மயிலிட்டி காணிகளை விடுவிக்க படை மறுப்பு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை; வடக்கு முதல்வர் தெரிவிப்பு -
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பிடியிலுள்ள மயிலிட்டியையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் விடுவிக்க முடியாதெனக் கூறுகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை விடுவிக்க முடியாதென்பதற்காக அவர்கள் கூறுகின்ற காரணமும் தவறானதெனச் சுட்டிக்காட்டியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் பிடியில் இருக்கின்ற மயிலிட்டிப் பிரதேசம் உள்ளிட்ட காணிகள் விடுவிக்கப்பட்டு அங்கு மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி இடம்பெயர்ந்துள்ள மக்களின் முகாம்களிற்குச் சென்று அவர்களுக்கு உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது மற்றும் அத்தகைய காணிகளை அடையாளப்படுத்துவது என்பன தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மயிலிட்டி உட்பட அதனைச் சூழவுள்ள பகுதிகளை பாதுகாப்புக் காரணங்களுக்காக விடுவிக்க முடியாதெனக் கூறி படையினர் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந் நிலையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களிடம் வந்த ஜனாதிபதி தங்களை சொந்த இடத்தில் குடியமர்த்துவார் என்று கூறியதை நம்பியே இத்தனை மாதகாலமாக பொறுமையாக இருந்த நிலையில் ஜனாதிபதியினால் தாம் தற்போது ஏமாற்றப்படப் போகிறோமோ என்று அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளையில் இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சரிடம் கேட்ட போது அவர் இது தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டை அறிந்து கொள்ள வேண்டுமென்று கூறியிருக்கின்றார். அத்தோடு அவ்வாறு காணிகளை விடுவிப்பதாகக் கூறிவிட்டு தற்போது விடுவிக்க முடியாதெனக் கூற முடியாதென்றும் அவ்வாறு விடுவிக்காமல் இருப்பதற்கு அவர்கள் கூறுகின்ற காரணங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மயிலிட்டி உட்பட அதனை அண்மித்த பகுதிகளிலிருந்தே கடந்த காலங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக இராணுவத்தினர் கூறுகின்றனர்.
அவ்வாறாயின் தற்போது யுத்தம் முடிவடைந்திருக்கின்ற நிலையில், அந்தக் காரணத்தை இனியும் கூறாது அந்தப் பகுதிகளை மக்களிடம் விடுவிக்க வேண்டும். கடந்த ஏழு வருடத்திற்கு முன்னர் விடுவிக்குமாறு கேட்டிருந்தால் அவர்கள் அதற்கு காரணங்களைக் கூறலாம். ஆனால் தற்போது அந்தக் காரணங்களைக் கூற முடியாது. தற்போது கூறுகின்ற காரணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தான் நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு வந்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவ்வாறு நிறைவேற்றாமல் மயிலிட்டி உட்பட மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படாவிட்டால் இங்கு தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மயிலிட்டி காணிகளை விடுவிக்க படை மறுப்பு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை; வடக்கு முதல்வர் தெரிவிப்பு -
Reviewed by Author
on
June 03, 2016
Rating:

No comments:
Post a Comment