கேப்டன் கூல் தோனியின் 7 அசத்தல் அவதார்! Happy Birth day Captain Cool
வெற்றி பெறும் ஆட்டங்களில் கடைசி நபராக நிற்பதும், தோல்விக்கு முதல் ஆளாக பொறுப்பேற்று பதிலளிப்பதும் இவரால் மட்டுமே முடியும், தனது குழந்தை பிறந்தும் ''ஐ யம் ஆன் நேஷனல் ட்யூட்டி'' என சொல்லி இரண்டு மாதம் கழித்து வந்து குழந்தையை பார்க்க ஒருவரால் முடியும் என்றால் அவரது பெயர் மஹேந்திரசிங் தோனி என்று இருக்க வேண்டும். இந்த 7ம் நம்பர் டி-ஷர்ட்காரரின் 7 அவதாரங்கள் ஆச்சர்யமளிப்பவை
பேட்ஸ்மேன்:
உலகமே கண்டு நடுங்கிய முதல் வரிசை ஆட்டக்காரர். மூன்றாவது வீரராக களமிறங்கி பந்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்கவிடும் அதிரடி ஆட்டக்காரர். அணியின் செயல்பாடு. இளம் வீரர்கள் நடுவரிசையில் திணறுவதால் தனது மூன்றாம் இடத்திலிருந்து கோலி, ரெய்னா, ரஹானே, ஜடேஜா என அனைவருக்கும் வாய்ப்பளித்து தன்னை ஆறு அல்லது ஏழாம் இடத்துக்கு மாற்றிக்கொண்ட பேட்ஸ்மேன். எந்த நிலைக்கு சென்றாலும் தனது சராசரியை 50க்கு மேலாக வைத்திருக்கும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். கடைசியாக சென்ற ஜிம்பாப்வே தொடரில் கூட 82 ரன்கள் அடித்தால் 9000 ரன்களை கடப்பார் என்ற போதும், ராகுலையும், ராயுடுவையும் அனுப்பி இந்தியாவுக்கு வெற்றி தேடி தந்தவர் தோனி.
விக்கெட் கீப்பர்:
இந்திய அணியில் நல்ல விக்கெட் கீப்பர்கள் வந்து போயினர். ஆனால் அவர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் கில்கிரிஸ்ட், தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர், இலங்கையின் சங்ககாரா போன்ற கீப்பர் பேட்ஸ்மேனை தேடி கொண்டிருந்த இந்திய அணிக்கு தோனி ஒரு வரப்பிரசாதம். கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டெம்புகளை சிதற விட்டு, பேட்ஸ்மேனை வெளியேற்றுவது தோனியின் ஸ்டைல். உலகின் மின்னல் வேக ஸ்டெம்பிங் சாதனை தோனியின் கைகளில். உலகின் அதி பயங்கர பேட்ஸ்மேன்களான கெயில், டிவில்லியர்ஸ் கூட தோனி கீப்பிங் செய்தால் கோட்டை தாண்டாமல் ஆடுவது தான் தோனியின் பவர்.
கேப்டன்:
கங்குலிக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன். கபில்தேவுக்கு பிறகு இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன். ஐசிசி போட்டிகளில் இவர் வெல்லாத கோப்பை என்று ஒன்று கிடையவே கிடையாது. டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வடிவிலான போட்டியிலும் இந்தியாவை ஒரே நேரத்தில் முதலிடத்துக்கு கொண்டு வந்த கேப்டன் தோனி மட்டுமே. களத்தில் அவர் எடுக்கும் முடிவுகளும், கண் காட்டும் திசையில் வீரர்கள் மாறி நிற்பதும் எந்த கேப்டனிடமும் இல்லாத தனி சிறப்பாகும். கோப்பையை பரசளிப்பு விழாவில் வாங்குவது மட்டும் தான் தோனியின் வேலை. பின்னர் அதனை அணியிடம் கொடுத்துவிட்டு கடைசியாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பது தோனி ஸ்டைல்.
தலைவன்:
தோனியை மேலாண்மை படிப்புகளோடு ஒப்பிடுவது எப்போதும் வழக்கம். அவரது தலைமை பண்பு என்பது களத்தில் அவ்வளவு உதவியாக இருக்கும் என்று சீனியர் வீரர்கள் சச்சின், கங்குலி துவங்கி இளம் வீரர்கள் கோலி,ரெய்னா வரை அனைவருமே கூறியுள்ளனர். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை தோனியை பார்த்து கற்றுக் கொள்ளலாம் அந்த அளவுக்கு தலைவன் தி மாஸ்.
ஃப்ரான்சைஸி:
கிரிக்கெட் மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தராமல் தடுக்கிறது என அனைவரும் கூறும் போது, ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில், சென்னையின் எஃப்சி அணியை வாங்கி, கால்பந்தையும் இந்தியாவில் வளர்க்க தோனி முன்வந்தது அவரை ஒரு ஃப்ரான்சைஸியாகவும் சென்னை மக்கள் மனதில் விசில் போட வைத்தது.
மிஸ்டர் எம்.பி.ஏ
பல மேலாண்மை தத்துவங்கள் தோனியோடு ஒத்துபோகும். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது அனைவரும் அதிர்ச்சியில் உறந்தனர். ஆனால் அதன் மூலம் தோனி கற்றுத்தந்த பாடங்கள் தற்போது இந்திய டெஸ்ட் அணியை ஒரு திடமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்திய அணிக்கு புதிய டெஸ்ட் கேப்டன், புதிய பயிற்சியாளர் என அனைவரும் மாறினாலும் இனி வெள்ளை உடையில் தோனி இல்லை என்றாலும், இந்திய டெஸ்ட் அணியின் செயல்பாடு எப்படி இருக்க வேன்டும் என ரோட் மேப் மீட்டிங்கில் தோனியின் ''சத்தர் செகண்ட்'' உரை அவரை மிஸ்டர் எம்.பி.ஏவாக பார்க்க வைக்கிறது.
மிஸ்டர் கூல்:
எல்லாவற்றுக்கும் மேலாக களத்தில் எந்த மாதிரியான சூழல் இருந்தாலும் சரி, வெற்றியோ, தோல்வியோ அனைத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ளும் தன்மை தோனியிடம் மட்டுமே உள்ளது. அதனால்தான் அவர் மிஸ்டர் கூலாகவே இருக்கிறார். டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் வெளியேறிய போது ஓய்வு பெறுவீர்களா என கேட்ட நிருபரை கலாய்த்த தோனி மிஸ்டர் கூல் பட்டத்துக்கு சரியான நபர்.
டிக்கெட் பரிசோதகர் முதல் இந்திய அணியின் தி பெஸ்ட் கேப்டன் வரை என தோனி எடுத்துள்ள அவதாரங்கள் ஆயிரம் அவரது வாழ்க்கையின் சில சுவாரஸ்யமான தருணங்கள், அவரது உச்சகட்ட ஃபார்ம் என அனைத்தும் இந்தியாவின் வெற்றியாக பதிவாகியுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 கேப்டன் 2019 உலகக் கோப்பையை வாங்கி யாரவது ஒரு புதுமுக வீரரின் கையில் கொடுத்துவிட்டு ஓரமாக போய் நின்று போஸ் கொடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
கேப்டன் கூல் தோனியின் 7 அசத்தல் அவதார்! Happy Birth day Captain Cool
Reviewed by Author
on
July 07, 2016
Rating:

No comments:
Post a Comment