கை ஐரோப்பிய உணவு வெள்ளைக்கார வேலைக்காறிகள் என்பவற்றை மட்டுமே நான் தியாகம் செய்ய வேண்டும் அந்த சிந்தனைதான் என்னை இங்கு கொண்டு வந்ததது.
எனது மாதாந்த ஓய்வுதியப் பணம் அடம்பன் பண்ணையையும் அங்கு வேலை செய்யும் பல குடும்பங்களையும் வாழவைக்கிறது. நானும் நிம்மதியாக வாழ்கின்றேன்.
எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வாழ்வினிலே. அது எனக்கு சில லட்சங்களில் கிடைக்கின்றதே.
அப்படியானால் இந்தப் பண்ணையில் இருந்து லாபம் பெறப்படுவதில்லையா---
இதைநான் இலாபநோக்கிற்காகவும் செய்யவில்லை எனது ஆசையும் பொழுது போக்கும் இதுதான். அதனால் எனக்கு இலாபம் என்பது ஒரு விடையமே அல்ல இங்கு உற்பத்தி செய்யும் எந்தப்பொருட்களும் சந்தைக்கு அனுப்பப்படுவதில்லை இங்கு வந்துதான் பெற்றுக்கொள்கின்றார்கள்.
மின்சாரம் இன்றி இயங்கும் குளிர்சாதனப்பெட்டி----
சுற்றிவர இரண்டு சுவர்களைக் செங்கற்களால்- கட்டி இடையில் மணலை நிரப்பி ஈரமாக்கினால் மட்டும் போதும். குளிர்ச்சி உள்ளே ஏற்படும். வெய்யில் வெளியில் 32 பாகை வெப்பமாக இருப்பினும் இந்த குட்டி அறைக்குள் 7 அல்லது 8 பாகை மட்டுமே இருக்கும். மரக்கறிகளோ பழங்களோ எதுவானாலும் பழுதபடாமல் சில நாட்களுக்கு வைத்திருக்க முடியும்.இதை ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் செய்யலாம்.
அதுபோலவே உயிரியல் எரிவாயு (Bio Gas) பாவனையும்---
விலங்குகளின் கழிவிலிருந்து பெறப்படும் உயிரியல் எரிவாயு எமது பண்ணையில் உள்ள குடியிருப்பாளகளின் சமையல் தேவைக்கு இலவசமாக கிடைக்கிறது.
மாட்டுத் தொழுவம் பண்றிக் கொட்டில் என்பவற்றில் இருந்து கிடைக்கும் கழிவுகளைப் பயன் படுத்தி இயற்கை எரிவாயு தாயாரித்துப் பயன் படுத்தும் நாங்கள் மற்றவர்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என ஆலோசனை அளித்த வண்ணமே இருக்கின்றோம்.
மன்னார் நகர்ப்புற மக்களுக்கா இந்தியாவில்; பிரபலாமாக இருக்கும் சமயலறைக் கழிவை மட்டும் பயன் படுத்தி எரிவாயு எடுக்க ஏதுவான சாதனம் ஒன்றையும் மாதிரியாக உருவாக்கி இயக்கி காட்சிப் படுத்துகின்றோம். இதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்து தாங்களும் இதை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆரம்பச் செலவு கிட்டத்தட்ட 65000 ரூபாய்கள் செலவாகும் என்பதால் பின்னிற்கின்றார்கள்.
புலம் பெயர்ந்து வாழ்ந்து வாழும் நன்பர்கள் உறவினர்கள் இதைச் செய்ய உதவலாம். மோட்டார் சைக்கிளும் ஐபோனும் செய்யாத நீண்டகால பயனை இந்த உயிரியல் எரிவாயு சாதனம் செய்யும் என்பது நிச்சயம்.
புலம் பெயர் நலன் விரும்பிகள் மூலம் விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது திட்டத்தில் ஒன்று.
எமது பண்ணையில் மனிதக் கழிவிலிருந்தும் உயிரியல் எரிவாயு உற்பத்தி செய்யப் படுகிறது. நான் பெருமைப்படும் விடயம் இது. ஆனால் அறிவுக் குறைவால் முகம் சுழிப்போருக்காக அடக்கி வாசிக்கின்;றேன்.
உங்களது பண்ணையின் பிரதான உற்பத்திப்பொருள் என்ன---
எமது பண்னையின் பல உற்பத்திகள் நடந்தாலும் பிரதான உற்பத்தியாக காடை தான் உள்ளது காரணம் வடமாகாணத்திலே நாங்கள் தான் அதிகமாக உற்பத்தி செய்கின்றோம். இதற்கான கேள்வி அதிகமாகவுள்ளது காடை இறைச்சியானாது கொழுப்பற்றதும் கான்சர் நோயினை கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது.சிறுவர்களுக்கான ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது.
அடை காக்கும் பொறி பயன்பாடு உள்ளதா----
ஆம். எமது முட்டைகளையும் ஊரவர்கள் தரும் முட்டைகளையும் குஞ்சாக்க நாம் இதைப் பயன் படுத்துகின்றோம். இது இயற்கையான பொரிக்கும் நாட்கணக்கிலேயே குஞ்சுகள் வெளி வரும். மெசினில் வைத்தால் ஒரு நாளில் குஞ்சு வரும் எனச் சிலர் தப்பாக நினைக்கின்றார்கள்.
தங்கள் பண்ணையில் புரொய்யிலர் கோழி உற்பத்தி செய்யப்படுவதில்லையா…
- ஆரம்பத்தில் செய்திருந்தோம் பின் அதன் விளைவினை அறிந்து முற்று முழுதாக உற்பத்தியை நீக்கிவிட்டோம். ஊர்க்கோழிதான் உற்பத்தி செய்கின்றோம் புரொய்யிலர் கோழி உற்பத்தியென்பது 45நாட்களில் நடைபெறுகின்ற விடையம் 3 நாட்களுக்கு ஒருதடவை மருந்து கொடுக்கவேண்டும் அப்படியாயின் குறைந்தது15 தடவைகள் மருந்து கொடுக்க வேண்டும் சாதாரணமாக ஒரு தடவை ஏற்றப்படுகின்ற மருந்தானது முற்றுமுழுதாக வெளியேறுவதற்கு குறைந்தது 7 நாட்களாகும்அப்படியாயின் 12-13 தடவைகள் ஏற்றப்படுகின்ற மருந்தானது வெளியேறுமுன்னமே விற்றுவிடுவார்கள் அதுதானே 45நாள் கணக்கு சற்று சிந்தித்துப்பாருங்கள் மருந்துகள் அவ்வளவும் படிந்து இருக்கும் அதைத்தான் நாம் உண்ணுகின்றோம் பக்கவிளைவுகளைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
- இலங்கையில் உள்ள எனக்குத் தெரிந்தவர்ளில் 90 வீதமானவர்கள் டையாபிற்றிக்ஸ் பிறசர் கொலஸ்ரரோல் என அனைத்து வருத்தங்களையும் ஆங்கிலத்தில் மட்டுமே அடுக்குகிறார்கள். அதற்கு புரொய்லரும் முக்கிய காரணம் என்றால் நம்ப மாட்டார்களாம். பாவம்.
ஆனால் ஊர்க்கோழியானது முழுமையான வளர்ச்சிக்கு 7 மாதமாகி;றது சத்தானதும் ஆராக்கியமானதும் 7 மாதவளர்ச்சியைத்தான் 45 நாட்களாக சுருக்கி புரொய்யிலர் கோழி உற்பத்தி செய்யப்படுகின்றது அதைத்தான் நிறுத்தி விட்டோம் ஏன் எனில் வியாபாரம் நோக்கமல்ல ஆரோக்கியமே - ஆ.. இன்னும் ஒன்று நாங்கள் எங்கள் கோழிகளுக்கு எங்கள் பண்ணையில் விளையும் நெல்லு அரிசி குருநல் தவிடு என்பவற்றையே தருகின்றோம். இரசாயனம் கலந்த கோழி உனவுகள் பாவிப்பதிலலை. அவை விலையும் அதிகம் ஆபத்தும் அதிகம்.
மேலதிகமான திட்டங்கள் எவை வைத்துள்ளீர்கள்---
திட்டங்கள் நிறையவுள்ளது ஒவ்வொன்றும் செய்யும் போது தான் வெளிப்படும் எமது பண்னையில் தற்போது 3குளங்கள் உள்ளது அதில் ஒரு குளம் ஆழமாகவும் ஏனைய இருகுளங்கள் பெரிதாக ஆழம் இல்லை அத்தோடு அந்தக்குளத்தினை ஆழப் படுத்துவதோடும் இன்னும் இரண்டு குளங்களை புதிதாக உருவாக்க எண்ணியுள்ளேன்.
- ஒன்று பண்டிகளை இயற்கையான முறையில் வளர்ப்பதற்காகவும் இன்னொன்றை தாராääமீன்வளர்ப்பிற்காகவும் அத்தோடு தண்ணீர் பிரச்சினையை தீர்பதற்காகவும். மன்னாரின் முக்கிய பிரச்சனை தண்ணீர் தானே.
- குளத்தின் நடுவே அழகான சிறிய வீடு ஒன்று கட்ட தீர்மானித்துள்ளேன் மாலைவேளைகளில் ஓய்வாகபொழுதைக் கழிப்பதற்காக. அத்தோடு பண்னையை சுற்றி சீமைக் கீளுவை எனப்படும் கிளிசறியாவைவேலியிருந்து 3 அடி இடைவெளியிலும் இடையிடையே அகத்தியும் நடவேண்டும் இவை எமது ஆடுகளுக்கு உணவாகும். இயற்கை கிருமிநாசினி தயாரிக்கும் மூலப்பொருளும் கிடைக்கும்.
- பண்டி வளர்ப்பினை பெரியளவில் மேற்கொள்ள திட்டம் உள்ளது. எம்மைப் பார்த்து தனிப்பட்ட சிலர் சிறிய பெரிய அளவில் பண்றி வளர்ப்பினை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆலோசனையும் அனுபவப் பகிர்வும் மகிழ்வுடன் அளிக்கிறோம்.
- எனது ஆசையில் இதுவரை 65 வீதம் தான் நிறைவடைந்துள்ளது மீதமுள்ள35 வீதத்தினை பூர்த்தி செய்து இருக்கும் போது பல புதிய புதியதிட்டங்களையும் பலருக்கான வேலைவாய்ப்பினையும் ஆரோக்கியமான சு10ழலையும் உருவாக்கி இந்த சுய தேவையைபூர்த்தி செய்கின்ற அடம்பன் பண்ணை சிறந்த பண்ணையாகவும் வடமாகணத்திலே முதன்மையான பண்ணையாகவும் இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.....
இந்தப் பண்ணையில் வேலை செய்பவர்களைப்பற்றி---
மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் வேலைசெய்கின்றார்கள் ஆணும் பெண்ணுமாக 20பேர் வரை வேலை செய்கின்றார்கள் ஆண்களுக்கு 30 ஆயிரம் பெண்களுக்கு 23 ஆயிரம் மாத வருமானம் கிடைக்கிறது.
அத்தோடு அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்காகவும் எனது செயற்பாடுகளாக….
- வெளியில் 5ஏக்கர் காணியை குத்தகைக்கு எடுத்து அனைத்து விதமான பொருளுதவி பண உதவியினை கொடுத்து விவசாயம் செய்து வருகின்ற லாபத்தினை பகிர்ந்து எடுக்கச்சொன்னேன் கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரிதாக இலாபம் பெறவில்லை 50000 ரூபாவினை பிரித்தெடுத்தார்கள்.
- அதுபோல எனது காணியிலேயே ஒவ்வொவருக்கும் ஒரு ஏக்கர் கொடுத்தேன் வேண்டிய பொருளுதவியும் கொடுத்தேன் லாபத்தில் இல்லை உற்பத்தியில் 3இல் ஒரு பங்கு பண்ணைக்கு தரவேண்டும் என்றேன். எல்லோரும் ஈடுபட்டார்கள் தற்போது ஒருசிலர் மட்டும்தான் மரவள்ளி-- கீரை மற்றும் பனங்கிளங்கு பயிரிடுகின்றார்கள்.
- அதுபோல ஒவ்வொருவருக்கும் மாடு ஒன்று வேண்டிக்கொடுத்துள்ளேன் அதில் கிடைக்கும் லாபம் அவர்களுக்குத்தான் இவ்வாறாக என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றேன் அவர்களுக்கு இந்த வேலையே நிரந்தரமாக இருந்தால் அவர்களது குடும்பம் நிரந்தர வாழ்வாராரத்தினைப்பெறுமல்லவா…
இங்கு மக்கள் வருகின்றார்களே எதற்காக----
எமது பண்ணையை பார்வையிடுவதற்கும் எமது பண்ணையில் உற்பத்தி செய்யப்படுகின்ற நச்சு இரசாயனக் கலப்பற்ற உற்பத்திகளை வாங்குவதற்கும் வருகிறார்கள். அத்தோடு தமக்கு தேவையான மீனை தாங்களே குளத்தில் பிடிக்கலாம் தூண்டிலும் புளுவும் கொடுப்போம் தங்களது மீனை தாங்களே பிடித்தாகவும் போய்விடும் அதேவேளை பொழுது போக்காகவும் இருக்கும்.
எமது குளத்தில வோட்டிங் செல்லலாம்;
அனுமதி பெற்ற துப்பாக்கி உள்ளது சு10ட்டிங்செய்யலாம்
வளர்க்கப்படுகின்ற விலங்குகள் பறவைகள் பார்வையிடலாம்.
குடும்பமாக வருபவர்கள் தமது பொழுதைக்கழிப்பதற்கு அதாவது இயற்கையான உணவுகளை இங்கேயே மரங்களுக்குக் கீழே சமைத்து உண்பதற்கும் வருவார்கள்.
சிறுவர்களுக்கான தொடரூந்து செய்வதற்கும் எண்ணியுள்ளதோடு சிறுவர் விளையாட்டுப்பூங்கா அமைக்கவும் பெரியவர்கள் வோக்கிங் செல்வதற்கும் இயற்கையான முறையில் இயற்கையை ரசிப்பதற்கும் ஏதுவானமுறையில் பல அம்சங்களை செய்யவுள்ளேன்.
கல்வி வளம் மிக்கவரான நீங்கள் ஏன் பண்ணைஅபிவிருத்தியோடு அடம்பன் வாழ்கின்ற மாணவர்களுக்கான ஆங்கில மற்றும் கணனிக்கல்விச்செயற்பாட்டினை முன்னெடுக்க கூடாதா…?
எனது முழுமையான எண்ணமே எனது நாடும் எனது மக்களும் பயன்பெறவேண்டும் என்பதே. அந்த எண்ணத்தோடுதான் இங்கு வந்தேன். ஆனால் எனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவே எனக்கு நேரம் போதவில்லை அத்தோடு நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத்துறையில் வருகைதரு விரிவுரையாளராக கடமையாற்றுகின்றேன். பண்ணையும் பல்கலைக்கழகமும் எனது நேரத்தை நிரப்பினாலும்.
மன்னார் வர்த்தக சாமாசத்தில் அங்கம் வகிப்பதால் இலங்கை முழுவதும் கூட்டங்கள் வகுப்புக்கள் எனவும் ஓடித் திரிகிறேன். மன்னார் சுற்றுலா அபிவிருத்திச் சபையிலும் எனது பங்களிப்புகள் பல உண்டு.
மிகவிரைவில் நேரத்தினை ஒதுக்கி எனது மக்களுக்கான மாணவர்களுக்கான ஆங்கிலம்-- யேர்மன் மற்றும் கணனிக்கல்வியினை இலவசமாக வழங்குவதற்கான முழுமுயற்சியினையும் மேற்கொள்வேன்.
உங்களது வாழ்க்கைப்பதிவில் இருந்து தற்கால இளைஞர்யுவதிகளுக்கு அறிவுரை--
நான் எனது சிறுவயதில் பெரிதாக படிக்கவில்லை விளையாட்டுத்தனமாக வயற்காடுகளில் திரிந்தேன் O-L/A-L கூட படிக்கவில்லை அதற்குள் திருமணம் செய்து கொண்டோம். அதன்பின்புதான் சிந்தித்தோம் என்ன செய்வது என்று.திருமணத்தின் பின்னர் 21 வயதில் தான் நானும் எனது மனைவியும் O-L/A-L எடுத்தோம் சித்தியடைந்தோம். பல்கலைக்கழகம் சென்றோம் நான் யாழ்பல்கலைக்கழகத்திலும் எனது மனைவி கண்டி பெரதெனியாவிலும் படித்தோம்.
சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்தோம். அங்கும் என் கல்வி என்னைக் கைவிடவில்லை. நானும் எனது கல்வியை கைவிடாமல் தொடர்ந்தேன். லண்டன்-- சுவிஸ் பல்கலைக் கழகங்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட சாண்றிதல்கள் என்னிடம் உள்ளது.
கற்றல் கற்றல் கற்றல் கல்வியால் தான் நாம் எதையும் அடையமுடியும் அதற்கு விடாமுயற்சியும் நம்பிக்கையும் வேண்டும். வெற்றி எப்போதும் நமக்குத்தான்….
மன்னார் மக்களின் பிரதி நிதியான நியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து-
எங்களுடைய காலங்களில் இவ்வாறான இணையங்களோ ஊடகவசதிகளோ இருக்கவி;ல்லை மன்னார் சார்ந்த பல விடையங்களை நியூமன்னார் இணையத்தின் மூலம் தான் உடனுக்குடன் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. குறிப்பாக அன்மையில மன்னாரில் இருந்து முதலாவது கலாநிதி விருது பெற்ற அடம்பனைச் சேர்ந்த திருமதி சுமலதா அவர்கள் பற்றி உங்கள் இனையம் மூலம் தான் அறிந்தேன். நேரடியாகச் சென்று அவரை வாழ்த்தினேன். அன்று நான் அடம்பனில் இருந்து சென்று யாழ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற முதல் நபராக இருந்த போதும் என்னை வாழ்த்தவோ பாராட்டவோ யாரும் இருக்க வில்லை. காரணம் யாருக்கும் தெரியவில்லை. அதற்குக் காரனம் உங்கள் இணையம் அன்று இருக்கவில்லை.
பல்வேறு கௌரவங்களை நம் மக்களுக்கு வழங்குகின்றது இந்த நியூமன்னார் இணையம். அந்த வகையில் இன்று எங்களது பண்ணைக்கும் வந்து சுற்றிப்பார்வையிட்டதோடு என்னிடம் பேட்டியும் கண்டு மன்னார் மக்கள் மட்டுமல்லாது ஏனைய உலக வாழ்மக்களுக்கும் இந்ததப்பண்ணையின் சிறப்பினையும் எதிர்காலவளர்ச்சியினையும் வெளிக்கொணர்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். எங்களைப்போன்றவர்களின் எண்ணங்கள் முழுமையடைய வேண்டுமானால் நியூமன்னார் இணையம் இன்னும் தனது சேவையினை விஸ்தரிக்கவேண்டும் பணி தொடர வேண்டி இறையாசி வேண்டி நிற்கின்றேன்…..
நியூமன்னார் இணையத்திற்காக வை-கஜேந்திரன்

மன்னார் மாவட்டத்தின் அடம்பனில் அமைந்தள்ள பசுமை புரட்சியினை மேற்கொள்ளும் “சுய தேவைப் பூர்த்தி மாதிரிப் பண்ணை”
Reviewed by Author
on
June 04, 2016
Rating:

No comments:
Post a Comment